Friday, September 15, 2017

பத்து பாசுர பலே ஆழ்வார் - 1



அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN

பத்து பாசுர பலே ஆழ்வார் - 1

அவர் ஒரு இனிய கரும்பு மனிதர். சாது விஷ்ணு பக்தர். அவர் எழுதியது ஒரு பத்தே பத்து பாசுரங்கள் தான். அமலனாதிபிரான் என்று பெயர் பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் இடம் பெற்றவை.

நிறைய எழுதினால் தான் புகழ் என்பது இல்லை. (நான் நிறைய நிறைய எழுதுகிறேன் இதில் எனக்கு என்ன புகழ்?. ஏதோ எனக்கு ஒரு ஆத்ம திருப்தி, அவ்வளவு தான்).

ஆனால் ஆழ்வார்கள் பாசுரங்களில் ''கடுகளவு ஆனாலும் கடலினும் பெரிது'' என்று திருக்குறள் போல் சுருக்கமாக இருந்தாலும் படிக்கும்போது அந்த வார்த்தைகளில் இருந்து அளவிடமுடியாத பக்தி ரசம் பொங்கித் ததும்புகிறது. இந்த பத்தே பாசுரங்கள் அவரைப் பாருள்ளவரை பரமனமடியார் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக பீடமேற்றி வைத்து விட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அனைத்தும் அரங்கன் மீதானவை. அவரைப் பற்றி ஒரு சுவாரசியமான கதை சொல்கிறேன் இப்போது.

பக்திக்கு முக்கியம் குலம் அல்ல என்று சைவ, வைணவ மதங்களில் நிறைய சான்றாக நாயன்மார்களும் ஆழ்வார்களும் உள்ளனர். அவருள் ஒருவர் தான் இந்த திருப்பாணாழ்வார். தாழ்ந்த குலம் என்று சிலரை வேற்றுமைப் படுத்திய காலம் ஒன்று உண்டு முற்காலத்தில். அதில் அந்த அவதிக்கு உள்ளானவர்களில் அவரும் ஒருவர்.

துரதிர்ஷ்ட வசமாக இத்தகையோர் அப்போது ஆலயங்களில் அனுமதிக்கப் படவில்லை. க்ஷேத்ரங்களில் நுழைய மறுக்கப் பட்டார்கள். நமது சரித்திரங்களில் சில மா மனிதர்களின் இயற்பெயர்கள் விடு பட்டுப் போய் விட்டன. . அவரவர் தொழில், உருவம், ஏதோ ஒரு அனுபவம் இதை வைத்தே பேர் நிலைத்து விட்டது. நன்றாக பாக்களை இயற்றியதால் திரு நாவுக்கரசர், வில்லிப்புத்தூரில் வாழ்ந்ததால் ஒரு வில்லிபுத்தூரார், தலையை ஓலை எழுதும் எழுத்தாணியால் நெருடிக்கொண்டே யோசித்து, தலை புண்ணாகி ஒருவர் சீத்தலை சாத்தனார். ஒரு குருடர் தோளில் அமர்ந்த முடவர் இருவருமே புலவர்கள் என்பதால் பேர் மறந்து போய் வெறும் இரட்டைப் புலவர்கள். இந்த ஆழ்வார் பெயரும் இப்படியே எத்தனையோவில் ஒரு உதாரணம்.


பண்ணிசைக்கும் இசைக் குடும்பத்தில் வந்தவர்கள் 'பாணர்கள்'. இந்த பாணர் ஆழ்ந்த பக்தியை பரமன் பால் வைத்ததால் பாண்+ஆழ்வார் . சிறந்த பக்தியை கொண்டதால் மரியாதையோடு '' திரு'' . மொத்தமாய் திருப் பாணாழ்வார்.

ஆழ்வார் ஸ்ரீ ரங்கத்தில் காவேரிக்கு தெற்குக் கரையில் வாழ்ந்தவர். அங்கிருந்தே சதா சர்வ காலமும் அரங்கன் திருக் கோயில் கோபுரத்தை மட்டுமே தரிசனம் செய்து வாழ்ந்தவர். கோவிலுக்குள் சேர்க்க மாட்டார்களே! ஆனால் அரங்கனை யார் தடுப்பார்கள்? ஆழ்வார் இருந்த திசையை நோக்கியே தெற்குப் பக்கத்தில் இருந்த இலங்கையை அரங்கன் பார்த்துக்கொண்டிருந்தான் என்று கூட சொல்லும்படியாக '' தென் திசை இலங்கை நோக்கியவாறு'' இருந்த பெம்மான் அல்லவா திருவரங்கன்..

எனவே ஆழ்வாரால் அதிகப்படியாக ஆற்றங்கரை வரை மட்டுமே செல்ல முடிந்தது. ஆற்றைக் கடந்து அக்கரையில் ஆலயமோ ஸ்ரீரங்கமோ அவரால் நுழைய முடியாததால் மனம் உருகி பரமனைப் பாடுவார். மனதிலேயே உருவாகி வாய் வரை வந்து வார்த்தையாக காற்றில் கலந்து, பிறகு மனதிலேயே புதைந்து விடும் அவை. அவரது பாசுரங்கள் காவிரி நதியின் குளிர்ந்த காற்றில் கலந்து மண மலர்கள் வாசம் தோய்ந்து ஆலயத்தில் புகுந்து அரங்கன் செவிக்குள் நுழைந்து அவன் அவருடைய பக்தியை பாசுரங்களாக அனுபவித்தான். .

அவர் இருந்த தெற்குப் பகுதியில் ஒரு வைணவ பக்தரும் இருந்தார். விஷ்ணு பிரியர். அவர் பெயர் லோக சாரங்க முனிவர். தினமும் அதிகாலை காவிரிக் கரையில் நின்று ஆலயம் தொழுது ஆற்றில் ஸ்நானம் செய்து நித்ய அனுஷ்டானங்கள் எல்லாம் முடித்து அரங்கன் ஆலயத்துக்கு அபிஷேகத்திற்கு காவேரி ஜலம் எடுத்து செல்வது அவர் வழக்கம்.

ஒருநாள் அவ்வாறே வழக்கம்போல் காலையில் ஸ்நானம் முடிக்க, அரங்கன் ஆலயத்துக்கு அபிஷேக ஜலம் எடுக்க வந்த லோக சாரங்கர் அங்கே ஆற்றின் கரையோரமாக நின்றவாறு திருப்பாணாழ்வார் கண்மூடி கை கூப்பி நின்று அரங்கனை வணங்குவதைக் கண்டார்.

''ஏய், யாரப்பா நீ, இங்கிருந்து தூரமாகப் போ. சுவாமிக்கு ஜலம் எடுத்துக் கொண்டு போகும் வழியில் நிற்கிறாயே. ''

''...............................''

வெகு தூரத்தில் ஆழ்வார் நின்றிருந்தாலும் லோக சாரங்கருக்கு அவரை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்ற கவலை வந்து விட்டது. உரக்க இவ்வாறு கத்தினார். ஆனால் திருப்பாணாழ்வார் தான் இந்த உலகத்திலேயே இல்லையே. அவர் தியானத்தில் மூழ்கி இருந்ததால் காதில் எதுவும் விழவில்லை. எனவே பதில் இல்லை.

என்ன செய்வது என்று யோசித்த லோக சாரங்கர் ஒரு கல்லை எடுத்து ஆழ்வார் மீது எறிந்தார். கூரான அந்த கல் சரியாக ஆழ்வார் நெற்றியில் பட்டு சிதறி ரத்தம் வடிய ஆரம்பித்தது. வலியாலும், தியானமும் சிதறியதாலும் மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தார் ஆழ்வார்.

அடுத்த நிமிஷமே புரிந்து விட்டது அவருக்கு. தன்னைக் கல்லால் தாக்கியதற்கு கோபம் வரவில்லையே.

''ச்சே என்ன தவறு இழைத்து விட்டேன்''. தான் ஏதோ பெரும் அபசாரம் செய்துவிட்டதாக உணர்ந்து வேகமாக அங்கிருந்து வெகுதூரம் நகர்ந்து சென்று விட்டார். லோக சாரங்கரும் திருப்தி அடைந்து, வழக்கம் போலவே தன்னுடைய நித்ய கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்து குடத்தில் ஜலத்தோடு கரை ஏறி அரங்கன் ஆலயத்துக்கு சென்றார்.

எங்கும் எதையும் எப்போதும் அறியும் அரங்கனுக்கு நடந்தது தெரியாமலா இருக்கும்? தன்னைக் காட்டிலும் தன் பக்தர்களைச் சிறந்தவர்களாக கொண்டாடுபவன் அல்லவா?. பக்தவத்சலன் என்ற பெயர் சும்மாவா?

லோக சாரங்கருக்கு அரங்கன் கட்டளை இட்டான். ''இங்கே நிற்காதே போ உடனே. என் பக்தன் திருப்பாணாழ்வானின் கால்களில் விழுந்து நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேள், அவரை என்னிடம் அழைத்து வா''

லோக சாரங்கர் லோகாயதமாக நடை முறையில் இருந்த வழக்கத்துக்குட்பட்டு தவறு செய்தார் என்பதைத் தவிர அவர் ஞானத்திலோ, பக்தியிலோ குறைந்தவர் இல்லையே. தான் செய்தது பெருந்தவறு என்று பெருமாளே சுட்டிக் காட்டி அதற்கு தக்க பிராயச்சித்தமும் செய்ய ஆணையிட்டவுடன் பதறினார். ஓடினார். தேடினார். எங்கே திருப்பாணாழ்வார்? எப்படியோ ஒருவாறு விசாரித்து பாணர்கள் ஒதுங்கி வாழும் பகுதிக்குள் விரைந்தார். திருப்பாணாழ்வார் வசித்த குடிசையைக் கண்டுபிடித்து வேகமாக உள்ளே நுழைந்தார்.

பகுதி வாழ் மக்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாமல் பிளந்த வாயுடன் சிலையாக நின்றார்கள். என்ன நடக்கிறது இங்கே? சிறந்த பிராமணோத்தமர் நம் பகுதியில் குடிசைகளிடையேவா??

திருப்பாணாழ்வரை அடையாளம் கண்டு அவர் கால்களில் விழுந்தார் லோக சாரங்கர். திகைத்தார் ஆழ்வார்.

''நான் செய்தது அபசாரம் சுவாமி என்னை மன்னியுங்கள் '' என்று லோக சாரங்கர் தனது காலை வேறு தொட்டதில் உடல் குலுங்கியது ஆழ்வாருக்கு. பேச்சு வரவில்லை, தலை சுற்றியது, கண்கள் இருண்டது. கால்கள் வலுவிழந்தன. நடுங்கிப் போய்விட்டார் ஆழ்வார்.

''எவ்வளவு பெரிய உயர்குல ஞானி நீங்கள், சுவாமி , இந்த பகுதிக்குள் வந்து, என் குடிசையில் நுழைந்து என் கால்களில் விழுந்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்பதா?'' இந்த பாபத்தை நான் எங்கே கொண்டு தொலைப்பேன்?'' திகைத்த ஆழ்வார் லோகசாரங்கரைப் பார்த்து மேலும் சொல்கிறார்:

''சுவாமி என்ன செய்கிறீர்கள் தாங்கள்? எனக்கு பெரும் பாபத்தை அளித்து விட்டீர்களே''.

'' இல்லை இல்லை, அடியேன் தான் சுவாமி பாபி. அரங்கன் உடனே என்னை இங்கே அனுப்பி நான் செய்த காரியத்துக்கு பிராயச்சித்தமாக இதை செய்யச் சொன்னான்'' என்று நடந்ததைக் கூறி அவரைக் கையோடு அரங்கனிடம் கூட்டிச் செல்ல அழைத்தார் லோக சாரங்கர்.

''ஐயோ, நான் அந்த புண்ய க்ஷேத்ரத்தில் காலைக் கூட வைக்க அருகதை இல்லாதவனா யிற்றே'' என்று அலறினார் ஆழ்வார். ஸ்ரீரங்கத்தில் நுழையவே மறுத்தார். விடுவாரா லோக சாரங்கர்?

அரங்கன் ஆணையை நிறைவேற்ற, ஆழ்வாரின் விருப்பத்துக்கும் செவி சாய்த்து (அதாவது புண்ய க்ஷேத்ரம் ஸ்ரீ ரங்கத்தில் தனது கால் படக்கூடாது, புனிதம் பாதிக்கப் படக்கூடாதே) இரண்டையும் நிறைவேற்ற ஆழ்வாரை தனது தோளிலேயே வாகனமாக அவரைச் சுமந்து ஆலயம் அடைந்தார் லோக சாரங்கர். இதனாலேயே திருப்பாணாழ்வா
ருக்கு ''முனி வாஹனர்'' என்றும் ஒரு பெயர் வைணவ சம்பிரதாயத்தில் உண்டு.

தனது மனத்திலேயே இது வரை கண்டு களித்த அரங்கனை ஆதி சேஷ நாக சயனனாக ஆழ்வார் கண் குளிர கண்டார். கண்ணை இமைக்க கூட விரும்பவில்லை. அந்த நேரத்தில் அவனைக் காண முடியாமல் போகுமே.கடல் மடையாக காவேரி வெள்ளத்தையும் விட வேகமாக நெஞ்சில் பக்தி பரவசம் பெருகி பாசுரமாக வெளி வந்தது தான் அமலனாதி பிரான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இந்த சிறிய காவியத்தைப் படிக்கும்போது முத்தாய்ப்பு வைத்தது போல் கடைசி பத்தாவது பாசுரத்தின் முடிவில் அருமையான ஒரு வாசகம் பொன்னெழுத்தில் பொறித்து வைத்திருக்கிறார் ஆழ்வார். ''என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே'' இதற்கு அர்த்தம் வேறு தேவையா? வேறு
யாருக்காவது இப்படி நினைக்கவாவது தோன்றியதா, தோன்றுமா'?''

பத்து பாசுரமும் அமிர்தம். முதல் பாசுரத்தில் விசேஷமாக அரங்கனைப் பாடவில்லை. திருமலையப்பனை. விரையார் பொழில் வேங்கடவனை, நினைந்து பாடுகிறார். வார்த்தைகள் விமரிசையாக விழுகின்றன. மற்றதெல்லாம் அரங்கத்தம்மான் மீதே. மூன்றாவதில் என்னவோ தெரியவில்லை வேங்கடவனில் ஆரம்பித்து அரங்கனில் முடிக்கிறார். நாராயணனை அரங்கனாகப் பார்த்தால் என்ன, வேங்கடவனாகப் பார்த்தால் என்ன, நின்றால் என்ன சயனித்தால் என்ன. இருவரும் ஒருவர் தானே. நாமே நிற்கிறோம், அமர்கிறோம், படுக்கிறோம். அவர் செய்யக்கூடாதா என்ன?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...