அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN
பத்தே பாசுர பலே ஆழ்வார் - 2
அமலனாதி பிரான்
சுத்தமான பக்திக்கு இலக்கணம் வேண்டாம். . ஜாதி மதம் இனம் குலம் பணம் பதவி படிப்பு எதுவுமே இரண்டாம் பக்ஷம். முதல் மார்க் பக்திக்கு மட்டுமே. காரணம் எதுவும் தேட வேண்டியதே இல்லை. . அடிமனதில் இருந்து பொங்கி வரும் உணர்ச்சிக்கு விளக்கம் கிடையாது. மனதில் எங்கோ ஒரு மூலையில் இல்லை. மனம் பூரா பொங்கி வழிந்து இதயத்தில் அந்த தெய்வத்தை நிலையாக நிறுத்தி ஸ்வானுபவத்தில் ஆழ்வது. அதற்கு இணை எதுவுமே இல்லை. அது எல்லா குறைகளையும் நிறைவு செய்துவிடும்.
முதல் முதலாக ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சந்நிதியில் நிற்கிறார் திருப்பாணாழ்வார். சொல்லொணா இன்பம் மனதில் பொங்கி வழிய கண்கள் ஆனந்த பாஷ்பத்தை ஆறாக பெருக வைக்கிறது. பார்க்கும் எதுவும் அரங்கனாகவும், கண்ணில் பட்ட இடம் எல்லாமே வைகுண்டமாகவும் தெரிகிறது. கோவிலுக்கு ரொம்ப தூரத்திலே மட்டுமே நிற்க தகுதியுள்ள என்னை, கோவிலுக்குள் அனுமதித்து, மேலும் தன் அருகிலேயே நின்று கண்ணார சேவிக்க அருள் செய்த அரங்கா. இது கனவா நினைவா? நிஜமா பொய்யா?
மனத்தில் உருவான பக்தி, பொங்கி எழுந்து பாசுரமாக எளிய தமிழில் தெள்ளிய நீரோடையாக தங்கு தடையின்றி வெளியே வருகிறது. பக்தி ப்ரவாஹம் அரங்கன் சந்நிதியிலிருந்து உருவாகி மெதுவாக நாதமுனிகளை அடைந்து அங்கிருந்து நிதானமாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்று ஆரம்பத்தில் சிறிதாக கங்கோத்ரியில் தோன்றி பெரும் கடலென கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கும் கங்கையென, பத்தே பத்து பாசுரங்கள் பல கோடி ஸ்ரீ வைஷ்ணவர்களில் நாவில் தங்கி அவர்கள் மனதை நிறப்புகிறதே . தங்கு தடையில்லாமல் மனதில் குடி கொள்கிறது.
திருமாலின் கமல பாதத்திலிருந்து துவங்கி திருப்பாணாழ்வார் மற்ற அங்கங்களின் அழகையும் அனுபவிக்கிறார். விவரிக்கிறார்.
பாதம், சிவந்த ஆடை, உந்தி, உதரம், மார்பு, கழுத்து, வாய், பெரிய கண்கள், நீலமேனி ("நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே") இவைகள் அனைத்தும் தன்னை ஆட்கொண்டதாக மிக நெருக்கமான கடவுளாகத் திருமாலைப் பாடுகிறார். 'நீண் மதில் அரங்கம்' என்கிற சொல் மூலம் அவர் பார்த்த ஸ்ரீ ரங்கம் அவர் காலத்தில் எப்படி இருந்தது என்று விவரிக்கிறார். திருவரங்கம் கோயிலில் நீண்ட மதில்கள் கட்டிய பிறகு வாழ்ந்தவர் என்பதைத் தவிர, பத்து பாடல்களே அவர் கண்ட திருவரங்கத்தையும், அவரது பரி பூரண பக்தியையும் அடையாளம் காட்டுகிறது.
1.அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன்நீள்மதிலன ரங்கத் தம்மான் திருக்
கமல பாதம் வந்தென் கண்ணினுள்ளன ஒக்கின்றதே.
ஆஹா இந்த இயற்கை சூழ் பொழில் விண்ணவர் கோன் திருவேங்கட மலையானின் கமல பாதங்கள் எப்போது என் கண்ணில் பட்டதோ அவை கண்ணை விட்டு அகலவில்லையே. திருவேங்கடவன் மலையும் சிலையும் குளுகுளு என்று உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சி ஊட்டுகிறதே.
2 .உவந்த உள்ளத்தனா யுலகமளந் தண்டமுற
நிவந்த நீள் முடியான், அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான்அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென சிந்தனையே.
சிவந்த ஆடை கண்ணைப் பறிக்கிறதே. உலகமளந்தவா, ராமனாகி அரக்கர்களை அழித்தவா, நீயே திருவரங்கத்தானாகி உன் சிவந்த ஆடையிலிருந்து என் சிந்தனையை வேறெங்கும் செல்லாது வைப்பவனே,
3 மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத் தரவின் அணையான்
அந்தி போல் நிரத்தடையுமதன் மேல் அயனைப் படைத்த தோரெழில்
உந்தி மேலதன்றோ அடிஎனுள்ளதின்னுயிரே,
குரங்குகள் தாவி களிக்கும் கனிகள் நிறைந்த மரங்கள் சூழ்ந்த ஏழு மலைகள் கொண்ட அரங்கா, நீயே வட வேங்கடவன், வானவர் தேவர் தொழும் அந்தி மாலை நிறத்தில் உன் ஆடையும், வயிறும் , ஆஹா அந்த வயிறு தானே படைக்கும் தொழில் பிரமனையே படைத்தது, அதன் மேல் வைத்த என் கண்ணை அகற்ற முடியவில்லையே, ஆனந்தம் பேரானந்தம் பெம்மானே.
4. சதுரமாமதில் சூழ் இலங்கைக் கிறைவன் தலைப் பத்து
உதிர வோட்டி , ஓர் வெங்கணை உய்த்தவன் ஒத வண்ணன்
மதுர மா வாண்டு பாட மாமயில் ஆட அ ரங்கத்தம்மான்,
திருவயிற்று தர பந்தன மென் நுள்ளத்துள் நின்று லகாகின்றதே.
ரங்கநாதா, பாம்பணை மேல் துயில் கொள்பவனே, ஞாபகம் வருகிறது. இலங்கையில் பத்து தலை ராவணனை கோதண்டத்தின் சரங்களால் கொன்றவனே, உன் வயிற்றில் உடுத்தியுள்ள ஆடைநிறம் அந்த ராவணன் சிந்திய செந்நிற ரத்தத்தை ஒத்து இருக்கிறதே. என்னுள்ளத்தில் பதிந்த உன் அழைக்ய மணி வயிற்றையும் அதில் என்று யசோதை கட்டிய மணிக் கயிற்றின் செந்நிறத்தையும் கூட மறக்க முடியுமா. உன்னை என் நெஞ்சை விட்டு அகல விடுவேனா. அரங்கா !
5"பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன்கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே"
என்ன ஆச்சர்யம், அரங்கநாதா, உன்னை தரிசித்த அக்கணமே என் பழவினைகள் அனைத்தும் நீங்கி விட்டது மட்டுமா. என்னையே வாரக் குத்தகை எடுத்து விட்டானே வட வேங்கடவன். , நான் என்ன தவம் செய்தேனோ, இப்பிறவியில் உன்னை இங்கே தரிசிக்க, உன் மார்பில் திரு. என் நெஞ்சிலோ திருமால் அரங்கா என்பேனா வேங்கடவா என்பேனா எது சொன்னாலும் நா இனிக்கிறதே. உன் திருமார்பு நினைக்க நினைக்க என்னை கட்டி இழுத்து உன் திருவடிகளில் கொண்டு சேர்த்து விட்டதே. என்னை ஆட்கொண்ட அரங்கா உன் நாமம் ஒன்றே அறிவேன் வேறொன்றறியேன் பராபரமே, பெரிய தவம் ஒன்றுமே தேவையில்லையே என் திரு அரங்கனை அடைய. முழு மனது ஒன்றே போதுமே.
6.துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய வப்பன்
அண்டரண்ட பகிரன்டத்தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டன் கண் டீர் அடியேனை உய்யக் கொண்டதே.
அரங்கா, நீ சிவன் துயர் தீர்த்தவன், அழகிய வண்டுகள் ரீங்காரம் செய்து திரண்டு வாழும் இயற்கை எழில் நிறைந்த பொழில்கள் கொண்ட அரங்க மாநகர் அப்பனே, அ ண்ட பகிரண்டம் அனைத்தையும் ஒரு வாய் மண்ணை உண்டு யசோதைக்கு காட்டியவன் அல்லவா நீ. மண்ணை உண்ட மாதவா, விண்ணை அளந்தவனே. அன்பர்களே இம்மாயனை கண்டீர்களா, , சரண் அடைந்த அடியேன் என்னை, ஆட்கொண்டு விட்ட அதிசயத்தையும் கண்டீர்களா..
7.கையினார் சுரி சங்கண லாழியர் நீள்வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
ஐயனார் அணியரங்கனார் அரவின் அணை மிசை மேய மாயனார்
செய்யவா யையோ!என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
ஆஹா, என்ன சொல்வேன், ஐயோ வார்த்தை வரவில்லையே, ஆதிசேஷன்மேல் நீண்ட பெரு மலை போல் பள்ளிகொண்ட திருமலை அப்பனை, அரங்கநாதா, உன் செவ்வாய்... அதில் தானே பாஞ்சஜன்யத்தை வைத்து சப்தித்தாய். அதன் ஒலியில் தீயவர் நடுங்க நல்லோர் வாழ அருளியவா, கம் மென்று துளசி மண ம் மலாய் நெஞ்சில் புரள நீண்ட அழகிய கரு நிற முடி காற்றில் அசைய என் மனமெல்லாம் உன்னையே நாடி அடிமைப்பட்டு நிற்கிறதே. இனி எனக்கு என்று ஒரு தனியாக ஒரு மனமில்லை அப்பனே . என்றோ நீ தான் அதை நீ எடுத்துக் கொண்டுவிட்டாயே. பாம்பணை மேல் பள்ளி கொண்ட பரமனே!
8.பரியன் ஆகி வந்த அவுண நுடல்கீந்த அமரர்க்கு
அரிய ஆதி பிரான்அரங்கத்தமலன் முகத்து
கரிய வாகிப் புடைப் பாரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
ஆமாம். நீ தான் அந்த நரசிம்ஹன். கருணை வடிவானவனாக இருந்தும் கொடும் கோபம் கொண்டவனாகி அவுணனான இரணியனை மடிமே கிடத்தி மார்பை பிளந்து நகத்தால் வதம் செய்தவன். அவனா நீ ? கண்களில் கருணை பெருகி புன்னகை மிளிர் பெரிய வாய், அழகிய தாமரைச் செங்கண் கொண்டு என் நெஞ்சை பறித்த அந்த கண்களின் காந்த சக்தியில் மனமிழந்தேனே, மதி மயங்கச் செய்து விட்டாயே . எனக்கென்று இனி ஒரு மனமில்லையே . உன் அடிமையாகி உன் திருவடிகளில் ஆனந்தமாக இனிமையுடன் உன்னை பணிய வைத்தாயே. என்ன பேறு பெற்றவன் நான். இனி நான் நான் இல்லை. உன்னில் ஒரு துகள்.
9 ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞால மேழு முண்டான் அரங்கத் தரவின் அணை யான்
கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில்
நீல மேனி யையோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே!
மார்கண்டேய ரிஷி சொன்ன பிரளய காலத்தில் நீ ஒரு சிறு குழந்தையாக, ஆலிலை மேல் கால் விரல் சூப்பி, ''வட பத்ர சாயி' யாக, பிரபஞ்சம் மீண்டும் உயிர்களும் துளிர்க்க செய்தவன். மா பெரும் பாம்பனை கொண்ட மாயவனே, நீ சிறு ஆலிலைமேல் அழகுற வட பத்ர சாயீயாக உள்ளம் கவர்ந்த உத்தமா. உன் அழகுக்கு அழகாக மார்பில் துவளும் , முத்துமாலையும், மணி ஆரங்களும், ஈடு இணையற்ற உன் நீலத்திரு மேனியும். அடடா உன் திரு அழகை , வடிவை, என்ன சொல்வேன், எப்படி சொல்வேன். என் நெஞ்சை விட்டகல வில்லையே. நிறைந்து நின்று என்னை பேரானந்த மடை யச் செய்தனவே .
10."கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே."
அடே, வெண்ணை திருடா, வாயில் இருக்கும் வெண்ணை உன்னை காட்டிக்கொடுத்துவிட்டதே, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறதே. ''வெண்ணையா, தெரியாதே, நான் பார்க்கவே இல்லையே'' என்று உன் தலை ஆட்டி நீ சொன்னாலும் உன் இதழ் ஓரம், உன் கரிய கன்னத்தில் வெள்ளை நிறத்தில் சிறு சிறு வெண்ணைத் துளிகள் உன் திருட்டைக் காட்டிக் கொடுத்த பேரழகை யசோதை மட்டுமா கண்டாள் ஆஹா, தேவாதி தேவா, என் அமுதமே, நீல மேக ஸ்யாமளா, கண் மூடி நின்றாலும் நெஞ்சில் உன் திரு வழகு என்னை அடிமை கொண்டதே. உன் அழகை பருகிய என் கண்கள் இனி வேறெதையுமே காணபோவதில்லை, முடியாதே, என் கண்ணை உன்னிடமிருந்து எடுத்தால் தானே அதெல்லாம்... கண்ணா நீயே என் கண்ணாகி, கண்ணனாகி ய பின் வேறென்ன இருக்கிறது காண ?
இந்தக் கடைசி பாசுரம் பாடிய திருப்பாணாழ்வார் திரும்பி லோகசாரங்கர் தோள் மீது ஏறி ஸ்ரீ ரங்கம் திரும்பவில்லை. அதற்கு தான் அவசியமில்லையே, அங்கேயே அப்போதே அரங்கனோடு ஒருங்கிணைந்து இரண்டறக் கலந்தபின் நம் நெஞ்சிலே அல்லவோ ஆழ்வார் அமலனாதி ''பிரானாகி'' விட்டார் .
No comments:
Post a Comment