''கிரிதர கோபாலா...!' J.K. SIVAN '
''சுவாமி, மற்றவர்கள் தரும் தொல்லையினால் என் கிரிதாரியை என்னால் கைவிட முடியாது. வீட்டில் தொடர்ந்து எனது பக்தி வழிபாட்டை தொடரவும் வழியின்றி கஷ்டமாக இருக்கிறது. அதை விடவும் மனமில்லை. கிரிதாரி என் உயிர் மூச்சு. என்னை அடிமைப் படுத்தியவன். என்னால் அவனை ஒருகணமும் பிரியமுடியாதே.''
"அம்மா, மீரா, எனக்கு தோன்றுவது ஒரே வழி, உன்னுடைய நெருங்கிய உறவுக்காரர்கள் என்றாலும் நீ ராமனையும் ஸ்யாமனையும் தொழாதவர்களை விட்டு பிரிவது தான். இப்படித்தான் பிரஹலாதன் அப்பா அம்மா வேண்டாம் என்றான். விபீஷணன் அருமை அண்ணனை பிரிந்தான். பரதன் பெற்ற தாயே வேண்டாம் என்றவன். மஹாபலி குரு சுக்ராச்சாரியார் வார்த்தையை கேட்க மறுத்தான். ஏன், வ்ரஜ பூமி கோபியர்கள் என்ன செய்தார்கள் என்று உனக்கு தான் தெரியுமே. வீடாவது, புருஷனாவது, குடும்பமாவது என்று கிருஷ்ணன் பின்னால் ஓடவில்லையா? இறைவனோடு உறவும் அன்பும் ஒன்று தான் சாஸ்வதம், சந்தோஷம் தருவது'' என்று பதிலளித்தார் துளசிதாசர்.
மீரா யோசித்தாள் . ரைதாஸ் ஞாபகம் தான் வந்தது. அவளது நம்பிக்கைக்கு பாத்திரமான குரு, 118 வயதான ரிஷி. அவரைத்தேடி சென்றாள். பரம ஏழைகளின் குடிசைகள் உள்ள இடத்தில் அவரோடு கிருஷ்ண கான பஜனைகள் செய்தாள். அவள் பாடல்களில் இந்த எளிமைக் கோலம் நிரம்பியது. மனதை உருக்கியது.
மீரா இப்படி ரைதாஸுடன் ஊர் ஊராக சென்று கிருஷ்ண கோகில கானம் பொழிவது நாட்டையாண்ட முகலாய சக்ரவர்த்தி அக்பர் காதுக்கும் எட்டியது.
ஒருநாள் அக்பரின் நண்பன் சிறந்த கவிஞன் பாடகன் தான்சேன் ஒரு உருக்கமான பாடல் பாடி அது அக்பருக்கு மனதை பிழிய
''தான்சேன் நீ எப்போது இந்த பாடலை இயற்றினாய்? என் மனம் கவர்ந்து விட்டதே நீ பாடியது.என் நெஞ்சை உருக்கிவிட்டாயே''
''பிரபு இது என் பாட்டல்ல, நான் கேள்விப்பட்ட ஒரு மேவார் ராணி துறவறம் பூண்டு பாடிய கிருஷ்ண கான பாடல்களில் ஒன்று.''
''புறப்படு தான்சேன் நாம் இருவரும் இப்போதே சித்தூருக்கு மாறுவேடத்தில் செல்வோம். மீரா பாடுவதை நேரில் கேட்கவேண்டும் எனக்கு '' என்கிறார் அக்பர்.
எண்ணற்ற பக்தர்களில் இருவர் மீராவின் கிரிதாரி கோவிலில் அவளது தெய்வீக பஜனைகளை வெகு நேரம் ரசித்து அனுபவித்துவிட்டு மெதுவாக அவள் அருகே சென்று கிரிதாரி விக்ரஹம் எதிரே தனது விலையுயர்ந்த நவரத்ன மாலையை அக்பர் அர்ப்பணிக்கிறான்.
ஒற்றர்கள் மூலம் அக்பர் மாறுவேடத்தில் வந்து தனது மனைவி மீராவை சந்தித்து விலையுயர்ந்த நவரத்ன மாலையை பரிசளித்தது அவள் கணவன் மேவார் ராணாவுக்கு தெரிந்து விட்டது. தீ உமிழும் கோபம்.
''என் முன் நிற்காதே. உன்னால் என் ராஜ்யத்துக்கு, ராஜ குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானம் போதும். யமுனையில் மூழ்கி செத்து தொலை '' என்று கத்துகிறான்.
தாங்கமுடியாத துக்கத்தோடு, கண்களில் பிரவாகமாக கண்ணீர் பெறுக மீரா யமுனைக்கு சென்று, நீரில் இறங்குகிறாள். ''யமுனா மாதா, இது தான் என் கடைசி ஸ்நானம் 'கோவிந்தா, கிரிதாரி, கோபாலா' உன் திருவடி அடைய அருள் புரிவாயா?
வெள்ளம் பெருகி ஓ வென்று நுங்கும் நுரையுமாக ஓடும் யமுனை, மீராவை அலாக்காக தூக்கி சென்று விட்டாள். இனி மரணம் அவளை யமுனையோடு இணைக்கட்டும். இரு கரம் கூப்பி மீரா ஆழத்துக்கு சென்றுவிட்டாள்,
''என்ன ஆச்சர்யம் இது? யார் என் இடுப்பை பிடித்து அணைத்து தூக்கி மேலே கொண்டுவருவது?''.
அதிர்ச்சியும் அதிசயமும் கலக்க மீரா திரும்பி பார்த்தாள் ...அதற்குள் மயக்கம் அவளை ஆட்கொண்டது. மெல்ல கண் திறந்தாள்..... அட காப்பாற்றியது என் கிரிதாரியா?.
"என் அன்பு மீரா, இது உனக்கு மறுபிறவி.. உன் உறவுகள் அற்றுப் போய்விட்டது. நீ சுதந்திரமானவள் இனி. உற்சாகமாக புறப்படு. இனி நீ எப்போதும் என்றும் என்னோடு தான்.''
கொதிக்கும் ராஜஸ்தான் பாலைவன சுடு மணலில் வெறும் காலோடு மீரா நடந்தாள். உள்ளம் தான் குளிர்ந்துவிட்டதே. பாடிக்கொண்டே பிருந்தாவனம் நடந்தாள். அங்கே உஞ்ச விருத்தி எடுத்துக்கொண்டு வரும் ரை தாஸை மீண்டும் சந்தித்து வணங்குகிறாள். அந்த இடம் இன்று கோவிந்த மந்திர் என்று பெயர் பெற்று யாத்ரிகள் மனமகிழ்ந்து தரிசிக்கும் க்ஷேத்ரமாகிவிட்டது.
கணவன் மேவார் ராணா கும்பா மனம் திருந்தி மீராவின் புனித கிருஷ்ண பக்தியை புரிந்து கொள்கிறான். பிருந்தாவனத்துக்கு வந்து ''மீரா, என்னை மன்னித்துவிடு அம்மா. வா என்னோடு ராணியாக சிம்மாச னத்தில் அமர்ந்து என்னை மகிழ்வி '' என்று கெஞ்சுகிறான்.
''சுவாமி, கிருஷ்ணன் ஒருவனே ராஜா, என் உடல் உயிர் இரண்டும் அவனுக்கே சொந்தம். நான் அவன் அடிமை, சேவகி. நீங்கள் போகலாம்''
மனம் மாறிய ராணா கண்கள் பனிக்க அவளை வணங்கி செல்கிறான்.
பிருந்தாவனத்தில் வைஷ்ணவ மஹா ஜனங்களுக்கு தலைவர் ஜீவ கோஸ்வாமி. மீரா அவரை தரிசிக்க செல்கிறாள்.
''நில்லுங்கள் . உள்ளே செல்ல முடியாது. யார் நீங்கள்?
''ஐயா, ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மஹராஜ் அவர்களை தரிசிக்க வந்துள்ளேன்''
உள்ளே சென்று வந்த காவலன், ''அம்மா குருநாதர் பெண்களை சந்திக்க மாட்டாராம். எனவே நீங்கள் அவரை தரிசிக்க முடியாது'' என்கிறான்.
மீரா பதிலளிப்பது உள்ளே கோஸ்வாமியின் செவியில் பளார் என்று விழுகிறது ''ஐயா, பிருந்தாவனத்தில் எல்லோருமே பெண்கள் தான். கோபியர் தான், கிரிதர கோபாலன் ஒருவனே புருஷன் என்று தான் தெரியும். இன்று தான் இன்னொரு புருஷனும் இங்கே பிருந்தாவனத்தில் இருக்கிறார் என்று அறிகிறேன்''
ஜீவ கோஸ்வாமி ஓடி வருகிறார் வெளியே. அப்படியே. மீராவின் திருவடிகளில் விழுகிறார். தவறு புரிகிறது. இந்த சம்பவம் எங்கும் பரவி மீராவின் புகழ் எட்டு திசையிலும் வியாபிக்கிறது.
ராணா கும்பாவின் வேண்டுகோளுக்கு இணங்கி மேவார் செல்கிறாள் மீரா. அரண்மனைக்கு அல்ல. கிரிதாரியின் ஆலயத்துக்கு. பக்தர்கள் புடைசூழ சிறிது காலம் சென்றபின் மீண்டும் பிரிந்தாவன் அடைகிறாள். பிறகு துவாரகா செல்கிறாள்.
துவாரகையில் அன்று கிருஷ்ணஜெயந்தி. எங்கும் கோலாகலம், பரவசம். மீராவின் விஜயம் குதூகலத்தை வியாபிக்க செய்கிறது. கண்களை மூடி மனம் ஒருமித்து இதயம் இணைந்து, மீராவின் ஒருகையில் தம்புரா, மற்றொன்றில் சிப்லா. அவளது கிருஷ்ண கான பஜனை எங்கும் எதிரொலிக்கிறது. எதிரே துவாரகா நாதன் அற்புதமாக சுவைக்கிறான். ''மேரே ஜென்ம மரண கே ஸாதி '' என் ஜீவ மரண தோழா'' ..... காற்றில் அமிர்தமாக அவள் தெய்வீக குரல் கலக்கிறது.
''மீரா என்னோடு வந்துவிடேன் '' ராணா கும்பா மீண்டும் கெஞ்சுகிறான்.
''மஹாராஜா, என் உடல் உங்களுடையது. என் மனம், இதயம், ஆத்மா, ஜீவன் எல்லாமே கிரிதாரி ஒருவனுக்கே சொந்தம்'' கும்பா அவளோடு சேர்ந்து பஜனை செய்கிறான்.
'' மீரா வா......''
''ஆ! என் கிரிதாரி உன் குரலுக்கு தான் காத்திருந்தேன். இதோ ஓடோடி வருகிறேன்''.. மீரா தட்டு தடுமாறி துவாரகா நாதன் சந்நிதிக்கு ஓடுகிறாள். மின்னல் கண்ணை பளிச்சிடுகிறது. ஜோ என்று மழை எங்கிருந்தோ வந்து திடீரென்று பொழிகிறது. பலமான காற்று கதவுகளை படார் என்று சாத்துகிறது. மீரா தான் உள்ளே சென்றுவிட்டாளே. காற்று, மின்னல், மழை, எல்லாம் சற்று நேரத்தில் ஓய்ந்து கதவு திறந்தது.
உள்ளே.... மீராவின் ஆடையை தன் மேல் சுமந்து நின்றான் துவாரகா நாதன். மீரா எங்கே ?? மீராவின் குரல் கண்ணன் வேணுகானத்தோடு இணைந்து விட்டதே. மேவார் ராணா கும்பாவும் ஏனைய பக்தர்களும் சிலையாகி நின்றனர்.
மேவார் ராணிகள் எத்தனையோ ஆயிரம் பேர். அவர்கள் யார் என்று நமக்கு தெரியுமா?ஏன் மீராவை மட்டும் மறக்க முடியவில்லை? அழகாலா? பாடல்களை இயற்றிய கவி என்பதாலா? இல்லை இல்லை. தன்னையே முழுதும், உள்ளும் புறமும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணித்த ஜீவன் என்பதால்....கிருஷ்ணன் உள்ளவரை மீராவும் நினைவில் வாழ்வாள். இப்படி ஒரு பரிபூரண பிரேம பக்தையை ஆண்டாளிடம் ராதையிடம் மட்டுமே காண்கிறோம்.
No comments:
Post a Comment