யாத்ரா விபரம் -- J.K. SIVAN
வீழிநாதர்.
ஆதி விநாயகரை யானைத் தலை இல்லாமல் பார்த்த பிறகு தில தர்ப்பண புரியை விட்டு திருவீழி மிழலை சிவன் ஆலயம் நோக்கி ஸ்ரீனிவாசன் காரை செலுத்தினார். கிட்டத்தட்ட பத்து கி.மீ. தூரம் தான். அங்கு ரெண்டு அதிசயங்கள். ஒன்று திருவீழிநாதர் ஆலயம், மற்றொன்று ஸ்ரீ குருபிரசாத் , உயர்ந்த நோக்கம் எண்ணங்கள் கொண்ட பரோபகார மனிதர். அவரது கோ ரக்ஷண சமிதி நிறுவனம். நிறைய பசுக்கள், அவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ பொருள்கள். நாட்டு மருந்து மூலிகை செடிகள், மூலிகை உணவுகள், மனித உழைப்பிலேயே அனைத்தும் செய்ய முடியும் என்று சாதிக்கும் காரியங்கள். அதை எல்லாம் நிர்வாகம் செய்ய திறமை மிக்க ஒரு சிலர். குரு பிரசாத் சாமர்த்தியக்காரர். யாரிடம் என்ன திறமை இருக்கிறது, அதை எந்தவிதத்தில் நல்ல உழைப்பாக்கி பயன் பெறமுடியும் என்று அவர்களுக்கு வழிக்காட்டி உதவி பெறுபவர்.
அவர் வீட்டுக்கு சென்றபோது ஏதோ ஒரு மகாராஜாவின் அரண்மனையில் இருப்பது போல் ஒரு பிரமை தோன்றியது. வீடு முழுதும் சுற்றிப்பார்க்க ஒரு சைக்கிள் அவசியம் தேவை.
அவரைப்பற்றி ஒரு பாரா போதாது, ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு நிறைய விஷயங்கள் ருசிகரமான இருக்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் தனியாக அவரைப் பற்றி எழுதுகிறேன்.
திருவீழிமிழலை ஒரு பெரிய சிவாலயத்தை ஆயிரம் வருஷங்களுக்கு முன்பாகவே பெற்றிருக்கிறது. மூலவர் வீழிநாதர்.
இந்த ஊர் பற்றிய சில புராண கதைகள் ஒருவரியில். காத்யாயன ரிஷியும் அவர் பத்னியும் தவமிருந்து பார்வதி பெண்ணாக பிறந்து அவளை சிவனுக்கே மணமுடிக்க வேண்டி, சிவன் மாப்பிள்ளை கோலத்தில் இங்கே காசியாத்திரை கிளம்ப, சிவனுக்கு மாப்பிள்ளைஸ்வாமி என்று பெயரோடு, கோவிலில் பந்தக்கால் கூட இருக்கிறது. மூலவருக்குள்ள பெயர்கள், வீழிநாதர், வீழிஅழகர், நேத்ரபாணேஸ்வரர், அம்பாள் பிருஹத் சுந்தர குஜாம்பாள் , அழகிய வண் முலையம்மை , காத்யாயனி.
சந்தனம்,செண்பகம், பல, விளா ,மரங்கள் காடாக இருந்து அனைத்துக்கும் வீழி என்று பெயர் என்றும் மிழலைக் குறும்பன் என்ற சிவ பக்த வேடன் சிவனுக்கு ஒரு விளாம்பழத்தை நைவேத்தியமாக அளித்ததால் இந்த க்ஷேத்ரம் திரு வீழிமிழலை என்று பெயர் பெற்றதும் இங்கே விளாம்பழம் மூலவரின் காலின் கீழே காண்பதும் ருசிகர சமாச்சாரம்.
எங்கும் பஞ்சம் வந்தபோது ஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் உணவுப்பொருள் வாங்கி அனைவருக்கும் வழங்க ஈசன் பொற்காசு படி அளந்து வழங்கியதும் இங்கே தான். படிக்காசு வழங்கிய பீடம் இன்றும் இருக்கிறது.
பெரிய வௌவால் நெருங்காத மண்டபம் ஒன்று காணப்பட்டது. இருட்டில் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.
தரிசனம் முடிந்து குருப்ரசாத் வீட்டில் ஊஞ்சலில் ஆடி விட்டு திருவீழிமிழலை FB நண்பர் டாக்டர் சுப்ரமணியன் என்னை குரு பிரசாத் வீட்டுக்கு வந்திருந்தார். இருவரும் ஏற்கனவே நண்பர்கள். ஊர் விவகாரங்கள் பேசினோம்.
சுடசுட உப்புமா கொடுத்தார்கள். சாப்பிட்டு விட்டு ஒரு சுகமான அறையில் அன்று இரவு தூங்கியபோது கனவில் கலர் கலராக அந்த மாளிகையில் நான் கண்ட அழகிய ஓவியங்கள் காட்சிப் பொருள்கள், சோபா நாற்காலி மேஜைகள், நவீன வசதிகள் கொண்ட விருந்தினர் அறைகள், சுவர் அலங்காரங்கள், அழகிய மூலிகை செடிகள், சூரிய ஒளி மின்சார அமைப்புகள், ஒளி மயமான பிருந்தாவன கிருஷ்ணன் பொம்மைகள், நந்தவனங்கள், அவரது கோரக்ஷணா பசுக்கள், கன்றுகள், என்னை ஆட்டும் செக்கு, நெல் அரைக்கும் இயந்திரம் பெரிய பெரிய அரிசி குதிர் கள், இன்னும் என்னென்னவோ வினோத விசித்திர பொருள்கள், எண்ணத் திரையில் சினிமா காட்சிகளாக ஓடியது.
அடுத்த நாள் காலை காபி அருந்தி விட்டு பயணம் தொடர்ந்தோம்.
ஆலய டெலிபோன்: 91 4366273050/9443924825
No comments:
Post a Comment