Sunday, September 24, 2017

ஒரு பழைய நினைவு (மறு பதிவு)




NOSTALGIA - J.K. SIVAN


ஒரு பழைய நினைவு (மறு பதிவு)

என்னை மாதிரி பெரிசுகளுக்கு ஒரு பழக்கம். பழைய சமாச்சாரங்கள் மட்டுமே ஞாபகம் நன்றாக இருக்கும். இப்போதுநடப்பது மறந்து போகும். பேர், விலாசம் கூட மறந்து போய்விடும். ரொம்ப ஆபத்தான நிலை இது. எனக்கே ஒரு தடவை என் வீடு மறந்து போய் ரெண்டு தெரு தாண்டி ஒரு வீட்டு வாசலில் என் ஸ்கோஒன்டர் நின்ற போது ''அட இது என்ன அதிசயம் நான் பேங்க் போகும்போது வீட்டு வாசலில் பூச்செட்டி தொட்டிகள் இல்லையே, மேலே இது என்ன பால்கனி நானே இதுவரை அதை பார்த்ததில்லையே என்று அதிசயித்தேன். அடுத்த சில வினாடிகளில் என் தவறு புரிந்தது வாசலில் கோதண்டபாணி என்று போட்டிருந்தது. என் பெயர் அது இல்லையே. என் பேர் என் வீட்டு வாசலில் இருந்ததே. அடுத்த கணமே நினைவு நன்றாக வந்துவிட்டது. வீடு வந்து சேர்ந்தேன்.

இப்படி ஒரு சில வயதானதுகள் ஈரத்துண்டை முதுகில் போட்டுக்கொண்டு ஒரு மூலையில் பழசை நினைப்பது சாதாரணமாக நடப்பது. வயசானாலே, பழசெல்லாம் தான் ஞாபகம் இருக்கும். வீட்டு அட்ரஸ் மறந்து போகும். தெருவில் போனால் எங்கே எதற்காக கிளம்பினான் என்பது கூட அடிக்கடி புரியாது. அதற்காக தான் எல்லா பெருசுகளும் பாக்கெட்டில் ஒரு நோட்டில், அட்டையில், பெயர், விலாசம் தொலை பேசி எண் எல்லாம் எழுதி வைத்திருக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்கிறேன்.

இது நான் ஒரு வருஷத்துக்கு முன்னாலே எழுதினது. யாரோ இது பரணீதரன் எழுதியதா? சுஜாதாவுதா? நாடோடி எழுதியதா? என்றெல்லாம் கேட்டால் அதற்கு ஒரே பதில். நான் அவ்வளவு பெரிய எழுத்தாளர்கள் இல்லை சார் என்பது தான்.

''சாப்பிடாமல் இருக்க முடியவில்லையே. எவ்வளவு தான் வயிறு புடைக்க திருப்தியாக சாப்பிட்டாலும் ரெண்டு மூணு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பசி எடுக்கிறதே. ஏன் கடவுள் இந்தமாதிரி ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கிறான் என்று அங்கலாய்த்துக் கொள்வார் என் ஆரம்ப பள்ளிக்கூட வாத்யார் ஹெட்மாஸ்டர், வாச்மன் எல்லாமே அவர்தான் ஆன சுப்ரமணிய அய்யர்.

அவர் எனக்கு 3ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாத்தியார். சூளைமேடு அப்போதெல்லாம் அபிவிருத்தி அடையவில்லை. அந்த வீதியில் கங்கையம்மன் கோயில் ஒரு பெரிய புற்றுக் கோயிலாக மட்டுமே இருந்தது. அடர்ந்து பரந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் பிரம்மாண்டமாக ஒரு புற்று. தினமும் அதில் பால் ஊற்ற பெண்கள் வருவார்கள். சமீபத்தில் அங்கு சென்றபோது அடையாளமே தெரியவில்லை. அந்த புற்றுக்கோயில் சிறிது சிறிதாக கட்டிடம் பெற்று பெரிய கோயிலாகி விட்டது. ஒரு நாள் கங்கை அம்மன் கோவில் வாசலில் பரீட்சைக்கு போவதற்கு முன்னால் நின்று வேண்டிக்கொண்டிருந்தேன். பூசாரி எனக்கு குங்குமம் விட்டுவிட்டார். முதுகில் அரித்தது. என்னவென்று தெரியவில்லை. அப்போது பக்கத்தில் இருந்த ஒரு அம்மாள் ''டே பையா உடனே சட்டையை கழட்டு என்றாள். அலறினாள். என்னவோ ஏதோ என்று சட்டையை கழட்டினேன். ஒரு பெரிய தேள். கோவில் சுவற்றை ஒட்டிய வெப்பமரத்திலிருந்து கால் தவறியோ வேண்டுமென்றோ என் முதுகு பை மேல் விழுந்து சட்டைக்குள் இறங்கி என் முதுகில் நடை பழகியிருக்கிறது. அதுதான் எனக்கு குறுகுறு. நல்லவேளை அந்த பெண்மணி கிருபையால் அதை வெளியேற்றி தப்பித்தேன். கங்கையம்மனோ?

சுப்ரமணிய அய்யர் பள்ளிக்கூடத்தில் காணாத போது இந்த கோவிலில் பூஜை பண்ணுவார். அவரிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அது ஒரு வேடிக்கையான வாகனம். பின்னால் காரியர் கிடையாது, மட்கார்ட் பா தி உடைந்திருக்கும். துருப்பிடித்த அந்த சைக்கிள், மணியோ எண்ணெய் விளக்கோ, இன்றி துரு மஞ்சளும் சற்று அங்கங்கு கருப்பாக ஒரு வாலில்லாத டாபர்மன் நாய் மாதிரி இருக்கும்.

ஐந்தடிக்குள் உயரம். கச்சலாக மொட்டைத்தலையோடு மொட்டைக்காலர் அரைக் கை கதர் ஜிப்பா -- பூர்வ ஜன்மத்தில் வெள்ளையாய் அவதரித்து காலப்போக்கில் கிணற்றுத் தண்ணீரில் அவரே தோய்த்து கிட்டத்தட்ட காவியாக சன்யாசம் பூண்டது. இடுப்பில் பஞ்ச கச்சம், அதுவும் அதே பழுப்பு நிறம் யூனிபார்ம் மாதிரி. கழுத்தில் ஒத்தை ருத்ராக்ஷம், மோட்டு நெற்றியில் பட்டை விபூதி. 32ல் எஞ்சிய ஏழோ எட்டோ பற்கள். எப்போதும் சிரிப்பு. கண்ணில் எப்போதும் பசி தெரியும். வகுப்பில் பாடத்தை காட்டிலும் வம்பு தான் அதிகம். சரஸிஜனாப சோதரி என்று பாடுவார்.

எந்த வீட்டுக் கல்யாணமாக இருந்தாலும் அவர் சாப்பாட்டில் கலந்து கொள்வார். நாங்கள் படித்த கார்ப்பரேஷன் பள்ளிக்கூடம் அப்போது ரெண்டு கூரைக் கட்டிடங்களாகத் தான் இருந்தது. தூங்கு மூஞ்சி மரம் என்றும் புன்னை மரம் என்றும் சில அதில்நிழல் தந்து அதன் அடியில் தான் எங்கள் வகுப்புகள் நடக்கும்.

சூளைமேடு தெரு வடக்கே கூவம் ஆற்றங்கரையோடு நின்று போகும். தண்ணீர் கொஞ்சமாகத்தான் ஓடும். குறுக்கே அதன் மேல் ஒரு பாலம். அதில் தான் நடந்து அக்கரை செல்லவேண்டும். கிழக்கே ஒரு இடுகாடு. என் தங்கையை அதில் தான் புதைத்தார்கள் என்பது ஞாபகம் இருக்கிறது.

அதை ஒட்டி ஒரு பெரிய பாதிரியார் நடத்திய லயோலா காலேஜ். பாதிரியார் ஒரு பெரிய மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அதற்கு எலி,பெருச்சாளி முயல் எல்லாம் ஆகாரமாக கிடைக்கும். அதன் சட்டை உரித்த தோல் வெளியே மஞ்சள், பிரவுன் கலரில், வயிற்று பாக தோல் வெள்ளையாக நீளமாக இருக்கும். அதை எடுத்து வந்து காட்டி பலராமன் என்கிற பையன் எங்களைப் பயமுறுத்துவான். முழு நீளம் வைத்திருப்பான். கழுத்தில் போட்டுகொண்டு அருகே வந்தபோது நான் ஒலிம்பிக் ஸ்பீடில் ஓடியிருக்கிறேன்.

சனிக்கிழமையும் வியாழக்கிழமையும் மாலை தக்கிளி வகுப்பு. செல்வராஜ் என்கிற பையனின் அப்பா பள்ளிக்கூடத்தின் எதிர் தெருவில் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். அதில் தான் பஞ்சு வாங்குவோம். கண்டிப்பாக எல்லோரும் நூல் நூற்றாக வேண்டும். எனக்கு நூற்க வராது. அறுந்து போகும். கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கு பின்னால் இருந்த சௌராஷ்டிர நகர் வீதியில் இருந்தான். பட்டுநூல் கார குடும்பம். நூல் நன்றாகவே நூற்பான். எனக்கும் சேர்த்து நூற்றுக் கொடுப்பான்.

சொல்ல மறந்துவிட்டேனே. செல்வராஜுக்கு கண் பார்வை சொற்பம். மிக அழகான இனிமையான குரல். அவனை வகுப்பில் சுப்ரமணிய அய்யர் காற்றினிலே வரும் கீதம் பாடச்சொல்வார். பாடுவான். என் வீட்டுக்கும் தலையை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு அரை குறை பார்வையை கொஞ்சம் வசதி பண்ணிக்கொண்டு ஓரமாக தெருவில் நடந்து வருவான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் சிலரோடு வந்துபாஷா தெரு சூளைமேடு தெரு சந்திப்பில் சந்திப்பில் கூட்டம் போடுவார். அப்போதெல்லாம் பெட் ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் சாயந்திரம், இரவுகளில் அவர் பேசுவது எனக்கு புரியாது. ஆனால் அவர் கிறிஸ்து என்று யாரோ ஒருவரைப்பற்றி கதைகள் சொல்வார். நிறைய கலர் காகிதங்கள், சிறிய குட்டி குட்டி புத்தகங்கள் கொடுப்பார். போட்டி போட்டுக்கொண்டு அதை எல்லாம் வாங்குவேன் . மறுநாள் தேடும்போது வீட்டில் நான் வைத்த இடத்தில் அவை இருக்காது. அம்மா அவற்றை அப்புறப்படுத்தி இருப்பாள். அவர் ''பாவிகளே பாவிகளே'' என்று ஏன் கூட்டத்தில் எல்லோரையும் பார்த்து திட்டினார்? இன்னும் கூட புரியவில்லையே?

என் பாலிய நண்பன் ஒருவன் பெயர் ரஹீம் என்று சொல்லியிருக்கிறேனே. அவன் என்னை ஒரு நாள் சூளைமேடும் ஆர்காட் ரோடும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு மசூதிக்கு கூட்டிச் சென்றான். அங்கு அதுவரை போகாததால் பயமாக இருந்தது. உள்ளே ஏன் சந்நிதி இல்லை, ஏன் விளக்குகள் பெரிய கோவில் மணி இல்லை, ஏன் யாருமே பிரசாதம் தரவில்லை, ஒருவருமே பாடவில்லையே, பெண்கள் யாரையுமே ஏன் காணோம்? இந்த கேள்விகள் மனதில் எழுந்தது. தலையில் தொப்பிகளோடு, (அந்த கால தொப்பிகள் வெள்ளை குல்லாக்கள் மட்டும் அல்ல, சிகப்பாக அதன் உச்சியில் குஞ்சம் வைத்து அது கீழே தொங்கும் ) நீண்ட ஜிப்பாக்களோடு, முகத்தில் தாடைக்கு கீழே மட்டும் தாடியோடு நிறைய பேர் எதற்காக ஒரு பக்கமாக பார்த்துக்கொண்டே மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்கள். நடு நடுவே எழுதிருக்கிறார்கள், குனிகிறார்கள். மீண்டும் உட்காரு கிறார்கள் ஒன்றுமே பேசவில்லையே? இதெல்லாம் எனக்கு 6-7 வயதில் எழுந்த கேள்விகள்? நான் சென்ற நேரம் சாயந்திரம். என்னை ஒருவருமே லக்ஷியம் செய்யவில்லை.

மசூதியிலிருந்தவர்கள் வெளியே வரும்போது வரிசையாக, நிறைய பேர் அதில் பெண்கள், குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு இரு புறமும் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். மீசையில்லாத தாவாக்கட்டையில் மட்டும் தாடி. ஆட்டு தாடி மாதிரி சிலர், , மீசைக்காரர்கள், முழுமுகமும் மறைக்கும் தாடி மீசை காரர்கள் . மழமழ முகக்காரர்கள் என்று சிலர் வரிசையாக அம்மாக்களின் கைகளில் இருந்த குழந்தைகளின் முகத்தில் ''foo'' என்று வாயினால் காற்று ஊதி விட்டு சென்றார்கள்.

கெட்டிக்காரர் ஒருவர் மசூதி வாசலுக்கு அருகே நிறைய கருப்பு சிவப்பு நூல்களை கையில் வைத்திருந்தார். தோளில் சாய்த்த ஒரு தடி மூங்கில் கொம்பில் உச்சியில் அல்லது தோளில் ஒரு தேவாங்கு. ஒவ்வொன்றாக அந்த குழந்தைகளுக்கு அவற்றை கட்டி விட்டார். கயிறு பெற்றவர்கள் சிலர் காசு கொடுத்தால் தோளில் ஒரு ஜோல்னா பையில் அது போய் சேரும். சில குழந்தைகள் அழுது இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தன. சில பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தன. எல்லாமே கழுத்திலோ கையிலோ கயிறுகள் கட்டிக்கொண்டு வீடு திரும்பின.

ரெண்ட்ரைகாணி தோட்டம் என்ற பெயர் கொண்ட பெரிய விஸ்தாரமான ஒரு இடம். நாலு பக்கமும் சுவர் கட்டி நடுவில் ஒரு பெரிய அஸ்திவாரம் கட்டிடம் இல்லாமலே எத்தனையோ வருஷங்கள் இருந்ததால் அதன் மேல் ஓடி ஆடுவது எங்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கு. எதிரே ஜாக்கரியா காலனி என்று ஒரு பெரிய இடம் சில தெருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது. வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்தன. பனந்தோப்புகள் முழுதும் அழியவில்லை. அதன் கீழே சில சாயந்திரங்களில் பச்சையப்பன் தெருக்கூத்து போடுவான். அவன் தான் அயன் ராஜ பார்ட். அர்ஜுனனாக வருவான். அல்லிஅரசாணி என்று நிறைய பாடுவான். அவனது குழுவில் தாமோதரன் என்று குள்ளமாக பெரிய தொப்பையோடு அரை வழுக்கையோடு ஒருவன் தான் வழக்கமாக கிருஷ்ணன் வேஷம் போடுவான். மீதி நேரத்தில் அவன் கோபாலன். பால் வியாபாரம்.

அப்போது எல்லாம் தாமோதரன் என் மானசீக ஹீரோ. வீட்டிலிருந்து சொம்பில் ஜலம் கொண்டு கொடுப்பேன். அருகில் அமர்ந்து அவன் பாக்கெட் கண்ணாடியில் முகம் பார்த்து பச்சை நீல நிறம் பூசிக்கொள்வதை பார்த்து ரசிப்பேன். கெட்ட வார்த்தையில் மற்றவர்களை திட்டுவான். கிருஷ்ணன் அப்படியிருப்பான் என்று இப்போது என்னால் நினைக்க முடியவில்லை. கிருஷ்ணன் நீ அப்படியும் ஒரு அவதாரம் ரகசியமாக எடுத்தாயோ? . இப்படி இன்று நினைக்க தோன்றுகிறது.

சூளைமேடு தெருவிலிருந்து கிழக்காக பனந்தோப்போடு நடந்து சென்றால் ரயில் பாதை ஒட்டி எழுப்பிய பெரிய சுவர் வரும். அதன் கீழே கல்லை அடுக்கி அதன் மேல் ஏறி சுவரைத் தாண்டி சுவற்றின் அந்த பக்கமும் அடுக்கியிருக்கும் கல்லில் கால் வைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் ஏறி கடந்து ரயில் பாதையின் அந்த பக்க சுவருக்கு சென்று அங்கு உடைத்து வைத்திருந்த துவாரத்தில் நுழைந்து போனால் லயலா காலேஜ் மலைப்பாம்பு கூண்டு இருக்கும். அதை வேடிக்கை பார்ப்பது எங்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கு. எப்போதுமே சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கும். எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மெதுவாக மலைப்பாம்பு கூண்டில் நகரும். கூண்டில் ஒரு மூலையில் முயல் வெளியே செல்ல போராடிக்கொண்டிருக்கும். பாம்பு ஒரு நாள் மெதுவாக அதை நெருங்குவதை பார்த்தேன். முயல் அதன் வாயில் மறைவதற்குள் பயந்து ஓடிவந்து விட்டேன். புஷ்பா நகர் அப்போது இல்லை, ஒரே தோப்பும் மரங்களுமாக இருந்தது. அதை கடந்து சென்றால் எங்கள் பள்ளிக்கூடம் வரும். நுங்கம்பாக்கம் அரசாங்க பள்ளிக்கூடம். நாகேஸ்வர ராவ் கட்டிடம் என்று அதன் முகப்பில் எழுதியிருந்ததாக நினைவு. வள்ளுவருக்கு கோட்டம் அப்போது யாரும் கட்ட நினைக்கவில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...