Tuesday, September 19, 2017

பாட்டி சொல் தட்டாதே - 4




பாட்டி சொல் தட்டாதே - 4 - J.K. SIVAN

பார்ப்பதற்கு எல்லாமே ஒன்று போல் தான் தோன்றும். ஆனால் எங்கோ வித்தியாசப்பட்டு பாகிஸ்தான் தயாரித்த ஐநூறு ரூபாய் கள்ள நோட்டு என்பது அப்புறம் தான் தெரியும்.
நல்லவர்களைக் காண்பதுவும் கண்டுபிடிப்பதும் ரொம்ப கஷ்டம். கிடைத்தால் நமது அதிருஷ்டம். நல்லது. நல்லவர்களின் சொல் நன்மை பயக்கும். சந்தோஷம் தரும். அதை திரும்ப திரும்ப காதால் கேட்க மனம் இனிக்கும். நல்லவர்களின் நற்குணங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நல்லது. நல்லவர்களோடு சேர்ந்திருப்பதும் நல்லது. இது நான் சொல்வது அல்ல சார். பாட்டியின் ரெகமண்டேஷன் இது . படியுங்கள்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.8

மேலே சொன்னவர்களை போல் இல்லாதவர்கள் நிறையவே இருக்கிறார்கள். தூரத்திலிருந்து பார்த்தாலே கூட தெரிந்து விடும். வடக்கே கண்ணில் பட்டால் தெற்கே ஓடிவிட வேண்டும். ஆமாம் தீயவர்களைக் கண்ணில் காண்பதுவும் கொடியது. . யாவரும் விரும்பும் தன்மை இல்லாத தீயவர்களின் சொல்லைக் காதால் கேட்பதுவும் தீது. நிறைய கேட்கிறோமே. தீயவர் ஒருவரின் குணத்தை வேறொருவரிடம் சொல்வதும் தீது. தீயவரோடு நட்புக் கொண்டிருப்பதும் தீது என்பதை பாட்டி அழகாக அடுத்த பாடலில் சொல்கிறாள்:

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.9


நல்லவர் ஒருவர் இருந்தால் அவருக்காக மழை பொழியும். நமக்கு கொஞ்சமாக மழை அனுபவம் கிடைக்கிறதே. ஓஹோ நல்லவர்கள் குறைந்து விட்டார்களோ? இல்லவே இல்லையோ? மழை நமக்கு கிடைக்கும் வரப்பிரசாதம். நல்லவர்கள் அளிக்கும் கொடை .. இறையருளால் வழங்கப்படும். அந்த மழை நல்லவர் அல்லாதவருக்கும் பயன்படட்டும் டும். எப்படி? உழவன் கஷ்டப்பட்டு நிலத்தை உழுது, நெல் பயிரிட்டு மாட்டை ஒட்டி வந்து கவலையில் கிணற்றிலிருந்து நீர் பாய்ச்சுகிறான். நீர் அவன் வெட்டிவிட்டு வரப்புக்கிடையே வாய்க்காலில் ஓடுகிறது. அப்புறம்? அந்த நீர் வாய்க்காலின் வழியே அதனால் நெல் பயிருக்கு மட்டுமா உயிரோட்டம் கொடுக்கிறது? வாய்க்கால் கரையில் உள்ள நிறைய யாரும் மெனக்கெட்டு பயிரிடாத புல் குடும்பங்களுக்கும் அவை வாழ, வளர, உதவுகிறது. அதுபோல நல்ல காரியங்களுக்கு நாம் வழங்கு தான தர்மங்கள், எல்லோருக்கும் பயன்படும். இதுதான் உலக இயற்கை. தீயவர் நலம் பெறுவது இதனால்தான். நிறைய பார்க்கிறோமே, படிக்கிறோம் புரியவில்லையா? என்று நான் கேட்கவில்லை பாட்டி கேட்கிறாள்:

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.10


ஒரு ரகசியம் சொல்லட்டுமா? நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது. இது தெரியும். ஆனால் அரிசிக்குள் முளை இருக்கிறதே அதிலிருந்து முளைப்பது தான் மீண்டும் நெல் . அதைப் பாதுகாப்பது அரிசியின் மேல் மூடி இருக்கும் நெல்லின் தோலான உமி. உமி நீங்கிய அரிசி முளைக்காது. அதுபோல நாம் தீர்மானித்து நடத்தும் ஒவ்வொரு செயலுக்கும் எவ்வளவுதான் திறமை சாமர்த்தியம் இருந்தாலும், அது நிறைவேற சிறிய ஏதாவது ஒரு கருவி, சாதனம், தேவை. அதை அளிப்போர், உதவுவோர் இல்லாமல் செயலை நாம் நிறைவேற்ற முடியாது. ரொம்ப கெட்டிக்கார பாட்டி:

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11
தாழம்பூவைப் பற்றி புராண கதைகளை நிறைய சொல்லி இருக்கிறேன். அதற்கு இங்கே இடமில்லை. தாழம்பூ பார்த்திருக்கிறீர்களா? பெரிய மடலோடு பூத்திருக்கும். அந்த மடல் பெரிதாக இருந்தாழும் அதன் மணத்தை யாரும் விரும்புவதில்லை. மகிழம்பூ அளவில் குட்டியாக சின்னதாக இருக்கும். அடேயப்பா அதன் மணம் ரொம்ப தூரம் வரை கமகமக்கும். அதன் வாசனை பிடிக்காதவர் யாரேனும் உண்டா? அதுபோல எவரையும் உடம்பு சைஸ், ஆடை, ஏறி வரும் கார், கண்ணாடி, இதெல்லாம் வைத்து மதிப்பிட்டு ஏமாந்து போகக்கூடாது (இனிமேலாவது).

கடல் மிகப் பெரியது. அதன் நீர் குடிக்க உதவுமா. குளித்தாலும் மேலே ஒரு சொம்பு நல்ல தண்ணீர் ஊற்றி குளித்தால் தானே சுகமாக இருக்கிறது. எவ்வளவு தான் பெரிய கடல் இருந்தாலும் அதன் அருகில் தோண்டிய சிறு ஊற்றில் (ஊறலில்) வரும் நீர் பருகுவதற்குக் பயன்படும் அல்லவா? என்று நம்மை கேட்கிறாள் பாட்டி இந்த பாடலில்:.

மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்


உண்ணீரும் ஆகி விடும்.12

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...