Thursday, September 28, 2017

ப்ரம்ம லோகத்தில் ஒரு கூட்டம்




ப்ரம்ம லோகத்தில் ஒரு கூட்டம். - J.K. SIVAN

''இந்திரா, சரஸ்வதி தேவி வந்துவிட்டால் தேவர்கள் அனைவர் சார்பாக அவளை வரவேற்று உபசரி'' என்கிறார் சிவன்

நாரதா இன்று பூலோகத்தில் என்ன விஷயம்?'' நீதான் திரிலோக சஞ்சாரி ஆயிற்றே நீ தானே இங்கு மீடியா. என்ன பார்த்தாய் சொல்? என்று சிரிக்கிறார் விஷ்ணு.

''பரமாத்மா, பூலோகத்தில் இன்று சரஸ்வதி பூஜை. நவராத்திரியில் இன்று உச்சகட்டமாக பிரமாதமான பூஜைகள் வாக்தேவிக்கு நடக்கிறது. எல்லோரும் பக்தி பூர்வமாக கோவில் செல்கிறார்கள்.

நீ எங்கு சென்றாய்?

கூத்தனுர் சென்றேன். சரஸ்வதி தேவிக்கு தனியாக இருக்கும் பெரிய ஆலயம் அது ஒன்றே தான். அற்புதமாக விழா நிகழ்ச்சிகள்.

இங்கு அதேபோல் நாம் கொண்டாட வேண்டாமா நாரதா.

தெய்வங்கள் நீங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளித்தால் அதைவிட பெரிய விழா எது பரமாத்மா.

சரஸ்வதி தேவி இதோ வருகிறாள்.

அங்கே உட்கார்ந்திருக்கும் சிலரை உனக்கு தெரிகிறதா நாரதா?

''ஆஹா கம்பர், ஒட்டக்கூத்தர், பாரதியார், காளமேகம், காளிதாசன் அதோ அந்த கிழவி அவ்வையார் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே.

நாம் ஒன்று செய்வோம். இந்த சரஸ்வதி பக்தர்களை ஆளுக்கு ஒன்றாக அவர்கள் வாய் மொழியாக சரஸ்வதியை பாடச் சொல்.

முதலில் யாராவது பாடட்டுமே.

இவர் தான் சிறந்தவர் இவரையே பாட சொல்வோம்.

மதுரை மணி அய்யரை அழைத்துவருகிறார்கள். சரஸ்வதி மேல் பாடச் சொல்கிறார்கள். ''அவருக்கே உரித்தான ஸ்வர ப்ரஸ்தாரத்தோடு அற்புதமாக ''வெள்ளைத் தாமரை '' என்று பாடி அனைவரின் கரகோஷம் சிரக்கம்பம் பெறுகிறார். பேசுகிறார்":

''நான் வெறும் மெஷின். பாடும் மெஷின். நான் பாடின இந்த பாட்டை இயற்றியது மஹாகவி பாரதியார். அவரை விட சிறந்த கவிஞன் தமிழில் இன்னும் பிறக்கவில்லை என்பேன்.'' என்கிறார் வணங்கியபடி மதுரை மணி அய்யர்.

''பலே பாண்டியா'' என்று அட்டகாச சிரிப்பு கேட்கிறது. ஓரமாக ஒரு கருப்பு கோட்டு , நெற்றியில் பெரிய குங்கும தீற்று, தலையில் வெள்ளை முண்டாசு, மீசைக்காரர் பாரதி கைதட்டுகிறார். அவரது இந்த பாடலை தான் மதுரை மணி அய்யர் குரலில் ஒலித்தது.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.

ஆஹா அற்புதம். பாரதியார் இவ்வளவு சிம்பிளாக எழுதி இருக்கிறாரே. அர்த்தமோ விளக்கமோ வேண்டாம். எளிதில் யாருக்கும் புரியும்.

''ஐயா புலவர்களே, தெய்வங்களே, வாக் தேவி. எல்லோரும் போற்றும் அந்த மஹா கவிஞன். சரஸ்வதி தேவியால் அருள் பெற்று பாடியவர்கள் ரெண்டு பேர் இருக்கிறார்களே அவர்களை பாட சொல்லுங்கள் என்கிறார்'' பாரதியார்.

நீரும் சரஸ்வதி தானே மீசைக்காரரே. பாரதி என்றால் சரஸ்வதி என்று தானே பொருள் என்கிறார் கம்பர்

ஸரஸ்வதி பூர்ண பிரம்ம சக்தி. வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் உண்டு. வெள்ளை வெளேரென்று வீணா, புஸ்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம்.அவளை எண்ணற்ற மஹான்கள் பாடியிருக்கிறார்கள், ஸ்லோகங்கள் இயற்றியிருக்கிறார்கள் கிருதிகள், கீர்த்தனங்கள் இருக்கிறது. வாழ்நாள் போதாது அதையெல்லாம் பற்றி சொல்ல எழுத.

காளமேகம் எழுந்து வருகிறார். சரஸ்வதியை விழுந்து வணங்குகிறார். அவள் ஆசி பெறுகிறார். கணீரென்று அவர் குரல் கேட்கிறது.

''வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிப்பூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய்.''

காரைக்கால் அருகே திருமலைராயன் அரசவையில் கலைமகளை வேண்டித் தான் அமர அரியணை பெற்றது. அரசனுக்குச் சரிநிகரான இருக்கையில் என்னை அமர வைத்த என் தாய் கலைமகளாகிய கல்வித்தெய்வம் வெள்ளை ஆடை அணிந்திருப்பாள்; வெள்ளை அணிகலன்களை பூண்டிருப்பாள்; வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள் என்று கவிதை நலமோடு பாடு முடிந்து கோலாகலமாக கை தட்டல் பெறுகிறது.

மஹா கவி மௌனமாக அமர்ந்திருக்கிறார். உலகப் புகழை பாரத தேசத்துக்கு பெற்று தந்த அந்த சமஸ்க்ரித கவிஞன் காளிதாசனை கூப்பிட்டு அல்லவோ முதலில் பாடச்சொல்லி இருக்கவேண்டும் என்கிறார் பாரதியார்.

வாஸ்தவம். காளிதாஸ மகா கவி இங்கே வந்து ஒரு ஸ்லோகம் சொல்லுங்கள்

या कुंदेंदु तुषार हार धवला, या शुभ्र वस्त्रा वृता |
या वीणा वरदण्ड मंडित करा, या श्वेत पद्मासना ||
या ब्रह्मा अच्युत शंकर प्रभृतिभि: देवै: सदा वन्दिता |
सा माम् पातु सरस्वति भगवति निःशेष जाड्यापहा ||

Yakundendu Thushara Hara Davalam, Ya shubra vastravrutham,
Ya veena vara danda manditha kara, Ya shwetha padmasana,
Ya brahmachyutha Sankara prbhruthibhi Daivai sada poojitha,
Saa maam pathu saraswathi bhagawathi Nissesha jadyabaha.

ஆஹா என்ன அர்த்தம் பொதிந்த ஸ்லோகம். சரஸ்வதி தேவி ரசித்து புன்னகை புரிகிறாள். அவள் அருளால் அல்லவோ ஆடு மேய்க்கும் காளிதாசன் அருட்கவி ஆகியவன்.

''அம்மா சரஸ்வதி, நீ பால்வண்ண குந்த மலர்கள் போன்று மென்மையானவள். நிகரற்ற அழகி.பனித்துகள், ஸ்படிகம் போன்றவள். வெண்ணிலவு போன்ற பூரண ஒளி முகம். இதற்கு பொருத்தமான வெண்மை ஆடை உடுத்தவள். மனதை காந்தமென சுண்டி இழுக்கும் வீணா கானம் புரிபவள். அவள் அமரும் ஆசனமம் அதி வெண்மையான வெண் தாமரை. ப்ரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள் பூஜிக்கும் அதி தேவதை. கலை மகள். நம் உள்ளத்தில் மாசு போக்கி அன்பெனும் வெண்மையாக்குவது கடினமா அவளுக்கு.

ஏன் சரஸ்வதிக்கும் ப்ரம்மாவைப்போல் அதிகமாக கோவில்கள் இல்லை பாரத தேசத்தில் என்று நாரதன் கேட்க அதோ ஒரு மஹா பெரியவர் சந்தோஷமாக இதை எல்லாம் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாரே அவரை வணங்கி கேட்போம் என்கிறான் இந்திரன்.

மகா பெரியவா சிரித்துக்கொண்டே மெல்லிய குரலில் பேசுகிறார்:

''பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லோரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளை துதிக்கக் கற்றுக்கொடுத்து விடுவதால், அது பசுமரத்தாணியாக மனதில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.

நியூஸ் பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாபுலர்’ தெய்வம்; பிரம்மா ‘அன்பாபுலர்’ தெய்வம்! அன்பாபுலர் தெய்வத்துக்குக் கோயிலில்லை என்றால் அது நியாயம்.

நல்ல பாபுலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்க வேண்டும்?

இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பதிவ்ரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவ்ரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்கமாட்டார்கள். சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும் பதிவ்ரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில்! அவள் எப்படிப் பதிக்குக் கோயில் இல்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.

அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மனுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள். ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோயில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டு விட்டுத் தான் மட்டும் மஹிமை கொண்டாடிக்கொள்ள அவள் சம்மதிக்கமாட்டாள்! அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக் கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்திரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா லக்ஷ்மிகளுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு சரி. பதியை நீக்கி பொது ஸ்தலத்தில் கோயில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.''

சரஸ்வதி எல்லோரையும் வாழ்த்தி விடைபெறுகிறாள். கூட்டம் கலைகிறது. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் கூடும்.

சரஸ்வதி தேவிக்கு கூத்தனுர் என்கிற ஸ்தலத்தில் தமிழ் நாட்டில் கும்பகோணம் அருகே, பேரளம் பகுதியில் அற்புதமான ஒரு ஆலயம் இருக்கிறது. சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். அது பற்றி எழுதியும் இருக்கிறேன். இந்த குழுவில் அனைவரும் படித்திருப்பீர்கள். படங்களோடு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...