யாத்ரா விபரம் j.k. sivan
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலைத் தவிர மற்றுமொரு ஆலயம் அந்த ஊரில் இருப்பதாக அறிந்தோம். போகும் வழியில் அந்த சிவன்கோவிலுக்கு சென்றோம். சிறிய கோவிலாகத்தான் காணப்பட்டது. சுற்றிலும் நடுத்தர மக்கள் வீடுகள். அவிமுக்தீஸ்வரர் ஆலயம் என்று அதற்கு பெயர். கோவில் வாசல் ஒரு மெல்லிய கம்பிக்கதவு, அதைவிட பெரிய பூட்டு அதற்கு. சாவி எங்கேயோ தெருமுனையில் ஒருவரிடம். கோவில் வாசலில் நாங்கள் வந்து நின்றதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண் ஓடி வந்தாள் ஒருகையில் இட்டிலிமாவு., பாதி அரைத்துக்கொண்டிருந்தவள் எங்களை வரவேற்று வாசலில் திண்ணையில் அமர ச்சொன்னாள்.தானே ஓடிப்போய் ஒரு சாவியுடன் திரும்பிவந்தவள் கதவுகளை திறந்து விட்டாள் அவளுக்கு ஒரு மஹா பெரியவா புத்தகம் பரிசாக கொடுத்தேன்.வாயெல்லாம் பல் .''இந்த சாமி பத்தி ரொம்ப பேர் சொல்வாங்க. எனக்கு புடிக்குமுங்க. நான் படிக்கிறேன்'' அவளுக்கு அருகே ஒரு சிறு ஐந்து வயது பெண். அவளை ஆசிர்வதிக்க சொன்னாள்.
''இதெல்லாம் படிச்சா போறாது. குழந்தைகளுக்கும் சொல்லணும்'' என்று கேட்டுக்கொண்டேன்.
துரதிர்ஷ்ட வசமாக இந்த பழங்கால கோவிலை பற்றி எவருமே கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த கோவிலின் புராதனம், வரலாறு, முக்யத்வம், தகுந்த பராமரிப்பு இருப்பதாக தெரியவில்லை. சுவற்றில் தமிழக அரசாங்கம் ஒரு லக்ஷம் ரூபாய் வழங்கி அதன் மாதாந்திர வருமானத்தில் கோவில் பராமரிப்புக்கு என்று எழுதியும் அதில் கண்ட சில நபர்களை டெலிபோனில் தொடர்பு கொள்ள முயற்சித்து படு தோல்வி. இப்படியும் ஒரு அரசு நிர்வாகமா அதிகாரிகளா?
இந்த ஆலயத்தில் ருத்ராக்ஷ விமானத்தின் கீழ் அவிமுக்தீஸ்வரர் அருள் பாலிக்கிறார். விசேஷமான லிங்கம். ஆவுடையார் இடப்பக்கமாக அபிஷேக ஜலம் வடிவது வழக்கம். இந்த ஆலயத்தில் வலது பக்கமாக இருக்கிறது. குறை தீர்க்கும் சிவன் லிங்கமாக குறையின்றி நிற்பது கண்களில் ஜலம் வரவழைக்கிறது.
ஒரு பெரியவர் அப்போது வந்தார். எங்களோடு பேசினார். அரசாங்க உத்யோக ஒய்வு பெற்றவர் எங்களோடு போட்டோ எடுத்துக் கொண்டார். புத்தகங்கள் கொடுத்தேன். படித்துவிட்டு தொடர்பு கொள்வேன் என்று சொன்னவருக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை. இந்த ஆலயத்தை நீங்கள் எல்லாம் பொறுப்பேற்று நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். யாரும் இல்லாத அந்த கோவிலில் அவிமுக்தீஸ்வரரிடம் விடை பெற்றுக்கொண்டு அடுத்த ஊரான அச்சுதமங்கலம் சென்றோம்.
No comments:
Post a Comment