J.K. SIVAN
காலேஜில் படித்துவிட்டு, தஸ் புஸ் என்று இங்கிலீஷில் நமது கலாச்சாரத்தையே ஏளனம் செய்தால் மிக நிறைய படைத்தவனாக நம்மில் பலர் ஏமாந்து போகிறார்கள். நாம் படிப்பது இப்போது வெறும் மார்க் வாங்க தானே தவிர அறிவை அபிவிருத்தி செய்து கொள்வ தற்கு அல்ல என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
பாட்டி பள்ளிக்கூடத்தில் படிக்காதவள். தமிழ் அவளிடம் விளையாடியது. அவள் கற்றது உலகம் என்ற யூனிவெர்சிட்டியில். அனுபவம் அவளுக்கு மேலே மேலே ப்ரோமோஷன் தந்தது. பக்தி பட்டம் கொடுத்தது. புலமை அவளுக்கு பதவி கொடுத்தது.
மரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறாள் பாட்டி. எது நல்ல மரமாம் தெரியுமா? அடர்ந்த காடுகளில் வானளாவ உயரமாக கப்பும் கிளையுமாக இருப்பவை அல்லவாம். அறிஞர்கள் கூடிய ஒரு சபையில் ''இந்தாங்க ஐயா, இதை படிச்சு சொல்லுங்க என்று நாலு பேர் நடுவில் ஒரு ஓலைச்சுவடியுவ் கடிதாஸோ கொடுக்கிறார் ஒருவர். நன்றாக ஆடை உடுத்தி, ஆபரணங்கள் எல்லாம் அணிந்து நிற்கும் சபையில் இருக்கும் ஒருவரால் அதை படிக்க முடியவில்லை. அப்படி ஒருவாறு எழுத்து கூட்டி படிக்க முடிந்தாலும், அதை விளக்கும் அளவு போதிய கல்வி அறிவு இல்லையே. அப்போது அந்த ஆள் நெளிகிறான். வாய்விட்டு அவனால் அதை படிக்க முடியவில்லையே. அவனது நிலை மற்றவர்களை நகைக்க வைக்கிறது. அவன் தான் சரியான நல்ல மரம் என்கிறாள் பாட்டி.
கல்வியைபோற்றி அதன் சிறப்பை வெளிப்படுத்தும் எவ்வளவு அர்த்தமுள்ள எளிய தமிழ்ப் பாடல் பாருங்கள் இது:
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.13
போலிகள் எந்த ஊரிலும் நாட்டிலும், எந்த காலத்திலும் உண்டு. ரூபாய் நாட்டிலே கூட இருக்கிறதே. மனிதர்களில் சிலர் தம்மை அறிவாளியாக, கல்விமானாக, அறிவாளியாக, செல்வந்தனாக, தர்மவானாக காட்டிக்கொள்ள முயல்வது இன்னும் தொடர்கிறது. நகல் என்றும் உண்மையாகாது.
இப்படி கல்லாத ஒருவன் கல்விமானாக தன்னை பாவித்து தம்பட்டம் அடித்துக் கொள்வது எதைப் போல தெரியுமா? என்று பொக்கை வாய் மலர சிரித்து கொண்டே கேட்கிறாள் பாட்டி. ஒரு கானகத்தில் அழகிய தோகை கொண்ட ஒரு பெரிய மயில் கார்மேகங்கள் மேலே தென்படுவதைப் பார்த்துவிட்டு ஆனந்தமாக தனது பெரிய வண்ணத் தொகையை விரித்து ஜம்மென்று டான்ஸ் ஆடுகிறது. இதை எல்லாரும் பார்த்து வியந்து ரசிக்கிறார்கள். இதைக்கண்ட ஒரு வான் கோழிக்கு பொறுக்கவில்லை. ''ஏன் என்னிடம் கூட சிறகு இருக்கிறது. எனக்கும் கூட ஆடத் தெரியதுமே. இதோ நானும் ஆடுகிறேன் பாருங்கள்'' என்று தனது சிறிய அழகற்ற இறகை, சிறகை விரித்துக்கொண்டு குத்தாட்டம் ஆடுகிறது. எல்லோரும் கை தட்டி மகிழ்கிறார்கள். அதன் அழகைக் கண்டோ அதன் ஆட்டத்தைக்கண்டு வியந்தோ அல்ல. இப்படி கூட ஒரு காமெடி உண்டா என்று சிரித்துக் கொண்டே. கல்வியறிவில்லாதவன் மதிப்பு அவ்வளவு தான் என்கிறாள் இந்தப் பாடலில் நமது கெட்டிக்காரப் பாட்டி.
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.14
ஒரு நாட்டு வைத்தியன் கோபால பண்டிதன், காட்டுப்பாதையில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடக்கிறான். அந்தக்காலத்தில் வைத்தியர்கள் தான் வீடு வீடாக செல்வர். அவரது பையிலோ பெட்டியிலோ, நிறைய சூரணங்கள், தைலங்கள், லேஹியங்கள், பொடிகள், திரவங்கள், குளிகைகள், எல்லாம் வைத்திருப்பார். ஒரு வீட்டில் போய் திண்ணையில் உட்கார்ந்தால் அந்தவீட்டில் இருக்கும் அத்தனை பேர் வியாதிகளுக்கும் அவர் பையிலோ, பெட்டியிலோ மருந்து இருக்கும். தலைவலி, வயிற்றுவலி, பல் வலி, சரும கோளாறு, கண் நோய், காது குத்தல், முடக்கு வலி, வாயு உபத்திரம் எல்லாவற்றிற்குமே அவரிடம் இருப்பது தான் சர்வ ரோக நிவாரணி.
''இந்தா இதை ரண்டுநாள் சாப்பிடு, வெறும் வயிற்றில் தண்ணியோடு குடி, எண்ணையை சேர்க்காதே, கத்திரிக்கா வேண்டாம்'' போன்ற வைத்தியம் நடைபெறும். பல் வலிக்கும், முதுகு தண்டு வலிக்கும் கால் நரம்பு பிசகியதற்கும், காது வலிக்கும் அதே தான் மருந்து. வைத்தியருக்கு என்ன பீஸ்? போகும்போது அரிசி, காய்கறி, துணி, பழங்கள், நெய், போன்றவை தான் கன்சல்டஷன் பீஸ். அடுத்த மாதம் தான் மீண்டும் வருவார். பல வீடுகளுக்கு இதுபோல் பக்கத்து ஊர்களுக்கும் செல்வதுண்டு. எப்போதுமே பிஸி அவர். அவரோடு அவர் சிஷ்ய பையன் கூட வருவான் மருந்து லேகிய மாத்திரை குளிகை பையை, பெட்டியைத் தூக்கிக்கொண்டு. அவன் தான் அடுத்த டாக்டர்.
இப்படிப்பட்ட ஒரு வைத்தியன் காட்டுக்குள் நடந்து குறுக்குவழியாக அடுத்த ஊருக்கு செல்லும்போது வழியில் பட்டை பட்டையாக பெரிய மஞ்சள், கருப்பு மினு மினுக்க ஒரு புலி. வழியில் குறுக்கே உறுமிக்கொண்டு படுத்திருக்கிறது. தனது முன்னங்கால்களில் ஒன்றை நக்கிக்கொண்டு இருக்கிறது. நகரவில்லை. டாக்டர் பயந்து ஓடவும் வழியில்லை. அது போகட்டும் என்று ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டு நிற்கிறார். மணிக்கணக்காக நின்றும் அது நகரவில்லை. கண்களில் நீர். அவருக்கல்ல, அதற்கு. அதன் சப்தத்தில் ஒரு வலி தெரிகிறது. டாக்டர் பார்க்கிறார். நீண்டு கொண்டிருந்த அதன் முன்னங்காலில் ஒரு பெரிய கம்பி முள் குத்தி அதைச்சுற்றி சீழும் ரத்தமும் வடிகிறது. ''ஆஹா, இந்த புலிக்கு வலி இந்த கம்பி முள்ளால் தான். அதை எடுத்து விட்டால் அதன் வலி குறையுமே, அதற்கு காயம்பட்ட இடத்தில் கொஞ்சம் மருந்து வைத்துக் கட்டினால் அது மறுபடி பழைய படி நடக்கமுடியுமே. அவர் டாக்டரல்லவா?. உடனே வைத்திய உதவி செய்ய தோன்றியது. புலி நோயாளியைப் பார்த்து அருகில் சென்று தன் பையிலிருந்து ஒரு குறடை எடுத்து அதன் காலில் இருந்த கம்பி முள்ளை பிடுங்கி எடுத்து, சீழ் ரத்தம் எல்லாம் அகற்றி மருந்து வைத்து கட்டுபோட்டார். என்ன ஆச்சர்யம். வலி போய்விட்டது. புலி அடிபட்ட காலை முன்போல் ஊன்றி வைக்க முடிந்தது. அதன் கண்களில் மலர்ச்சி. எழுந்தது புலி. வைத்தியரிடம் வந்தது. அவரை அணைத்தது. நன்றியை தெரிவிக்க அல்ல? தனது வெகுநாள் பசியை போக்கிக் கொள்ள. இவர் தான் பசிப்பிணி மருத்துவர் போல இருக்கிறது. அப்புறம்?
அப்புறம் என்ன? வைத்தியரின் தலைப்பாகையும், செருப்பும் பையும் தான் அங்கு இருந்தது. வைத்தியர் பசித்த புலிக்கு அன்றைய ஆகாரமானார்.பையன் தான் எப்போதோ ஓடிப்போய் விட்டானே.
இது எது போலவாம்? பாவம் ஏதோ கஷ்டப்படுகிறானே என்று ஒரு நன்றி கெட்டவனுக்கு நாம் நல்ல எண்ணத்தோடு செய்யும் உதவி ஒரு கல்லின் மீது தவறி விழுந்த பானையின் கதிக்கும் மேலே சொன்ன டாக்டரின் கதிக்கும் சமமாகும்என்று கிழவி புரியவைக்கிறாள்.
ஹாஸ்யம் மிகுந்த இந்த அற்புத பாடலை பாட்டி அசாத்தியமாக பாடியிருப்பதை படியுங்கள்.
''வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.''15
No comments:
Post a Comment