அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J..K. SIVAN
பெரிய்ய்ய ஆழ்வார் - 2
மொத்தத்தில் பன்னிரெண்டு ஆழ்வார்களும் இயற்றிய கொஞ்சு தமிழ் தேமதுரத்தமிழ் பாசுரங்களை ஒன்றாகச் சேர்த்து நாதமுனிகள் அளித்தது தான் நாலாயிர திவ்யப் பிரபந்தம். இப்போது புரிகிறதா ஏன் அதில் உயிரோட்டம் உள்ளது என்று?
பெரியாழ்வார் கருடன் அம்சமாயினும் பூலோகத்தில் அவதரித்தது வேயர் குலத்தில். பிறந்தது கலியுகத்தின் 46ம் வருஷம், குரோதன வருஷம், ஆனி மாதம் சுக்ல பக்ஷ, ஏகாதசி திதியில், சுவாதி நக்ஷத்ரத்தில் ஒரு வியாழக்கிழமை. இந்த ''குரு'' நமக்கருளப் பிறந்தவர் என்று கருட வாகன பண்டிதரின் திவ்ய சூரி சரித்ரம் சொல்கிறது. மணவாள மாமுனிகள் ''ஆனி யில் சோதி' நன்னாளில்'' என்கிறார். தந்தை முகுந்தாசார்யர், தாய் பத்மாவதி. விஷ்ணு சித்தரின் மற்றொரு பெயர் பட்டர் பிரான். பெரியாழ்வார் 85 வருஷங்கள் பூமியில் வாழ்ந்தார் என அறிகிறோம். ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பற்றிய மற்றொரு நூலான ''திருமுடி அடைவு'' என்ற ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கண்ணில் படவில்லை.
பெரிய திருமுடி அடைவு 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு நூல். வைணவ குரு பரம்பரை
வரலாற்றினைக் கூறுவது. கந்தாடையப்பன் தொகுத்தது. பார்த்தசாரதி ஐயங்கார் பதிப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூல் திவ்வியசூரி சரிதம். இதில் இராமானுசர் காலத்தில் அவரது காலம் வரையிலான குருபரம்பரை தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. 'பிரபன்னாமிர்தம்' என்னும் நூல் பின்பழகிய பெருமாள் ஜீயர் இயற்றிய குருபரம்பராப் பிரபாவம் என்னும் நூலை வடமொழியில் மொழிபெயர்த்தார்.பெரிய திருமுடி அடைவு 15ம் நூற்றாண்டு வரையிலான வைணவ குருமார்களின் பரம்பரையைத் தொகுத்துக் கூறுகிறது என்று மட்டும் அறிந்தேன்.
அதில் என்ன விஷயம் என்றால் முதலாழ்வார்கள் , நம்மாழ்வார் மற்றும் பெரியாழ்வாரைப் பற்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ வைஷ்ணவத்தில் சில ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பெயர்கள் பெருமையுடன் ''நம்'' ''எம்'' ''பெரிய'' என்னும் அடைமொழிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளது. உபதேச ரத்தினமாலை இதையே ''பரிவாலே வில்லிப்புத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வா ரென்னும் பெயர் '' என்கிறது.
''வேய்'' என்றால் மூங்கில். மூங்கிலை உடையவர் வேயர் . திருவரங்கத்தமுதனார் என்று ஒருவர். அவர் குலத்தை மூங்கிற்குடி என்று ராமானுஜ நூற்றந்தாதி குறிக்கிறது. அந்தக்காலத்தில் பிரம்மச்சரிய ஆஸ்ரமத்திலிருந்து க்ரஹஸ்தாஸ்ரமம் செல்வோர் கையில் ஒரு மூங்கில் தடியை வைத்துக் கொண்டிருந்தார்கள் வேயர்கள் .
இங்கு ஒரு கதை அவசியமாகிறது. அதைச் சொல்கிறேன்.
பாண்டிய ராஜா வல்லப தேவனுக்கு இரவில் நகர் சோதனை மாறுவேடத்தில் வருவது வழக்கம். ஒருநாள் வழியில் ஒரு அந்தணனைக் கண்டு நீ யார் எங்கிருந்து வருகிறாய் எங்கே போகிறாய் என்றான். அவன் நான் கங்கை\யில் நீராடி விட்டு இந்தப் பக்கமாக வந்தேன்'' என்றான்.
''ஒ அப்படிப்பட்ட ஸ்ரேஷ்டரோ நீர் ? எனக்கு ஒரு உபதேசம் சொல்லுமேன்? ''
பிராமணன் ஒரு ஸ்லோகம் சொன்னான் அதன் பொருள் '' மழைக்காலம் 4 மாசம் சுகமாக இருக்கவேண்டுமானால் மற்ற எட்டு மாதங்கள் உழைக்கவேண்டும். இரவில் நன்றாக சுகமாக நித்திரை பெறவேண்டுமானால் பகலெல்லாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். வயசான காலத்தில் டாக்டரிடம் தினம் போகாமல் இருக்க வாலிப வயசிலேயே சுறுசுறுப்பாக, மிதமான உணவுடன், வியர்க்க சோம்பல் இன்றி உழைக்க வேண்டும். மறுமையில் மோக்ஷம் கிட்ட, இப்பிறவியிலேயே தர்ம காரியங்கள், சத்தியமாக, நேர்மையாக, நியாயத்தோடு புரிந்து அன்போடு பரமனைப் போற்றி வாழ வேண்டும்.''
ராஜா அசந்து போனான். பிராமணனை வணங்கிவிட்டு நேராக தனது குரு செல்வநம்பியிடம் போனான். காலில் விழுந்தான். ''குருவே எனக்கு மறுமையில் சுகம்பெற வழி சொல்வீர்'' என்று கேட்டான். '' இதற்கு ஆசாரமும் வேதமும் அல்லவோ பிரமாணம். நீ என்ன செய்கிறாய், சமயத்துறையில் சிறந்த அறிஞர்களை வரவழைத்து வேதாந்த சித்தாந்த பர தத்வம் உபதேசிக்கச் செய்து அதனால் பயனடைவாயாக'' என்று சொன்னார்.
யார் சொல்லும் தத்வ முறை சிறந்ததோ அப்போது, தானே கீழே இறங்கும் வகையில் ஒரு பொற்கிழி உயரமான ஸ்தம்பத்தில் கட்டப்பட்டது. வேத விற்பன்னர்கள் நாலா பக்கத்திலிருந்தும் வந்தார்கள். எங்கும் எல்லாவற்றையும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் திருவரங்கன் அரங்கநாதன் சும்மாவா இருப்பார்?.
''விஷ்ணுசித்தா, நீ மதுரைக்குப் போ, பாண்டியனுக்கு அறிவுரை தந்து பொற்கிழியைப் பெற்றுவா'' விஷ்ணு சித்தருக்கு கட்டளை பிறந்தது.
'' பகவானே , நான் வேதநூல்கள் எதையும் அறியாதவன். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறாதவன் ஆயிற்றே?''
''எனக்கு தெரியாதா? நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?. நீ கிளம்பு ''
பெரியாழ்வார் பாண்டியனுக்கு பர தத்வம் கற்பித்தார். ராஜாவும் குரு செல்வ நம்பிகளும் ஆச்சர்யப்பட்டனர். பெரியாழ்வாரின் கடல் மடை திறந்தாற்போல் நிகழ்ந்த வேத வியாக்யானம் அந்த மூங்கில் ஸ்தம்பத்திற்கே புரிந்து அது தானாகவே தலை குனிந்து வணங்கும்போது பெரியாழ்வார் கையில் பொற்கிழி விழுந்தது.
அப்புறம் என்ன? பெரியாழ்வார் 'நடக்க' வில்லை.
ஏன் ? அவரைத்தான் ராஜா பட்டத்து யானைமேல் ஏற்றி உட்காரவைத்து நகர் வலம் வரவைத்துவிட்டானே. எப்படி நடக்க முடியும்? ராஜா பெரியாழ்வாரின் பர த்தத்வ உபதேசத்தால் வைணவனாக மாறிவிட்டான் . பெரியாழ்வாரின் கஜாரோஹணத்தை பார்க்க வந்தவர்களில் ஒருவர் கருடவாகனராக விஷ்ணுவே.! அப்போது பெரியாழ்வார் பாடியது தான் திருப்பல்லாண்டு. இனியாவது தினமும் அதைப் படித்து அனுபவிக்கலாமா?
செல்வ நம்பிகள் திருக் கோட்டியூரைச் சேர்ந்த ஒரு ப்ரோகிதர். அவரைப் பற்றி திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் சொல்கிறார்: ''அபிமானதுங்கன் செல்வனைப் போல நானும் பழவடியேன் '' (தி.ப. -10)
திருமாலை திருத் துழாய் மலர் மாலைகள் தொடுத்துச் சூட்டி மகிழ்வுறும் பணியினை மேற்கொண்டார் பெரியாழ்வார். ஆழ்வார்களிலேயே திருமாலின் கோயிலில் வாழ விரும்பிய வைணவர் என்ற பெருமை பெற்றவர் இவர் ஒருவர் தான்.
பொற்கிழி யில் கிடைத்த தங்க மோகராக்கள் எந்த பேங்கில் சேமித்து வைக்கப்பட்டன தெரியுமா? பெரிய நந்தவனமாக, கண்ணைப் பறிக்கும் மலர்கள் மலிந்து கிடக்கும் மலர் வனமாக. எதற்கு? அத்தனையும் மலர் மாலையாக அன்றன்று அரங்கனின் நீண்ட நெடு மேனியை அலங்கரிக்க.
இந்த துளசி வனத்தில் தான் ஒரு நாள் ஆண்டாள் என்கிற கோதை அவரால் கண்டெடுக்கப்பட்டாள். அவளைப் பற்றி நிறையவே எழுதவேண்டும். ஒரு வரியில் சொல்வதானால் கண்டெடுத்த, வளர்ந்த, அவள், அரங்கன் மேல் காதல் கொண்டு அவனையே அடைந்தாள், பிரிந்தாள் . இதை அவர் ஒரு பாசுரத்தில் ''
''ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான்...!!'' ( பெரி. 3.8.4.)
ரங்க ''மன்னாரை'' அடைந்து கோதை, தனது வளர்ப்புத் தந்தை பெரியாழ்வாரை மன்னாரின் ''மா மனாராக'' மாற்றிய பெருமை கொண்டவள்.
நான் சரித்திரம் பக்கம் போகப்போவதில்லை, சரித்திரப் பேராசிரியர் மு. ராகவய்யங்கார் பெரியாழ்வார் காலத்தில் ஆண்ட பாண்டியன் மாற வர்மன் என்கிறபோது, கோபிநாத ராவ் ''இல்லவே இல்லை, அவன் ஸ்ரீ வல்லபன் என்று கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகால வித்தியாசத்தைக் காட்டுகிறார். நல்லவேளை பெரியாழ்வார் 1, பெரியாழ்வார் 2 , என்று வெள்ளைக்கார ராஜாக்கள் போலஒன்றாம் ஜார்ஜ், ரெண்டாம் ஜார்ஜ் போன்ற வெறும் நம்பர்கள், ''நம்பர்'' போற்றும் ஆழ்வார்களுக்கு இல்லை.
ஹிந்து சனாதனம் உலகப்புகழ் பெற காரணமாக அதற்கு இதயமாக இருப்பது ராமன் என்றால் ஆத்மாவாக இருப்பது கிருஷ்ணன் எனலாம். இந்த கிருஷ்ணனை சிறு வெண்ணையுண்ட வாயனாக கம கமக்கச் செய்தவர்கள் ஆழ்வார்கள். அவன் இளமையைச் சிறப்பித்தவர் பெரியாழ்வார். ஈடிணையற்றவர். வாழ வைப்பவனையே ''வாழ்க பல்லாண்டு '' என வாழ்த்தியவர்.
பன்னிரண்டு ஒரு வைணவ நம்பர். ஆழ்வார்கள் 12. பெருமாளின் நாமங்கள் 12. திருப்பல்லாண்டின் பாசுரங்கள் 12.
பன்னிரண்டு ஆழ்வார்களில் பெருமாளிடம் ரொம்ப நெருக்கமானவர்கள் பெரியாழ்வாரும் தொண்டரடிப் பொடியாழ்வாரும் தான்.
''பெரிய'' (MACRO)ஆழ்வார் இல்லையா. பெருமாளை ''வாழ்த்தி'' பல்லாண்டு பாடினார். தொண்டரடி ''பொடி'' (MICRO )யாழ்வார் --துயிலெழுப்பினார். '' அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே''. எல்லா ஆழ்வார்களுமே ஒருவரை ஒருவர் மிஞ்சியவராகவே உள்ளனர். பரமனிடம் கொண்ட பரந்த பக்தியை திறந்த மனத்தோடு திறம்பட நினைத்ததை எழுத்தாக்கும் வித்தையில் அவர்களுக்கு இணை அவர்களே.
No comments:
Post a Comment