யாத்ரா விபரம் J.K. SIVAN
திரிபுர சுந்தரி சமேத திருசூலநாதர் ஆலயம்
ஒரு வித்தியாசமான க்ஷேத்ரம். தெருவின் ஒரு பக்கம் அதி நவீன ஆகாய விமான கூடம். அநேக வேகமான ஊதிகள் நெரிசலாக செல்கிறது. மேலே ரயில் பறக்கிறது. ஆ என்று வாய் பிளந்து பார்க்கும்படியான விமான தளம். தெருவின் இடது பக்கம் ஒரு பழைய சின்ன தெரு. பழைய வீடுகள், ரயில் தண்டவாளத்தை கடக்க பெரிய இரும்பு கம்பி தடுப்பு. கொஞ்ச நேரம் காத்திருந்து ரயில்கள் போனவுடன், தடுப்பு கம்பம் மேலே உயர்ந்தவுடன் தண்டவாளத்தை கடந்து நேராக குறுகிய பழைய தெருவில் நேராக சென்று, பிறகு அதுவாகவே வளைந்து சென்று மலைகள் சூழ்ந்த ஒரு ஆயிரம் வருஷங்கள் கடந்த கஜப்பிரஷ்ட (தூங்கானை) ரக சிவன் கோவில் தெரிகிறது. மூலவர் திரிசூல நாதர். அவர் பெயரால் ஊரே திரிசூலம். விமான கூடமும் அவர் பெயரில்.
அம்பாள் தெற்கு பார்த்த திவ்ய ரூபமாக நின்று கொண்டிருக்கும் திருபுர சுந்தரி. பெரிய கிழக்கு பார்த்த லிங்க ரூப திருசூலநாதர். இன்று காலை நான் சென்றபோது ஆலயத்தில் யாரும் இல்லை. அமைதியாக அவரை தரிசனம் செய்தேன் . பாடினேன். 12ம் நூற்றாண்டு முதலாம் குலோத்துங்கன் கட்டிய கோவில். கோவில் சுவற்றில் கல்வெட்டுகள் படிக்கமுடியாத தமிழில். கர்ப்ப கிரஹத்திலிருந்து சுரங்கம் இருப்பதாகவும் அதில் ராஜா தனது செல்வங்களை புதைத்து வைத்திருப்பதாகவும் தகவல். சுற்றிலும் உள்ள மலைகள் பஞ்சபாண்டவர் குன்றுகள் என்ற பெயர் கொண்டவை. நிறைய கல் உடைத்து எடுத்து வீடு கட்டியவர்கள் இப்போது நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
பெயர் மாற்றிவிடுவது நமக்கு கை வந்த கலை . முற்காலத்தில் இந்த ஊர் பெயர் திருநீற்று சோழ நல்லூர் , அப்புறம் , திருச்சுரம்.மலைகளால் சூழப்பட்ட இடத்தை சுரம் என்பார்கள். நேரம் காலம் சுருங்கி பெயரும் சுருங்கி இப்போது திரிசூலம்..
கோயில் பிரகாரத்தில் அற்புதமான நாக யக்னோபவீத விநாயகர். (நாகம் பூணலாக மார்பில்)
தக்ஷீணாமூர்த்தி வீராசனத்தில் அமர்ந்திருப்பது இங்கே அபூர்வம்.
சந்நிதியை பார்த்து நந்திகேஸ்வரர் அழகாக வீற்றிருக்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு பாழடைந்த சத்திரம் குலோத்துங்கன் காலத்திலிருந்து அப்படியே இருக்கிறது.
இந்த ஆலயத்தில் ஆதி சங்கரருக்கு ஒரு சந்நிதி அழகாக இருக்கிறது. ஆலய தூண்களில் சில அற்புத சிலைகள் வடித்திருப்பதை பார்த்து வியந்தேன். ஒன்றில் அழகிய வேணுகான கிருஷ்ணன், இன்னொன்றில் ஆஞ்சநேயர். அவற்றில் சிலவற்றை படமெடுத்தேன் அவை இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.
கோவில் திறந்திருக்கும் நேரம்: 07.00 Hrs to 11.00 Hrs - மாலை 16.30 Hrs to 20.00 Hrs. ONTACT DETAILS:
For pooja and other details Gurukkal S Keerthivasam may be contacted and his mobile number is 8056050671.
No comments:
Post a Comment