இதோ செப்டம்பர் நழுவி ஓடுகிறது.இன்னும் மூன்று மாதங்கள் கழித்து அடுத்த வருஷத்தில் நுழைவோம். 2018. டிசம்பர் மாதம் முதல் நிறைய வாழ்த்துக்கள் குவியும். புத்தாண்டு வாழ்த்துக்கள். wish you all happiness'' என்று வழக்கம்போல இந்த வருஷமும் அவை சொல்லப்போகிறது. ஒரே வித்தியாசம் முன்பெல்லாம் சார் போஸ்ட் என்று அவை காகிதமாக வீட்டுக்கு வரும். இப்போது email , whatsapp, facebook, sms , messenger என்று போஸ்ட்மேன் இல்லாமல் நிறைய பொம்மை பழங்களோடு, ஸ்வீட்களோடு வரும். சர்க்கரை வியாதி தராது.
ஒரு விஷயம் சிந்திக்க தோன்றுகிறது. எதற்கு ஜனவரி 1ம் தேதி மட்டும் இந்த ''wishing you ALL HAPPINESS''. மீதி நாட்களில்? நாம் இன்னும் இங்கிலிஷ் காரர்களா, அவர்கள் வழக்கம் அவசியமா?
நட்புக்காக என்று சொன்னால் தலை வணங்குகிறேன். நட்பு நல்லவர்களோடு மிகவும் அவசியம். அன்பும் நேசமும் வரவேற்க வேண்டும். வளரவேண்டும். ''சந்தோஷமாக இரு'' என்று சொல்வதால் ஒருவன் சந்தோஷ தேவதையாக மாற முடியாது. தனக்குள்ளே கிடைக்கும் அதை அவன் பெற முயற்சிக்க வேண்டும். வார்த்தை சம்பந்தப் பட்டது அல்ல. முழுக்க முழுக்க மனத்தால் விளைவது.
92 வயது மதுஸூதன ராவ் 83வயது மனைவியை சில மாதங்களுக்கு முன்பு இழந்து, வீட்டில் உதவ அவள் இன்றி, ஒரு முதியோர் இல்லம் செல்கிறார். அவரை அமரச் செய்துவிட்டு சென்ற அந்த இல்லத்தின் பணியாள் வரும்வரை காத்திருக்கிறார்.
''வாங்க''
சிரித்துக்கொண்டே தலை ஆட்டிவிட்டு கம்பை ஊன்றிக்கொண்டு ராவ் அவனோடு மெதுவாக லிப்ட் டுக்குள் நுழைகிறார். நாலாவது மாடி இறங்கி, கோடி அறைக்கு செல்கிறார்.
''இதுதாங்க உங்க அறை. எல்லா வசதியும் இருக்குமுங்க''
ராவ் சுற்றிலும் அந்த 8அடிக்கு 7அடி காரை பெயர்ந்த அறையில் ஒரு கிழிசல் துணி ஜன்னல் திரையாக, ஒரு ஆடுகின்ற இரும்புக்கட்டில் மீது ஒரு பழைய தலையணையோடு ஒரு மெல்லிய படுக்கையை பார்க்கிறார். ஒரு ஸ்டூல் மீது தண்ணீர் பாட்டில். சுவற்றில் ஒரு சின்ன கிருஷ்ணன் படம். மதுசூதன ராவின் மனம் மகிழ்கிறது.
"ஓ. ரொம்ப நன்றாக இருக்கிறது '' என்று சிரிக்கிறார் ராவ்.
''வாங்க பாத்ரூம் காட்றேன்''
''வேண்டாம் பா, சிரமப்படாதே. இருக்கும் வசதிகள் போதும்"
''என்னங்க தாத்தா நீங்க ஆச்சர்யமான மனுஷரா இருக்கீங்க. இங்கே வரவங்கள்லாம் ஏதாவது தொசுக்கு தொசுக்குன்னு ஏதாவது ஒரு குறை சொல்றாங்க. நீங்க ஒண்ணுமே சொல்லாமே சிரிச்சுக்கிட்டு ரொம்ப சந்தோஷமாக இருக்குதுன்னு சொல்றீங்க''
''இல்லே தம்பி. தினமும் காலையிலே எனக்குள்ளே நானு ''எது வந்தாலும் அது நல்லதுக்கே''என்று சொல்லிக்குவேன்'' அது அப்படியே பழக்கம் வழக்கமாயிடுத்து.''
''அடாடா அப்பிடியா''
"சந்தோஷத்தையும் திருப்தியையும் முன்கூட்டியே வரவழைச்சுக்கிறேன். நாற்காலி, மேஜை, அறை ,ஜன்னல், வசதிகளில் அதை எதிர் பார்க்கிறதில்லே.''
''இதோ பார் பா, எனக்கு ரெண்டு தான் வழியே. ஒண்ணு இந்த கட்டில் மேலே படுத்துக்கிட்டு நாள் முழுக்க என் உடம்பிலே எங்கெல்லாம் வலிக்குது என்று குறை கண்டுபிடிச்சுண்டு அவஸ்தை படறது. இன்னொன்று நல்லவேளை இந்த அளவுக்காவது என்னுடைய உடம்பு பாகங்கள் கொஞ்சம் ஒத்துழைக்குதே கிருஷ்ணா உனக்கு நன்றிடா'' அப்படிங்கிறது. நான் ரெண்டாவது வழியிலே நடக்கிறவன்.
ஒவ்வொருநாளும் அவன் கொடுத்த பிச்சை. கண்ணை திறந்துட்டேன் இன்னிக்கு. அப்பாடா, இன்னிக்கு நடப்பதெல்லாம் எனக்கு நல்லதாகவே தான் அவன் பண்ணுவான். முதுமை என்கிறதே ஒரு வங்கி கணக்கு. வாழ்நாள் முழுதும் சேர்த்து வச்சதை இந்த கடைசிக்காலத்தில் எடுத்து செலவு பண்றதுக்கு. இத்தனை வருஷமாக இப்படி சேர்த்து வைச்ச சந்தோஷம் திருப்தியை இப்போ ஞாபகப்படுத்திக் கொண்டு அனுபவிக்கிறேன்.
''எப்படி தாத்தா இது முடியும்?''[
''என்னப்பா கஷ்டம். இதயத்துலே யார் மேலேயும் வெறுப்போ கோபமோ இல்லை. மனசுலே எந்த கவலையும் கிடையாது. இருப்பதே போதும் என்கிற வாழ்க்கை. இருப்பதை இன்னொருத்தருக்கு கொடுக்கறது. எதிர்பார்ப்பு வேணாம்''.
மதுசூதன் ராவ் தாத்தா, நீங்கள் சொன்னது அந்த முதியோர் இல்ல பணியாளுக்கு மட்டும் இல்லே. ஒவ்வொருவரும் மனதில் கொள்வதற்கு . கடைபிடிப்பதற்கு. அதிசயங்கள் எங்கோ யாருக்கோ ஏற்படுவதில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிகழுமே . நாம் மற்றவரோடு அன்போடு நட்போடு பழக உதவுமே . எல்லோரும் இப்படி இருந்தால் அது ஆனந்த ஹேப்பி உலகமாக பிரதிபலிக்காதா
No comments:
Post a Comment