Saturday, September 9, 2017

பாட்டி சொல் தட்டாதே...3



பாட்டி சொல் தட்டாதே...3
- J.K. SIVAN
குப்புசாமிக்கு கண் பார்வை மங்கல். காதால் கேட்டு, மூக்கின் வாசனையால், வாயின் உதவியால் வாழ்ந்து வந்தவன். ஒருநாள் ஒரு மாந்தோப்பு அருகே நடந்தவனுக்கு நல்ல மாம்பழ வாசனை. அருகே இருந்த யாரோ ''அடாடா என்ன அழகாய் பழுத்த மாம்பழங்கள் ஒவ்வொருக்கிலையிலும் தொங்குகிறதே '' என்று சொல்லியது காதில் கேட்டதும் தனது கையை வீசி பார்த்தான் ஒன்றும் கிட்டவில்லை. கையில் பிடித்துக்கொண்டு நடந்த கொம்பை வீசினான். அது பட்டு ஏதாவது பழம் விழாதா?. பழமும் விழவில்லை, கையில் இருந்த கொம்பும் பறிபோனது. இதை எதற்கு கிழவி சொல்கிறாள் ? புண்ய காரியங்கள் செயதாயானால் தானாகவே தக்க நேரத்தில் உனக்கு அதன் பலன் கிடைக்கும். ஒரு நல்ல காரியமும் செய்யாமல் பலனை எதிர்பார்த்தால் குப்புசாமிக்கு கிடைத்த பரிசு தான்!

எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.பெறாது கோலும் இழப்பன் என்க. (4)


இந்த மனிதர்கள் வேடிக்கையான பிறவிகள். கர்ம வினைப்பயன் பற்றி சிந்திக்காதவர்கள். ஐயோ பக்கத்துவீட்டு பலராமன் போல் இல்லையே மேலேமேலே பணம் கொட்டுகிறதே, என்னிடம் வா என்றால் வருமா. தினை விதைத்திருந்தால் தினை அறுவடை செய்யலாம். ஒன்றுமே செய்யாமல் எப்படி தட்டு நிறைய விழும்? அதே போல் ஐயோ என்னை மேலும் மேலும் துன்பங்கள் விடாமல் துரத்தி துயரப்படுத்துகின்றனவே என்றால் அனுபவித்து தான் தீரவேண்டும். போ என்றால் அவை போய்விடுமா. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையாமலா போகும். மனிதர்களே இதை புரிந்து கொள்ளுங்கள். வருபவை வந்தே தீரும் வாராதவை வா என்றாலும் வராது. இன்ப துன்பங்கள் யாவும் நம் முன்வினைப் பயனே என்று புரிந்து கொண்டு அடுத்த வேலையை பாருங்கள் என்கிறாள் கிழவி.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

என்ன சாமிநாதன் என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் வீட்டிலே நிம்மதி கிடையாது சுவாமி. ஆபிஸ்லேயும் எவனோ செய்த தப்புக்கெல்லாம் நான் காரணம் என்று திட்டுகிறான். வீட்டிலே கேட்கவே வேண்டாம். பிலு பிலு வென்று காமாட்சி கொல்கிறாள்.பிள்ளை குட்டியெல்லாம் ராக்சிகா ஜந்துக்கள். எது சொன்னாலும் கேட்காது. என்ன சார் வாழ்க்கை இது. திரைகடல் ஓடி திரவியம் சேர்த்தாலும் நிம்மதி அதில் சேர்ந்தது இல்லையே. ஒருவரின் சுகமான வாழ்க்கையை மற்றவர் வாழ வகையில்லையே. எல்லாம் கர்மவினை என்று புரியவில்லையா என்று தலை யில் அடித்து சொல்கிறாள் கிழவி இந்த பாட்டில்:


உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு

இந்த உடம்பு என்னதான் நெய் ,பாதாம்பருப்பு முந்திரி பால், என்று போஷாக்கு நிறைந்த உணவினால் நிரம்பி இருந்த போதிலும் பட்டு மெத்தையில் ஏர் கண்டிஷன் அறையில் இருந்து, காரில் போனாலும், புழு, நோய், புற்று நோய், சிறுநீரக கல், இருதய நோய் வராமலா போகும். எப்படி தான் போற்றி வளர்த்தாலும் இந்த உடம்பு அந்த புழு பூச்சிகளின் உறைவிடம் என்று புரியவேண்டாமா? அடே முட்டாள் மனிதா, அதனால் தான் மஹான்கள், ஞானிகள் இந்த உடம்பை லட்சியமே பண்ணுவதில்லை. தாமரை இலை தண்ணீர் போல் இந்த உடம்போடு கூடி இருப்பார்கள். உடம்பு பற்றி எவரோடும் பேச மாட்டார்கள். அது இருப்பதையே மறந்தவர்கள் என்கிறாள் கிழவி.

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

கிழவியை விடப்போவதில்லை விட்டு பிடிப்போம் மீண்டும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...