'ஹர ஹர மகாதேவ் '' இந்த சத்தம் கூட்டமாக குதிரை வீரர்கள் சொன்னால், சிவாஜி மகாராஜாவின் படைவந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதைச் சொல்லிக்கொண்டே தான் சிவாஜியின் வீரர்கள் எதிரியின் மீது தாக்குதல் செய்வார்கள். உயிரைத் திரணமாக மதித்து போரிடுவர். எனவே வெற்றி பெற்றனர்.
சிவாலயங்களில் கோவிலுக்குள் சென்று சிவன் சந்நிதியில் 'ஓம் நமச்சிவாய'' , ''நம பார்வதி பதயே'', என்று அடிவயிற்றிலிருந்து எழும் சப்தம் கேட்கும்போதும், என்றும் ''ஹர ஹர மகாதேவா என்று
உணர்ச்சிபூர்வமாக சொல்லும் போது கிடைக்கும் ஆனந்தம் எழுத முடியாது. அந்த அனுபவம் அலாதியானது. ''ஹர ஹர'' என்றால் கிடைக்காதது ஏதாவதுஉண்டா? ஏன் இது தெரியவில்லை பலருக்கு? ஹர ஹர என்று சொல்பவன் உண்மையிலேயே உணர்ந்து போற்றி வணங்கி சொல்வானேயானால் அவன் மனிதனல்ல, தேவன். இன்னொரு அருமையான ரகசியம். ஹர ஹர என்று மனமும் நாவும் உவந்து சொல்வார்க்கு பிறப்பே இனி கிடையாது. இந்த ரகசியம் நான் சொல்லவில்லை. திருமூலர் தனது திருமந்திரத்தில் சொல்லியிருப்பதைப் பாருங்கள்
''அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே''
மகா பெரியவர் போல் ஒரு நடமாடும் தெய்வத்தின் தரிசனம் காண்பதே ஒருவனுக்கு பாட்டரி ரீ சார்ஜ் செய்ததுபோல் ஆகிவிடும். முற்றிலும் அவனை மாற்றிவிடும் அந்த ஒரு தரிசனம்.
இன்னும் கொஞ்சம் அவனை உயர்த்திக்கொள்ள அவன் செய்யவேண்டுவது வேறொன்றும் இல்லை. அந்த குருவின் பெயரைச்சொல்லி வணங்குவது. அதற்கும் மேலே ஸ்ரேஷ்டமானது அந்த மகாபெரியவரின் வார்த்தைகளை தெய்வத்தின் குரல் போன்ற புத்தகங்களிலும், இப்போது தான் அடிக்கடி வருகிறதே டிவியில் அதுமாதிரி அவர் ஒரு காலத்தில் பேசிய வார்த்தைகளை காதாரக் கேட்பது.கடைசியில் அவன் முற்றிலும் முதிர்ச்சி பெற அவன் அவர் பற்றிய நினைவுகளில் வாழ்வது. எவ்வளவு அழகாக படிப் படியாக சொல்லியிருக்கிறார் பாருங்கள் திருமூலர். இத்தகைய பாடல்களுக்கு, தப்பு தப்பு, மந்திரங்களுக்கு அர்த்தமே தேவையில்லை. அதுமாதிரியான எளிய அர்த்தம் நிறைந்த அமுதங்களைத் தான் எனக்கு பிடித்து தேடி உங்களுக்கும் அளிக்கிறேன்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
நமது வாழ்க்கை செடியின் பச்சை இலையின் மேல் வாழும் பனித்துளி போன்றது. இரவு ஜனித்தது. விடியலில் சூரியன் ஒளியில் மறைந்தது. இவ்வளவு நிச்சயமில்லாத சுருக்கமான வாழ்க்கையில் எத்தனை திட்டங்கள், நம்பிக்கைகள், கோபம், தாபம், எரிச்சல், பொறாமை, சுயநலம்.விரோதம். இதெல்லாம் விட்டொழிக்க வேண்டியவை. நிரந்தரம் இல்லாததை விட்டு நித்யமானதைத் தேடவேண்டும். நமது வாழ்க்கை எப்படியாம் தெரியுமா?
நேற்று பார்த்தேனே, நன்றாக பேசினானே, அடுத்தவாரம் வீடு வாங்குவதாக சொன்னானே. தண்டு, போய்விட்டானா? ''---- என்று சொல்லும் நிலையற்ற வாழ்க்கை. இறந்து போனவனைச் சுற்றி ஏகக் கூட்டம். ஊரே திரண்டு விட்டது. 'ஓ' வென்று பேரிரைச்சல். அழுகை, எவ்வளவுநேரம். ஒரு நாள் கூட தாங்காது. அவன் பெற்ற பெயர், பட்டம், எல்லாம் அவன் மரணத்தோடு மறைந்து விட்டதே. அவன் அடைந்த பெயர் இப்போது பிணம். இந்த பெயர் கூட அவனை இடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும் வரை தான்.
அவன் இப்போது இல்லை. அவனைத் தீக்கிரையாக்கியாச்சு. வேலை முடிந்தது. எல்லோரும் திரும்பிவிட்டார்கள். வீடு திரும்பினார்கள். குளித்தார்கள், ரசம் சாதம் சூடாக சாப்பிட்டார்கள். உப்பு கொஞ்சம் கூட என்றும் சொன்னார்கள். மேற்கொண்டு தங்கள் வழக்கமான வேலையைத் தொடர் ந்தார்கள். இருந்தவன் இறந்த பின் நினைவானான். நினைவும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. அவனும் அவன் நினைவும் கூட இப்போது இல்லை. தண்டுவா? யார்??
இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் கவனித்து எழுதியிருக்கிறார். ஒரு விஷயம் தெரியுமா? திருமூலர் மூவாயிரம் ஆண்டு இருந்தார். ஆண்டுக்கு ஒரு பாட்டு (திருமந்திரம் எழுதினர்) திருமந்திரம் மொத்தம் 3000.!! அதில் இது ஒன்று.
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று போட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.
இறைவனுக்கு வேண்டியது என்ன? ஒரே ஒரு பச்சிலையே போதும். ஒரு துளி நீர் போதும்.இது கஷ்டமில்லையே? எல்லோராலும் செய்ய முடிந்தது பசுவுக்கு ஒரு வாய் கீரைக்கட்டு .பசும் புல் கட்டு.
அன்றாடம் செய்யக்கூடிய ஒரு சிறந்த தர்மம் சாப்பிடும் முன் ஒரு பிடி சாதம் காக்கைக்கு. அசோக் நகரில் என் பெண் வீட்டில் ஒரு காகம் வெகு காலமாக தினமும் சமையல் அறை ஜன்னலில் வந்து அமர்ந்து ஆகாரம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு செல்கிறது.
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று போட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.
இறைவனுக்கு வேண்டியது என்ன? ஒரே ஒரு பச்சிலையே போதும். ஒரு துளி நீர் போதும்.இது கஷ்டமில்லையே? எல்லோராலும் செய்ய முடிந்தது பசுவுக்கு ஒரு வாய் கீரைக்கட்டு .பசும் புல் கட்டு.
அன்றாடம் செய்யக்கூடிய ஒரு சிறந்த தர்மம் சாப்பிடும் முன் ஒரு பிடி சாதம் காக்கைக்கு. அசோக் நகரில் என் பெண் வீட்டில் ஒரு காகம் வெகு காலமாக தினமும் சமையல் அறை ஜன்னலில் வந்து அமர்ந்து ஆகாரம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு செல்கிறது.
No comments:
Post a Comment