Monday, September 25, 2017

ஒரு வீர ​சேர ராஜாவின் விஷ்ணு பக்தி - (1)




​அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - j.k. sivan

ஒரு வீர ​சேர ராஜாவின் விஷ்ணு பக்தி - (1)

அவன் பிறக்கும்போது மலையாள தேசத்து ராஜகுமாரன். இளவரசன். அரசனுக்குத் தேவையான யானையேற்றம், குதிரையேற்றம், வாள் , வில், மல்யுத்தம், போன்ற சகல பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டன. ஆர்வமுடன் கற்று​த் தேறி பிறகு ராஜாவானான். சிறந்த முறையில் ஆட்சி புரிந்த அவனை மக்கள் போற்றினர். அவனது வீரம் பலம் எல்லாம் ஒன்றும் அறியாத பாண்டிய சோழ ராஜாக்க
ள் அவன் நாட்டின் ​மீது ​படையெடுத்துத் தோற்றுப் போனார்கள். அவனது வீரத்தை மெச்சித் தோற்ற பாண்டிய ராஜா தன் பெண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தான். ஒரு பிள்ளையும் பெண்ணும் கூட பிறந்துவிட்டது. ,

ராஜாவைப்பற்றி ஒன்று​ அவசியம் தெரியவேண்டும். அவனுக்கு பெருமாள் மீது அளவு கடந்த பக்தி. அதுவும் திருப்பதி வெங்கடாசலபதி என்றால் அலாதி பக்தி, பிரேமை.

ராஜா ஒரு நாள் ஒரு அதிசயக் கனவு கண்டான். வெங்கடாசலபதி தோன்றி அவனை ஆசீர்வாதம் பண்ணுவது போல. எப்போதுமே அவன் ராமர் கிருஷ்ணர் பற்றி உபன்யாசங்கள், கதைகள் ஆவலாக கேட்பான். பஜனைகளில் ரொம்ப ஈடுபடுவான். விஷ்ணு பக்தனாச்சே. நிறைய சம்பாவனை எல்லாம் கொடுப்பான்.

ஒரு தடவை ஒரு உபன்யாசகர் ராஜாவின் அரண்மனையில் ராம ராவண யுத்தம் கதை சொல்லிக் கொண்டிருந்தார். நேரம் ஆகிக்கொண்டே வந்தது. ஆர்வமாக ராஜா கேட்டுக் கொண்டிருந்தான். உபன்யாசகர் ராஜாவின் ஆர்வத்தில் லயித்து, மேலே மேலே விஸ்தாரமாக ராவண சைன்யத்தின் பெரும் பலத்தை ராமன் தனி ஒருவனாக எதிர்த்து யுத்தம் புரிவதை வர்ணித்துக் கொண்டு போனார். ராஜாவோ ராம பக்தன்.

''என்ன இது அக்கிரமமாக இருக்கிறதே. என் ராமன் தன்னந் தனியனாக இந்த ராவணனிடம் போராடிக்கொண்டு இருக்கிறான். ராவணனோ மிகுந்த பலசாலி, படையெல்லாம் வேறு ஏராளமாக ​உள்ளது.. இந்த ராமன் பாவம் ஒத்தையா​ளாக களை​த்துப் போய் போராடிக் கொண்டிருக்கிறா​னே. யுத்தம் நீண்டு கொண்டே போகிறதே.''

''நிறுத்துங்கள் உடனே'' - ராஜா​ எழுந்து பெரிதாக கத்தினான்.

பாகவதர் அரண்டு போனார். நாம் சொன்னதில் ஏதோ பிசகு ஆகிவிட்டது போல் இருக்கிறதே. கதை கேட்டுக்கொண்டி ருந்த​ ராஜாவுக்கு ஏனோ கோபம் வந்துவிட்டதே. ராஜாவின் கோபம் எதில் கொண்டு சேர்க்குமோ, என் தலை தப்புமா?"

''எங்கே சேனாபதி, கூப்பிடுங்கள் அவரை.''​ ராஜா ஆணையிட்டான்.​ பாகவதர் உடல் நடுங்கியது.

சேனாபதி உடனே வந்தார், கைகட்டி நின்றார். பாகவதருக்கு பாதி உயிர் போய் விட்டது. வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தார். பூனைமுன் எலி.​ ''இனி என் கழுத்துக்கு கத்தி தான் என் பிரசங்கத்துக்கு பரிசு.​''

''எங்கேய்யா நமது சேனைகள். உடனே திரட்டு. ஓடு சீக்ரம். இலங்கைக்குப் போ. ராமன் ஒத்தையிலே ராவணனோடு போராடிக்கொண்டு இருக்கும் போது நாம் இங்கே சும்மா பார்த்துக்கொண்டா இருப்பது. கிளம்பு உடனே '' என்றதும் பௌராணிகர் வெலவெலத்துப் போனார். ஆச்சர்யமும் அவரை தின்றது.

ராஜா எந்த அளவுக்கு ராம பக்தி உள்ளவன் என்று புரிந்துகொண்டு ரெண்டே நிமிஷத்தில் ராம ராவண யுத்தத்தை அழகாக முடித்து ராமன் ராவணனை வதம் செய்து வென்று விபீஷணனை ராஜாவாக்கின வரையிலும் வேகமாக சொல்லி முடித்தார்.​ என் தலைக்கு ஆபத்து இல்லாமல் காத்த​வனே ​ என்று அந்த ராமனை வேண்டிக்கொண்டார்.

ராஜாவும் இனி தனது உதவி ராமனுக்கு தேவையில்லை என்று புரிந்து கொண்டு மகிழ்ந்தான்.

ராமர் அன்று மீண்டும் அவன் கனவில் தோன்றி அவனது பக்தியை மெச்சி இன்றிலிருந்து எனக்கு நீ லக்ஷ்மணனைப் போல உடன் பிறப்பு. உனது பெயரோடு ....... ​''​பெருமாள்​''​ என்ற பெய​ரும் இன்றுமுதல் உலகில் விளங்கும் என்றார். ராஜாவுக்கு மட்டற்ற ஆனந்தம்.

அந்த ராஜா தமிழிலும் ​ஸம்ஸ்க்ரிதத்திலும் நிறைய எழுதினான் பெருமாளைப்பற்றி.

ராமனுக்கு தங்கச்சிலை வடித்து பூஜை பண்ணினான். விலை உயர்ந்த நவரத்ன மாலையைச் சாற்றினான். கோவிலே கதி என்று சகலமும் மறந்து சந்தோஷமாக இருந்தபோது ஒரு நாள் ராமன் மீது​ அவன் போட்டிருந்த விலையுயர்ந்த மாலை​யைக் ​ காணவில்லை!.

''எங்கே கண்டுபிடியுங்கள் உடனே மாலையையும் திருடனையும். யார் எடுத்தது?'' ராஜா உறுமினான்.

மந்திரிகள் ஓடினர், தேடினர், காணோம். ஒருவர் மெதுவாக 'அரசே, இங்கு உபந்யாசகர்கள் அடிக்கடி வருவதால் அவர்களில் யாரோ ஒருவர் எடுத்திருக்கலாம்.....'' என்று மென்று முழுங்கி சொன்னபோது ராஜா துடித்தான். வெகுண்டான்.

''என்ன சொல்கிறாய் நீ ? அபசாரம், மகாபாவம்.''

ராஜா காதைப் பொத்திக்கொண்டான் . உடல் துடித்தது. வியர்த்தது. நடுங்கியது. ராமனின் பெருமை போற்றிச் சொல்லும் விஷ்ணு பக்தர்களையா அவமதித்து அவதூறாகச் சொன்னாய். இதை கேட்டதாலே நான் தண்டனைக்கு உள்ளாகி விட்டேன். கொண்டுவா ஒரு விஷ நாகத்தை உடனே இங்கே.''

மந்திரி சேனாபதி அதிகாரிகள் நடுங்கிவிட்டனர். ராஜா சொன்னால் சொன்னதுதான். மறுவார்த்தை பேசக்கூடாது. மீறக்கூடாதே. பசியோடு ஒரு விஷநாகம் ஒரு ஒரு மூடி போட்ட கூடைக்குள் வைத்து கொண்டு வரப்பட்டது. ட்டு கொண்டு வரப்பட்டது.

'பரம பாகவதர்களை அவமதித்ததைக் காதால் கேட்ட என்னை இந்த கொடிய விஷநாகம் தீண்டி நான் இப்போதே மரணமடைகிறேன். இதுவே எனக்கு தக்க தண்டனை''.​ பிடிவாதக்காரன் ராஜா . சொன்னது நடக்கவேண்டும். ​ ராஜா விஷநாகம் இருந்த அந்த கூடையைத் திறந்து அதற்குள் கையை விட்டான். எல்லோரும் விதிர் விதிர்த்து வியர்க்க மூச்சு மாரடைக்க நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில் கொடிய விஷ நாகப் பாம்பு பேசாமல் மல்லிகைப்பூவாக மாறி சாதுவாக​ கூடைக்குள் சுருண்டு கிடந்தது. உள்ளே கைவிட்ட ராஜாவின் கையை மல்லிகைப்பூ கடிக்குமா?'

என்ன நடந்தது என்றால், ஐயோ நமது ராஜா, ராஜ்ய பாரத்தில் கவனமில்லாமல் எப்போதும் பஜனை கோஷ்டி, உபன்னி​ ​யாசகர்களை சுற்றிக்கொண்டிருக்கிறானே, அவன் கவனத்தை மீண்டு​ம் ​ அரசாங்க விஷயங்களில் ஈர்க்க ஒரு மந்திரி சொன்ன யோசனையின் படி ​ராஜாவுடைய மந்திரிகளே நவரத்னமாலையை ராமன் விக்ரஹத்தின் மேலிருந்து அகற்றி​, ​ பழியை யாரோ ஒரு பௌராணிகர் மேல் போட்டு ராஜாவுக்கு பாகவதர்கள் மேல் கோவம் வந்து அவர்களை விரட்டி விட்டால், ராஜாவுக்கு மீண்டும் ராஜ்ய நிர்வாகத்தில் கவனம் வரும்'' என்று சொன்னதால் நடந்த நாடகம் இது. மந்திரிகள் ஒன்று நினைக்க முடிவு வேறுமாதிரி ஆகிவிட்டதே!

ராஜாவின் காலடியில் விழுந்தனர் மந்திரிகள். தாங்கள் போட்ட நாடகத்தை எடுத்துச் சொ​ன்னார்கள். மன்னிப்பு கேட்டனர். ராஜா அவர்கள் எண்ணத்தை புரிந்துகொண்டான். தான் ஆன்மீக யாத்திரையில் முழுமையாக ஈடுபட்டு க்ஷேத்ராடனம் செய்ய முடிவெடுத்தான். தனது பிள்ளையை ராஜாவாக்கினான். கிளம்பிவிட்டான்.

எங்கு சென்றான். என்ன செய்தான்? .



அவன் இனி​ நான் சொன்ன வீர சேர ராஜா இல்லை, ராஜா இனி ஸ்ரீ குலசேகர ''பெருமாள்'', பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தமிழ் வளர்த்த குலசேகர ஆழ்வார் என்று புகழ் பெற்றவர் ஆகிவிட்டாரே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...