Wednesday, September 20, 2017

ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது நாள் நவராத்திரி

https://youtu.be/ehSC4t9_pgc
ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது நாள் நவராத்திரி
J.K. SIVAN
நமது இந்து மதத்தில் எத்தனை எத்தனையோ பண்டிகைகள். ஒவ்வொன்றும் கொண்டாடப்படுவதும் ஒரு தனி விதம். இந்த பண்டிகைகளை எல்லாம் குட்டி பண்டிகைகள் என்று சொல்வோமானால் இதற்கெல்லாம் ஒரு தாய் தான் நவராத்திரி விழா.​ ஒன்பது நாள் ​
இந்த பரந்த பாரத தேசத்தில் எல்லா பக்கங்களிலும் கொண்டாடப் படுவது நவராத்திரி.
“இது புரட்டாசியில் வரும். சரத் ருது என்று மாரிக்காலத்துக்கு முன்பு ரிஷிகள், முனிவர்கள் விரதமிருக்கும் சாதுர்மாஸ்ய சமயத்தில்​ (AUTUMN ) வரும் பண்டிகையாதலால் சாரத நவராத்திரி என்றும் பெயர். சாரதா என்பது சரஸ்வதிக்கும் ஒரு பெயர். நவராத்ரியில் மும்மூன்று நாள் துர்க்கா, லக்ஷ்மி சரஸ்வதியை கொண்டாடுவது.
மூக பஞ்சசதி என்கிற ஸ்தோத்ரத்தில் சரஸ்வதியை ''விமலபதி'' என்று வர்ணிப்பது அவளது வெண்ணிற ஆடையை குறிக்கும். ஆகாயம் நிர்மலமாக இருக்கும்போது தோன்றும் சந்திரன் ''சரத் சந்திரன்'' என்று அழைக்கப் படுகிறான். சரத் கால நிலா. வெண்மை அமைதியை குறிக்கும். பரிசுத்தத்தை வெளிப்படுத்தும். அரசியல் வாதிகள் பலபேர் வெள்ளை ஆடை உடுத்துகிறார்கள். 'மனதும் இதயமும் சுத்தம்' ​ என எதிர்பார்க்கவேண்டாம் ​​என்பதற்காக கூட இருக்கலாம். .
‘ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த நவராத்திரி சமயம் இந்தியா பூரா வானிலை ஒரே மாதிரி இருக்கும். தென் மேற்கு பருவக்காற்று முடிந்து கிழக்கே வட கிழக்கு பருவக்காற்று தலையெடுக்கும் சமயம். குளிர்ச்சி நிறைய காத்திருக்கும். நமது தேசத்தில் பல நகரங்களில் உஷ்ணமானி அதிக பக்ஷமாக 85°F க்கு ஒரு பத்து சதவிகிதம் மேலேயோ கீழேயோ தான் காட்டும். அனலும் இல்லை, எலும்பைத் துளைக்கும் குளிரும் இல்லை. மித உஷ்ணம். சட்டை இன்றி பூஜை செய்ய தோதான சமயம்..
மார்ச் ஏப்ரல் மாதத்தின் போது வசந்த ருதுவில் வசந்த நவராத்திரிகொண்டாடுவது கோவில்களில் மட்டும் தான். இந்த சாரத நவராத்திரி தான் எல்லா வீடுகளிலும் கோவில்களிலும் பொது இடங்களிலும். (இப்போதெல்லாம் பேங்க் களில் கூட கொலு), நவராத்ரி பற்றி நிறைய புராண கதைகளும் உண்டு. அம்பாளை அலைமகள், கலைமகள், மலைமகளாக வழிபடும் விழா.
நமது ஊரில் ஆயுத பூஜை விசேஷம். 10வது நாள் தசமி, விஜய தசமி. தொட்டதெல்லாம் பொன்னாகும், வெற்றி கிட்டும் நாள். இந்த பத்து நாள் தான் தசரா என்று பத்து இரவுகளாக எல்லா இடத்திலும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். மைசூரில் கேட்கவே வேண்டாம். கூட்டம் அம்மும். ஸ்பெஷல் ரயில் விடுவார்கள். மைசூர் மகாராஜா அரண்மனை இந்திர லோகம். சாமுண்டி என்கிற சக்தி துர்கா தேவதை மைசூர் மகாராஜா வம்ச குல தெய்வம் என்பதால் அதி விசேஷம். யானை, குதிரை ஊர்வலங்கள் சாமுண்டி மலைவரை நீளும். வாண வேடிக்கை, பளிச் பளிச் அலங்கார தீபங்கள். துர்கா தானே மகிஷாசூரனை ஒன்பது நாள் தவமிருந்து சம்ஹாரம் செய்தவள். அவளைச் சிறப்பாக​ கொண்டாட வேண்டாமா? .
கிழக்கே வங்காளத்தில் காளி பூஜை, துர்கா பூஜை மும்முரமாக நடக்கும். பழைய காலங்களில் ரத்தம் நிறைய ஆறாக ஓடும். உக்ர தேவதைக்கு பலி நிறைய எருமைகள். அதற்கும் முந்தி எப்போதோ மனிஷனையே பலியாக கொடுத்திருக்கிறார்கள். கடைசி ஐந்து நாள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். மேற்கே எப்படி 'கணபதி பப்பா மோரியா' மராத்தியர்களை சுண்டி இழுக்குமோ அதுபோல் கிழக்கே காளி மாதா வங்காளியர்கள் அனைவரையும் கட்டிப்போடுவாள்.
வடக்கே ராம் லீலா. பாகவதம் பிரகாரம் ராமர் சாரத நவராத்திரி பூஜைகள் செய்து பலம் பெற்று ராவணனை முடித்தார் என்று சொல்லும். வடக்கே ராம் லீலாவில் பெரிய ராவணன் கும்பகர்ணன் பொம்மைகள் விழா முடிவில் சிதைக்கப்படும். எரிக்கப்படும்.
குஜராத் பகுதியில் நவராத்திரி நாட்களில் நிறைய பேர் கர்பா, டாண்டியா நாட்டியங்கள் நடனங்கள் கலந்து ஆடுவார்கள். கோலாட்டம் கும்மி மாதிரி. சந்தோஷம் முகத்தில் கொப்புளிக்கும் அனைவருக்கும். இனிப்பு பக்ஷணங்களுக்கு பஞ்சமே இல்லை. வெளிநாடுகளில் வாழும் வடக்கத்தியர்கள் இந்த நாளை ஒன்று சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடுவது பற்றிய படங்கள் நிகழ்ச்சி தொகுப்புகள் பார்த்திருக்கிறேன். வயதே வித்தியாசம் கிடையாது இதில். பாட்டு புரியாது நமக்கு. காதுக்கு என்னமோ மாதிரி புரிபடாமல் இருக்கும். தலை, கை மட்டும் ஆடும். பின்பாட்டு ஒலி நாடாவில் எல்லோரும் கேட்கும்படியாக வைத்து ஆடுவார்கள்.ஆரம்பத்தில் மெதுவாக சாதுவாக தோன்றும் பாட்டு போகப் போக குதிரை வேகம், மான் வேகம், பெற்று அனைவரும் எம்பி எம்பி குதித்து காற்றில் பறப்பது போல் சுற்றி ஆடுவார்கள். பாட்டும் சூடு பிடிக்கும்.
நம் ஊர் பழக்கம் வேறே மாதிரியானது. கொலுப்படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று, என்று ஒற்றைப் படையாக வீட்டில் இடத்துக்கு தகுந்த அளவில் நிறைய பொம்மைகளோடு. படிகள் கண்டான் முண்டான் சாமான்கள், அலுமினிய, இரும்பு, மர, அட்டைப் பேட்டிகள், பெஞ்சு, மேஜை, ஸ்டூல் ​ ஒருவர் வீட்டில் காஸ் சிலிண்டர் கூட, ​ இதெல்லாம் போட்டு அடுக்கி, மேலே புடவை, வேஷ்டி, அல்லது பெட்ஷீட் மூடப்பட்டு படியாக காட்சி அளிக்கும். சில வீடுகளில் கொலுப்படி வாங்கி அதை அலங்கரித்து விளக்கெல்லாம் போட்டு தரையில் மண்ணில் பார்க், அமைத்திருப்பார்கள். என் நண்பர் வீட்டில் ஒரு ரயில் சுற்றி சுற்றி வரும்.
துர்க்கா ,லக்ஷ்மி, சரஸ்வதி பூஜை மூன்று மூன்று நாள், அடுத்து ஆயுத பூஜை. அன்று பழைய சைக்கிள் கூட குளித்து சந்தனம் குங்குமம் பூ வைத்துக் கொள்ளும்.
மரப்பாச்சி தம்பதிகள், ஒரு கலசம், ஊசி கூட வைத்து பூஜை நடக்கும். சகல பொம்மைகளும் இந்த படிகளில் காணலாம். செட்டாக நாதஸ்வர ஊர்வலம், கல்யாண ஜானவாச ஊர்வலம், தசாவதாரம், நாரதர், வண்ணான், நாய்க்குட்டி, மளிகை கடை செட்டியார் செட்டியாரம்மா, ராஜா ராணி, பொம்மைகள் கண்ணைப் பறிக்கும். கண்டபடி பொம்மைகளை வைக்கக் கூடாது. அதற்கு ஒரு நியமம் உண்டு. அதன் படி தான் படிப்படியாக வைப்பார்கள். சிறந்த கொலுவுக்கு இப்போ
தெல்லாம்​ பரிசுகள் கொடுக்கிறார்கள். பையனாக நான் தினமும் சாயந்திரம் சுண்டல் சேகரிக்க பல வீடுகள் சென்றிருக்கிறேன்.
சில வீடுகளில் தேவி பாகவதம் வாசிப்பார்கள். விஜய தசமிகளில் அழுதுகொண்டே பள்ளி போக தொடங்கும் குழந்தைகள் ஜாஸ்தி. ஆயுத பூஜா அன்று தொழிற்சாலைகளில் இனிப்பு காரம் விநியோகம் நடக்கும். அலுவகங்களில் எல்லோரும் பை நிறைய பொறி கடலை, நாட்டு சர்க்கரை, பழங்கள், இனிப்பு வகைகளோடு வீட்டுக்கு வந்திருக்கிறோம்.
விஜய தசமி அன்று தான் அர்ஜுனன் ப்ருஹன்னளையாக இருந்தவன் தனது காண்டீவத்தை விராட தேசத்தில் அஞ்ஞாத வாசம் முடிந்து வன்னி மரக்கிளையிலிருந்து மீண்டும் எடுக்கிறான். சமீபத்தில் தெலுங்கில் நர்த்தனசாலா என்ற படம் யூ ட்யூப் பில் பார்த்தேன். என்.டி . ராமராவ் ப்ரஹன்னளையாக பெண் வேஷம் தரித்து அவருக்கு பாலமுரளி கிருஷ்ணா பாடிய ' கலளித ராக சுதாராஸ ஒரு அற்புத பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. ஒரு அருமையான அழகு நடிகர் ராமராவ். அவரை நன்றாக பயன் படுத்தியிருக்கிறார்கள் அந்த காலத்தில்.
​அ​ந்த பாடலின் லிங்க் கொடுத்திருக்கிறேன். கேட்டுப் பாருங்கள் என்பதை விட ராமராவின் அழகு முகத்தை காண்பது சுவாரசியமாக இருக்கும். https://www.youtube.com/watch?v=ehSC4t9_pgc இந்த லிங்கை இணைய தளத்தில் பார்க்க முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
மஹா பெரியவா சொல்வார் ''என்னதான் துர்கா, லக்ஷ்மி சரஸ்வதியாகவோ, முப்பது முக்கோடி தெய்வங்களாக வழிபட்டாலோ, கடைசியில் அது அத்தனையும் அந்த சக்தி, பராசக்தி ஒன்றே தான். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் தேவியை ''சிருஷ்டி கரதீ ப்ரஹ்ம ரூபா '' என்று சொல்லியிருக்கிறது. படைக்கும் தொழில் இது. காக்கும் தெய்வமாக ''கோபித்ரி, கோவிந்த ரூபிணி'' என்றும் அழிக்கும் தெய்வமாக ''சம்ஹாரிணி, ருத்ர ரூபிணி'' என்று சொல்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்ரம், சரஸ்வதி அஷ்டோத்ரங்கள் அவளை '' பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாய'' என்று முத்தொழில் புரியும் முத்தேவிகளாக எல்லாம் அந்த பராசக்தி ஒன்றே '' என உரைக்கிறது.
“ நவராத்திரியின் போது கன்யா பூஜைகள் நடத்துவார்கள். லக்ஷ்மி பிருகு முனிவர் மகளாக பிறக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பார்கவி என்று பெயர். காத்தியாயனர் மகளாக பார்வதி அவதரித்து காத்யாயனி என்று பெயர். துர்கா சுக்தம் இதை சொல்கிறது.
கடவுளை குழந்தையாக, சிறுமியாக வழிபடுவது நமது மனத்தில் குழந்தைகளிடம் காணும் கள்ளம் கபடமற்ற எளிமை, காம, குரோத துக்க மார்ச்சர்யங்கள் இல்லாமையை, உண்டாக்கவே தான். உபநிஷங்கள் குழந்தையாக இரு என்று இதைத்தான் சொல்கின்றன’.
ஒரு சிறு விண்ணப்பம். எங்களது க்ரிஷ்ணார்ப்பண சேவா சொசைட்டி நிறைய புத்தங்களை குழந்தைகளுக்கு வெளியிட்டிருக்கின்றனவே, அவற்றை குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் இந்த நவராத்ரி அன்று பரிசாக அளிக்கலாமே. நங்கள் தான் உதவ காத்திருக்கிறோமே. இருக்கவே இருக்கிறது, பிளாஸ்டிக், துணி, 80 முதல் 100 செ .மீ. ரவிக்கை துணிகள்.இவைகள் எப்படியோ இருந்தபோதிலும் அதோடு கொடுக்கப்படும் எங்கள் புத்தகங்கள் சில நல்ல விஷயத்தையும் குழந்தைகளுக்கு தெரிவிக்கட்டுமே. வேண்டுபவர் என்னை அணுகவும். விலை கிடையாது. நன்கொடையாக கொடுப்பது எவ்வளவானாலும் அடுத்த புத்தகம் தயாரிக்க உதவும். இப்படித்தானே பனிரெண்டு புத்தகங்கள் நன்கொடை மூலமே குழந்தைகளை மற்றவர்களை அடைந்திருக்கின்றன. இன்னும் எத்தனையோ அவ்வாறே அவர்கள் கையில் சேரப்போகிறது.
ஜே. கே சிவன் 9840279080 jksivan @gmail.com

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...