Friday, September 1, 2017

வீதி விடங்கர்











யாத்ரா விபரம் J.K. SIVAN

வீதி விடங்கர்

சப்த விடங்க க்ஷேத்ரங்களில் ஆறு இடங்களை தரிசித்து விட்டு கடைசியாக முக்கியமான விடங்க க்ஷேத்ரமான திருவாரூர் செல்ல திருக்காரவாசலிலிருந்து கிளம்பினோம்.மறுநாள் ஆடி அமாவாசை.எனவே அங்கேயே நமது அனுஷ்டானங்களை கமலாலயக்கரையில் முடித்துக் கொள்வோம் என்று ஒரு தீர்மானம்.

இரவு 6.30 மணிக்கு திருவாரூர் வந்து விட்டோம். எங்கே தங்குவது. எப்படி நாளை நமது பித்ரு கடன்களை கடமைகளை செய்வதற்கு ஏற்பாடு என்று யோசித்தபோதே கோவில் வாசலில் ஒருவர் தென்பட்டார். ஸ்ரீ வேங்கடசுப்ரமணியன் மின்சார இலாகாவில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். அறிமுகப்படுத்திக்கொண்டு என் கையிலிருந்த மகா பெரியவா பற்றி நான் எழுதிய ''பேசும் தெய்வம்'' கொடுத்தேன். தங்க இடம், மறுநாள் காலை தர்ப்பண வசதி சாப்பாடு ஆகியவை பற்றி விசாரித்தேன். பரம சந்தோஷம் அவருக்கு. எங்கோ சென்றார் பத்தே நிமிஷத்தில் நாங்கள் தங்க ஒரு நல்ல விடுதியை கோவில் எதிரேயே பிடித்துக் கொடுத்தார். அடுத்தநாள் ஆடி அமாவாசை தர்ப்பணம் பண்ண ஒரு வாத்யாரையும் ஏற்பாடு பண்ணி காலை 7 மணிக்கு கமலாலயம் குளக்கரைக்கு வர செய்தவர் எங்கள் சாப்பாட்டிற்கு ஒரு மெஸ்ஸில் வடை பாயசத்தோடு வீட்டு சமையல் ஒன்றும் ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். வெகுநாள் பழகியவர் போல் அவர் குடும்பம் எங்கள் மேல் பாசத்தை கொட்டியது.

சீக்கிரம் சென்று தரிசனம் பாருங்கள் என்கிறார். ஓடினோம். சப்த விடங்க க்ஷேத்ரத்தில் அதி முக்கியமான திருவாரூர் மரகதலிங்க வீதி விடங்கரின் அபிஷேகமும் இரவு 7.30மணிக்கு காத்திருந்து அற்புதமாக பார்க்க முடிந்தது. கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.இல்லையென்றால் இதெல்லாம் நடக்குமா கிடைக்குமா? இரவே தியாகராஜரை தரிசித்தோம். நாங்கள் தங்கிய விடுதிக்கருகிலேயே வெறும் இட்டலி சட்னி மட்டும் சூடாக ஒருவர் தயாரித்து விற்கிறார். எனவே இரவு ஆகாரமும் இனிது முடிந்தது.

திருவாரூர் தியாகராஜர்ஆலயம் ரெண்டாயிரம் வருஷ மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் கூட. நாயன்மார்கள் பாடல் பெற்ற ஸ்தலம். பஞ்ச பூத ஸ்தலத்தில் ப்ரித்வி ஸ்தலம். பிரம்மாண்ட ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். காவிரி தென்கரை பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களில் இது 87ஆவது. பிரதான சப்த விடங்க க்ஷேத்ரம். நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். திருவாரூர் பற்றிய சில அற்புத குறிப்புகள்
எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .
சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.
திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.
இங்கே சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிஷ்டை செய்யப்பெற்றவர்.
இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.
தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.
இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.
ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.
மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.
தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.
சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.
இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.
தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.
அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.
சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.
அம்பாள் நீலோத்பலாம்பாள். கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.

மறுநாள் காலை எழுந்ததும் கமலாலயக்கரையில் பித்ரு தர்ப்பணம் செய்ய சென்றேன். அங்கு வேங்கடசுப்ரமணியன் காத்திருந்தார் வாத்யாருடன். கரையோரத்தில் ''மாற்றுரைத்த பிள்ளையார்'' இருக்கிறார். அவரைப் பற்றிய கதை அழகானது. சுந்தரர் இறைவன் கொடுத்த பொற்காசு உண்மையிலேயே தங்கமா என்று சந்தேகப்பட அருகே இருந்த இந்த பிள்ளையார் வட்டிக்கடை மார்வாடி போல் தங்கத்தை உரைத்து பார்த்து மாற்றுகுறைவில்லை என்று சொன்ன இடம். திருவாரூரைப் பற்றியே நூற்றுக்கணக்கான கதைகள் எழுத விஷயம் இருக்கும்போல இருக்கிறதே.தர்ப்பண காரியங்கள் முடிந்து வேங்கடசுப்ரமணியன் வீடு சென்றோம். 93க்கும் மேல் வயதான அவர் தாயாரை வணங்கி ஆசி பெற்றோம். பெரியோர் ஆசி அபூர்வமானது அல்லவா? இந்த வயதிலும் தனது காரியங்களை தானே எவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அந்த மூதாட்டி செய்து கொள்வது ஆச்சரியம். கணபதி அய்யர் மெஸ் சுடச்சுட வீட்டு சாப்பாடு போட்டது.

சப்த விடங்க க்ஷேத்ர புனித யாத்திரை இனிது. முடிந்து மற்ற கோவில்களை ஆங்காங்கு சென்று தரிசித்ததை பற்றி சொல்கிறேன்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...