J.K. SIVAN
பாம்பாட்டி சித்தர் போன்ற ஞானிகளுக்கு பெரிய உயர் தத்துவங்களை எளிதான தமிழில் சொல்ல இயலும். தக்க உதாரணங்கள் கொடுத்து புரிய வைப்பார்கள். உண்மையான உபதேசங்கள்.
இந்தோ இந்த பாடலில் நமது உடம்பு ஒரு காடு என்று எடுத்துக் கொள்வோம். அதில் ஐந்து அம்சங்கள் என்னென்ன? ஐம்புலன்கள் என நமக்கு தெரியும்.
காடு என்பதே ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய உலகம் தானே, அது போல் தான் ஐந்து இந்திரியங்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் காடு தான் நமது உடல் என்கிறார். அப்படி வேண்டாம். காடு என்றால் பிடிக்கவில்லை. நமது உடலை ஒரு நாடு என்று வைத்துக்கொள்வோமே . அதில் ஐந்தைந்தாக அநேக விஷயங்கள். 25 தத்துவங்களும் அடைந்திருக்கும் நாடு இந்த உடல். இந்த உடலை பற்றுக்கோடாகக் கொண்டு மூலாதாரத்தை வருந்தி நீ தேடுவாயாக. அந்த மூலாதாரத்தை அறிந்தாலே முத்திதான் வீடாகும் என்று வழிகாட்டுகிறார் பா.சி.
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு – அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு.
அடுத்ததாக ஒரு பாடலில் நமக்குள்ளேயே நான்கு வகைக் கோட்டைகள் உள்ளன என்கிறார். அதில் உள்ள உடல் பகை, உள்ளப் பகையை எல்லாம் விரட்டிக் கள்ளப் புலன்களாகிய காட்டை வெட்டியழித்து தீயில் எரித்தால் முடிவில் முத்தி என்னும் வீட்டைக் காணலாம் என்கிறார். இதை விளக்கலாம். புரியாது. உயர்ந்த மோக்ஷ தத்வம். மேலெழுந்தவாறே படித்துவிட்டு தனியே ஒவ்வொருவார்த்தைக்கும் என்ன அர்த்தம் இருக்கலாம் என்று யோசிப்பது தான் ஆன்ம சோதனை பயிற்சி.
உள்ளாக நால்வகைக் கோட்டை-பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும காட்டை – வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை
காசிக்கோ டில்வினை போமோ – அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ – பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
''காசிக்குப் போறேன் சந்நியாசி '' என்று நாகேஷ் ஒரு தமிழ் சினிமாவில் பாடுவார். எதற்கு இப்படி ஒரு காட்சி? காசிக்கு போயும் கர்மம் தொலையலை என்று ஏன் சொல்கிறோம்? காசி க்ஷேத்ரம் சென்றாலே நமது பந்தங்கள் கர்ம வினைகள் அற்றுப்போகும் என்ற நம்பிக்கையால் தான். அங்கே போவதால் உடனேயே நம் வினைகள் தானாக நீங்கிவிடுமா? அங்கு உள்ள கங்கையில் நீராடினால் நற்கதி கிடைக்கும் என்பது உண்மையா? பலவிதத் தத்துவங்களைப் பேசினாலே நம்முடைய கர்மவினைப் பயன்கள் போய்விடுமா? இப்படி காரசாரமாக கேட்கிறார் பாம்பாட்டி சித்தர். அவர் என்ன சொல்லி விளக்குகிறார் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். நமக்குள்ளேயே ஏகப்பட்ட வேறுபாடுகள் வேற்றுமைகளை விடாமல் வைத்துக் கொண்டு சர்வத்திலும் சகலத்திலும் இருப்பது அந்த பரமனே என்று அறியாமல் வித்த்யாஸம் பாராட்டிக்கொண்டு அந்த கடவுளைப் போற்றுவதால் கர்மங்கள் தொலைந்து போகாது என்கிறார்..
பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவற்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த சாலம் பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்
வெறுமே நமது சுயநலம் வேண்டி என்னென்னவோ உருவங்களை கடவுளாக போற்றி இரவும் பகலும் வழிபட்டால் இவ்வுலகை விட்டு நம் உயிர் போகும் காலத்தில் நன்மை கிடைக்குமா என்று கேள்வி எழுப்புகிறார் பாம்பாட்டி சித்தர். சுத்தமான தந்திரத்தை (ஜாலம் ) மெய்யாக நம்பினாலும் அதனால் அனுகூலம் எதுவும் இல்லை.
சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லாப் பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் எங்கும்
ஆனந்த மாக நிரம்பிய புங்கம்.
கொஞ்சமேனும் சந்தேகமே வேண்டாம். பகவான் தங்கம் போன்ற ஒளி வீசுபவர். அவரைச் சார்ந்து கொண்டால் யார்க்கும் எந்த குறையும் தாழ்வுமில்லை.. நன்மைகளே மிகுதியாகும். முடிவில்லாத ஓர் தெளிவானது (பொங்கம்) எங்கும் ஆனந்தமாக நிரம்பி நிலை பெறும்.
பாரி லுயர்ந்தது பத்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயர்அட்ட சித்தி – யார்க்குங்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
இந்த உலகில் மிக உயர்ந்தது பக்தி. அதைப் பற்றிக் கொண்டவர்க்கே முத்தி கிடைக்கும். எல்லாரும் சிவனிடம் பத்தி செலுத்தினால் சிறப்புடைய அட்டமா சித்திகள் கிடைக்கும். அட்டமாசித்தி என்றால் எட்டு வகையான உயர்ந்த பயன்கள்.
அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுடல் ஆவி – நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி
அன்பு எனும் நல்ல மலரைத் தூவிப் பரமானந்தமான தெய்வத்தின் அடியினை விரும்பி இன்பமுடன் உன் உடல் ஆவி எல்லாம் நாளும் ஈடேற இங்கிருந்தே முயற்சி செய்வாயாக.
ஆற்றறும் வீடேற்றங் கண்டு – அதற்
கான வழியை யறிந்துநீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுக் கொண்டு.
மோக்ஷ சித்தி என்பது எளிதில் எல்லோருக்கும் கிட்டிவிடுமா? அதன் அருமையை உணர்ந்து முயன்று, அதை அடையும் வழி முறைகளை பெரியோர், ஆச்சார்யர்களின் உபதேசம் பெற்று அறிந்து கொண்டு சிறிதும் தளர்வில்லாமல், சோர்வில்லாமல், கோபமில்லாமல்,
பின்பற்றினால் ஆதி யோகியான சிவனை நினைந்து அவன் சேவையில் ஈடுபட்டால் அந்த சிவனே மோக்ஷ சாம்ராஜ்யத்தில் பக்தனை கொண்டு சேர்ப்பான்.
ஆன்மாவா லாடிடும் ஆட்டந் தேகத்
தான்மா வுற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையி லுனக்கு வருமேகொண் டாட்டம்.
எது வரையில் நமது உடலில் ஆட்டம் இருக்கும் என்றால், எதுவரை ஆன்மா உள்ளே இருக்குமோ அது வரை தான். இந்த உடல் மேல் வைக்கும் எண்ணம், ஆசை, விருப்பம் இவை அழிய வேண்டும். அப்போது தான் வான் உலகின் மேல் நாட்டம் உண்டாகும். நாளும் இப்படி விருப்பம் கொண்டால் கொண்டாட்டம் உன்னை தேடி வரும் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.
No comments:
Post a Comment