Saturday, September 2, 2017

வாங்கோ சாப்பிடுங்கோ''





பேசும் தெய்வம் - 3 J.K. SIVAN

'' வாங்கோ சாப்பிடுங்கோ''

இது எப்போதோ நடந்த ஒரு சம்பவம். மஹா பெரியவா சம்பந்தப் பட்டது என்பதால் இது தனி அந்தஸ்து பெற்றது எனலாம்.

யாரோ ஒரு புலவர், தனது மனைவி பிள்ளைகளோடு நீண்ட பயணம் செய்தார். கொஞ்சம் வசதியானவர். மோட்டார் கார் ஒன்றில் பிரயாணம். செட்டிநாடு பகுதியிலிருந்து கிளம்பியவர் எதிர்பார்த்தபடி உணவு வசதி கிடைக்கவில்லை. பசி அனைவருக்கும். என்ன செய்வது. தேடிய இடங்களில் உணவு இல்லை. நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டது. அப்போது தான் யாரோ அந்த ஊரில் மகா பெரியவா தங்கி இருக்கிறார் என சொன்ன செய்தி அவர் காதில் விழுந்தது.

விசாரித்துக்கொண்டு பெரியவா தங்கி இருக்கிற இடத்துக்கு செல்ல முடிவெடுத்தார். மனைவி மக்களோ ''வேண்டாம். இந்த நடுநிசியில் பெரியவாளை சிரமப்படுத்துவது சரியில்லை’. காலையில் குளித்து விட்டு அவரை தரிசிப்போம் '' என்கிறார்கள்.

சரி இன்று நமக்கு பட்டினி விரதம் என்று அனைவரும் தீர்மானித்தார்கள். இதற்குள் கார் ட்ரைவர் எப்படியோ பெரியவர் தங்கியிருக்கும் ஊருக்கு வழியை கேட்டு விசாரித்துக் கொண்டு அங்கே சென்றபோது இரவு நடுநிசி கடந்து ராத்திரி ஒருமணி.

பெரியவா காம்ப் போட்ட அந்த ஊர் தூங்கவில்லை. ஜனநடமாட்டம். விளக்கு ஒளி. பாதையின் ஓரத்தில் ஒரு பிராமணர் வழி மறிக்கிறார் .

''கொஞ்சம் காரை நிறுத்துங்கோ''

கார் நிற்கிறது.

இதிலே தான் புலவர் ஒருத்தர் பிரயாணம் பண்ணுகிறாரோ?

ஆமாம் சுவாமி நான் தான் அந்த புலவர். உங்களுக்கு எப்படி தெரியும் என்னை, நான் வருவதை பற்றி? உங்களைத் தெரியவில்லையே எனக்கு ? என்கிறார் புலவர் அதிசயித்து. புலவர் குடும்பத்துக்கு ஆச்சர்யம்.

இன்னும் சில ஆச்சரியங்களும் தொடரப்போகிறதே. வழியில் காரை நிறுத்தி விசாரித்த அந்த பிராமணர்,

''என்னோட வாங்கோ ' - புலவர் தனது குடும்பத்தோடு அந்த நள்ளிரவு அகால வேளையில் பெரியவா தங்கியிருந்த மடத்துக்கு அழைத்து சென்றார்.

நீண்ட ஒரு ஹால் ஒரு புறம் பெரியவா ஒரு அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அதை ஒட்டி நீண்ட வெராண்டா போன்ற இடத்தில் சாப்பிடும் இடம். பின்னால் குழாய் பம்ப். தண்ணீர் பம்பில் அடித்து எல்லோரையும் காய் கால் அலம்ப சொன்னார். வரிசையாக வெராண்டாவில் உட்காரவைத்தார். எல்லோர் எதிரிலேயும் தையல் இலை தண்ணீர் தெளித்து. அருகே டம்பளர் நீர். ரெண்டு நிமிஷத்தில் உள்ளே இருந்து ஒருவர் சுடச்சுட ஆவி பறக்க ஒரு வாயகல பாத்திரத்திலிருந்து அன்னவட்டில் முழுக்க அரிசி உப்புமா, அதற்கு சைட் டிஷ் பாகற்காய் பிட்லை பரிமாறினார். அடுத்த நிமிஷமே இலைகள் காலியாயின. அத்தனை பசி எல்லோருக்கும். இன்னும் ஓரிரு கரண்டிகள் பரிமாற திருப்தியாக பசியாற சாப்பிட்டு முடித்த புலவர் குடும்பத்துக்கு இன்னொரு அதிர்ச்சி.

''பெரியவா உங்களை சாப்பிட்ட உடனே அழைச்சுண்டு வர சொல்லியிருக்கா''. இரவு 1.30 மணி.

புலவரும் குடும்பமும் இப்படி ஒரு தேவாம்ருத உணவை மட்டுமல்ல அதைவிட அம்ருதமான பெரியவா தரிசனத்தையும் எதிர்பார்க்கவில்லையே. கனவா இது ? புலவருக்கு பாட்டும் வரவில்லை. பேச்சும் வரவே இல்லை ஆனந்த நன்றிக்கு கண்ணீர் மட்டும் நிறைய வந்தது.

''மஹா சுவாமி இப்போது இங்கே நடந்த அவ்வளவும் எங்கள் பாக்கியம். நாங்கள் துளியும் எதிர்பாராதது. எங்கள் வருகையும் சரி; பசியும் சரி; உங்களுக்கு எப்படித் தெரியும் என்றே தெரியவில்லை” என்றார் தழுதழுத்த குரலில் புலவர்.

ஒரு பதிலும் இல்லை. ஒரு புன்னகைதான் பதில்.

''பெரியவா நாங்கள் தஞ்சாவூர் புறப்படுகிறோம்” என்று புலவர் நமஸ்கரித்தார்.

''படுத்துண்டுட்டு காலம்பற விடிகாலையில் போயேன்''

பெரியவா கட்டளைக்கு மறுப்பு ஏது. அன்றிரவு மடத்தில் படுத்து உறங்கிவிட்டு காலையில் போய்க்கொள்ளலாம்” என்று தீர்மானித்தார்கள்.

படுக்கச் சென்ற இடத்தில் சூடாக பால் வேறு!

புலவர் கூட வந்தவர்களில் கைக்குழந்தை ஒன்றும் அடக்கம். அதற்கு பால்தானே சரியான உணவு! அதற்கு என்ன ஏற்பாடு செய்வது அந்த நேரத்தில் என்று உள்ளூர ஒரு கவலை புலவர் மனைவிக்கு. அதுவும் இப்போது நிறைவேறியதே .

புலவர், பெரியவரின் கருணையையும் உதவியையும் எண்ணி நெகிழ்ந்துபோனார்.

இந்த சம்பவத் புலவர் புகழ்பெற்ற பட தயாரிப்பாளர் ஏ.கே. வேலன். திராவிட இயக்க ஹிந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு என்று பல போராட்டங்களில் ஈடுபட்டவர். ஆன்மிகத்தில் நிறைய கேள்விகளை கொண்டிருந்தவர். இவருக்கு எந்த உபன்யாசமும் செய்யவில்லை. உபதேசமும் செய்யவில்லை பெரியவா. அவர் வழி தவறு என்றோ ரியென்றோ கூறவில்லை. பெரியவர் மேல் புலவருக்கு மனதில் எங்கோ ஒரு மூலையில் மதிப்பும் மரியாதையும் மொட்டாக இருந்தது இன்றிரவு அது இதழ் விரிந்த பெரிய பக்திமலராய் மாறிவிட்டது.

பெரியவா போன்ற உண்மையான தவ ஸ்ரேஷ்டருக்கு எந்த கருத்தும் சம்மதமே. அவர் அன்பும் எல்லோரிடமும் சமமே. (இன்டர்நெட்டில் படித்த ஒரு சிறு விஷயத்தை விவரித்திருக்கிறேன்)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...