எனக்கு கிழவியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். படிப்பேன். ரசிப்பேன். நினைப்பேன். எழுதுவேன் உங்களுக்கு அனுப்புவேன்.
முதலில் சமீபத்தில் வந்து போன விநாயகர் மேல். பிள்ளையார் சுழிபோடாமல் எழுதும் வழக்கமில்லை.
யானை, குரங்கு, கடல் இவை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காதவை. குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம். கிழவிக்கு நாம் குழந்தைகள் தானே. அவளுக்கு பிடித்த அந்த யானையை நாமும் பார்த்து வணங்குவோம்.
ஆஹா நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பரிசுத்த மாணிக்கம் நீ. உனக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் போல் இருக்குமே. எப்படி உன்னை வெறுமனே பார்ப்பது. இதோ கொண்டுவந்திருக்கிறேன் பார் சுண்டக்காய்ச்சிய பால், அதில் பாதாம், முந்திரி பருப்புகள், நிறைய காட்டுத்தேன், உன்னுடைய ஸ்பெஷல் அயிட்டம் வெல்லம் . அதற்கு பெயர் உன் யானை மண்டை வெல்லம் தானே. இதெல்லாம் மொத்தமாக சேர்த்து கலக்கி கிட்டத்தட்ட சக்கரை பொங்கல் போல் உனக்கு நிறைய அளிக்கிறேன். நீ என்ன செய்கிறாய். பேசாமல் சாப்பிட்டு விட்டு தேங்க்ஸ் மட்டும் சொல்லாதே. எனக்கு அவசியம் தேவை இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ் செல்வத்தில் தேர்ச்சி . அதை அருள்வாயா?
இதை கிழவி அழகாக அவள் தமிழில் எளிமையாக கேட்கிறாள். கைகூப்பி இதை அவளோடு சேர்ந்து நாமும் வேண்டுவோம். அவளால் நமக்கும் ஆனை முகன் தருவான்.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
ஒருவனை அவன் புண்யம் பண்ணவன், இவன் மஹா பாபி என்று சொல்லும்போது அது அவன் செய்த முற்பிறவிகளில் தொடர் வினை பயன் என்று தெரியும். இதை நாம் மட்டுமா சொல்கிறோம். எல்லா மதத்திலும் அறிவோர் இதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆகவே புண்யம் செய்தால் இந்த வாழ்வில் சுகம் கிடைக்கும், இன்பமாக இருப்போம் என்பதால், நல்லதே செய்வோம், நினைப்போம், நடப்போம். நமக்கு புண்யம் செய்வதன் அவசியத்தை கிழவி எவ்வளவு அழகாக சொல்கிறாள் பாருங்கள்.
புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
சாதியினால் தான் நமது வாழ்வில் பெரும் துன்பம் பலர் அனுபவிக்கிறோம். உண்மையில் சாதியே கிடையாது அய்யா. ஆயிரம் உண்டிங்கு சாதி என்று பாரதி கூட அலுத்துப்போய் பாடினார். மனிதர்களில் வித்யாசமே கிடையாது. ஆண்சாதி பெண்சாதி என்பது உலகில் எல்லோருக்கும் இயற்கையாக
படை க்கு ம்போதே பண்ணின வித்யாசம்.
உண்மையில் சாதி ஒழியக்கூடாதா? வேண்டுமா?
சரி. ரெண்டு சாதி இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேல்சாதி கீழ்சாதி. போதுமா? யார் மேல்சாதி யார் கீழே?
இதோ கிழவியே அற்புதமாக விளக்கம் கொடுக்கிறாளே .
நீதி நேர்மை தவறாமல் நல்ல வழியில் உழைத்து திரட்டிய செல்வத்தை அது இல்லாமல் கஷ்டப்படும் வறியவர்களுக்கு அவர்கள் தேவை அறிந்து எவன் தானம் செயகிறானோ அவன்
தான்ஐயா மேல் சாதி. பணம் இருந்தும், தீயவழியில் சேர்த்தும் பிறர்க்கு உதவாமல் பேயாக காத்து, அதை சுயநலத்துக்கு மட்டுமே உபயோகிக்கிறவன் தான் அப்பட்டமான கீழ்சாதி. கொம்பினால் கூட அவனை தொடாதீர்கள். இது தான் உண்மையான சாஸ்திர நூல்கள் சொல்லும் பட்டயம்.
கிழவி அளித்த நாலு வரி அற்புதம் இது.
சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
காத்தடைத்த பொய்யான இந்த பொய்யுருவத்திற்கு ஏனோ மெய் என்று பெயர் தப்பாக கொடுத்திருக்கிறது. சகல துன்பங்களையும், துயரங்களையும் தேடிப்பிடித்து வரவேற்று தன்னுள் வைத்துக் கொள்ளும் பை இந்த இடும்பை ( இடுகின்ற பை) எனும் உடல். இது மெய்யல்ல பொய் என்று மறக்காமல் உணர்ந்து இப்போது பாசம் பந்தம் ஆசை பிணிகள் இந்த உடலை பிடித்து வாட்டாமல் ஏழை எளியோர்க்கு நிறைய தான தர்மங்கள் செய்யுங்கள். புண்யம், மோக்ஷம் எல்லாமே கிடைக்கும். தானே வந்து சேரும். அற்புதமான மூதுரை இந்த கிழவியின் சொல் ":
. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
இன்னும் நிறைய சொல்கிறேன்.
No comments:
Post a Comment