Sunday, September 3, 2017

வாழ்க்கை எனும் ஓடம்




வாழ்க்கை எனும் ஓடம்.. - J.K. SIVAN ..

'வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், தோல்வி, அதனால் குடிக்கிறேன் என்று தேவதாஸ்களாக மாற தேவையில்லை.

வாழ்க்கை என்பதே மேலும் கீழும் தூக்கிச் செல்லும், சுற்றி சுற்றி வர வைக்கும் ரங்க ராட்டினம். ரோலர் கோஸ்டர். நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே நாம் நாமாகவே இருக்க வேண்டும். மகிழ்ச்சி சந்தோஷம் என்பதெல்லாம் மல்லிகைப்பூவோ மாகாளி கிழங்கோ அல்ல கடையில் தேடி வாங்க. உன்னுள்ளே இருப்பதை எடுத்து உபயோகிக்க தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு கணமும் நாம் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் அப்படியே அனுபவிக்க செய்ய முடியும்.

''வாய்விட்டு சிரி நோய் விட்டு போகும்'' என்பார்கள். நாமும் சிரித்து எல்லோரையும் கூட சிரிக்க வைக்க முடியும். நரசிம்மராவ் அல்ல நமது பெயர்.

கிடைத்து இருப்பதோ அபூர்வமான அரிய மனித வாழ்க்கை. அதை எப்படி சந்தோஷமாக வாழமுடியும் என்பதற்கு சில வழிகள் சொல்லி இருக்கிறார்கள் அனுபவஸ்தர்கள். அவர்கள் சொல்வதை தான் கேட்போமே.

காலையில் காலண்டர் நாள் சீட்டு கிழிக்கும்போது ''அடேடே இன்று தான் எனக்கு மிஞ்சிய கடைசி நாளோ. இதை துளியும் வீணாக்காமல் சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும்'' என்று தோன்றவேண்டும்.

எதையும் அப்புறம் பார்த்துக்கலாம், நாளைக்கு என்று தள்ளிப்போடவே கூடாது. அதது அப்ப அப்பவே.

நல்ல விஷயங்களை 'டயரியில் ' அல்லது பழைய நோட் ஒன்றில் குறித்து வைப்போமே. நல்ல விஷயங்களை இப்படி சேகரித்து வைத்தால் பின்னால் சந்தோஷத்தை குட்டி போட்டு நிறைய தரும்.

குறுக்கு எழுத்து போட்டியில் சரியாக விடை எழுதி சின்னதாக ஆனந்தவிகடனில் என்றைக்கு பேர் வந்தது. எத்தனைபேரிடம் அதை கொண்டு காட்டினேன்? மூத்த பிள்ளை பிறந்ததும் முதலில்குழந்தை என்ன பேசிற்று?. மனைவிக்கு எத்தனை புடவை வாங்கினோம்?. எத்தனை முறை சினிமாவுக்கு கூட போவதை தவிர்த்தேன்?. சுப்பராமன் நூறு ரூபாய் கடன் வாங்கினானே திரும்ப பெற எத்தனைமுறை அலைந்தேன் அவர் வீட்டுக்கு?. விடாமல் சண்டை போட்ட அடுத்த வீட்டுக்காரமாமி கடைசியில் எப்போது என் வீட்டு வாசலில் குப்பை போடுவதை நிறுத்தினாள்?. அப்புறம் இதெல்லாம் ஞாபகம் வராது. இப்போதே எழுதி வைப்பது நல்லது. பத்து வருஷம் கழித்து படித்தால் சிரிப்பு வராமலா போகும்.
என்பெ ரிய தாத்தா எப்படி வாழ்ந்தார், நான் எப்படி வாழ்ந்தேன் என்றெல்லாம் பின்னாலே பேரன்கள் பேத்திகளுக்கு தெரிய வேண்டாமா. விவரம் தேவையில்லையா. கை ரிக்ஷாவில் எட்டணா கொடுத்து மாம்பலம் போனேன் என்றால் என்ன அர்த்தம் என்று முப்பது வருஷம் கழித்து பேரன் பேத்தி கேட்கும்போது அதை விளக்கி சொல்லும்போது எவ்வளவு சந்தோஷம் வரும்?

ராம தேசிகன் என்ற எனது உதவியாளனுக்கு ப்ரோமோஷன். சின்ன விழா செக்ஷனிலேயே. ஓமப்பொடி பாதுஷா பொட்டலம். சத்தார் கடை டீ . இது முக்கியம் இல்லை. என்னை பேச சொன்னார்களே. ராம தேசிகனை பற்றி எப்படி நாலு வார்த்தை அவனைப் பற்றி பேச பிரசவ வேதனையாக தவித்தேன். மூச்சடைத்தது. முகம் வியர்த்தது. கைகள் நடுங்கியது. கால் தள்ளாடியது. சொன்னதையே சொல்லுவதற்கு கை தட்டினார்கள். நான் பேசுவது நன்றாக இருக்கிறது என்கிறார்கள் என்று எப்படி தப்பாக எடுத்துக்கொண்டேன். இதெல்லாம் பின்னால் திரும்பி பார்க்க சந்தோஷமாக இல்லை?.

எவனாவது தப்பு செய்தால் அதை பெரிசாக நினைத்து சண்டை, சச்சரவு, ரத்த அழுத்தம் வேண்டாம். நான் கூட தான் பொழுது விடிந்தால் பத்துக்கு குறையாமல் தப்பு செய்கிறேன் என்று பெருந்தன்மை வேண்டும். சந்தோஷமாக இருக்கலாம். கோபம் வருகிற மாதிரி இருந்தாலே ஒரு டம்பளர் பானை தண்ணீர் தேடவேண்டும்.

''இதை செய்ய மாட்டேன், இது கடினம். என்னால் முடியாததை எப்படி செய்வது, பிறகு பார்ப்போமே முடியுமா?'' என்று காலம் கடத்துவது தவறு. ''உன்னால் முடியும் தம்பி'' அதற்கு தான் சொன்னதே.

எப்போதும் புதுமை விரும்பியாக இருப்போம். தெரியாததை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவோம். பேரன் பேத்தி கூட கேலி செய்யும். பரவாயில்லை. அதனிடம் கூட கற்றுக் கொள்வோம். சொல்லிக் கொடுக்கும்.

எப்போதெல்லாம் முடிகிறதோ நடப்போம். ஸ்கூட்டர் கார் நடக்க முடியாத தூரத்துக்கு என்று இருக்கட்டுமே.

ரெண்டு இட்டலியா ? போதுமே.
ஒரு செட் பூரி, ஒரு மசாலா தோசை ஒரு மசால் வடை .... இதெல்லாம் வேண்டாம். வயிறுக்கும் நல்லது. பர்ஸும் இளைக்காது .

காலை வேளையில் தோட்டத்தில் மொட்டை மாடியில், தெரு ஓரம் இயற்கையை ரசித்தவாறு, கண்ணுக்கு தெரியாத நமக்காக பாடும் ஏதோ ஒரு பறவைக்கு நன்றி சொல்லியவாறு, சிரித்து கலர் கலராய் நமக்கு குட் மார்னிங் சொல்லும் பூக்களுக்கு நன்றி சொல்லி ஒரு பிஸ்கட் தெருநாய்க்கு போடுவோமே.

மாலையில் நண்பர்களோடு பேசிக்கொண்டே பார்க்கில் சென்று மரத்தடியில் மோடியை பற்றி பேசுவோமே.

அடுத்தாத்து அம்புஜம் எத்தனை புடவை வாங்கினால் என்ன , கிட்டுமாமா கிம்பளம் வாங்கி அதெல்லாம் வாங்கி கொடுத்தால் நமக்கு என்ன. இதுவா முக்கியம்? நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறதே. காது நல்ல சங்கீதம் கேட்கட்டுமே.

அதோ ஏதோ ஒரு பெரிய பில்டிங் வாசலில் பிளாட்பாரத்தில் ஒரு கோணி பிளாஸ்டிக் பேனர் அடியே ஒரு சிறிய குடும்பமே வாழ்கிறதே. எப்படி சிரிக்கிறான் அந்த மூட்டை தூக்கி?. எப்படி சிணுங்குகிறாள், அவன் அவள் தலையில் பூ வைக்கும்போது? . அந்த குண்டு, சட்டையில்லாத குழந்தை சந்தோஷமாக மண்ணில் புரண்டு விளையாடுகிறதே. பணத்திலா இருக்கிறது சந்தோஷம்?.

யாருக்காக உதவினால் அவர்கள் அளிக்கும் நன்றி சிரிப்பு, தலையாட்டல் , வணக்கம் மனமார வார்த்தை இன்றி சொல்வது, எப்படி சந்தோஷத்தை தருகிறது. நிறைய கொடுப்போம். உதவ முடிந்தவரை எல்லோருக்கும் எப்படியாவது உதவுவோம். இதோ நான் எழுதவில்லையா?!!!!

ஒய்வு வேண்டுமென்றால் உடம்பே சொல்லும். கண் சொக்கும். முதுகு வலிக்கும். கை கால் ஓய்ந்து போகும். உடனே ஓடி உள்ளே சென்று கைகால் நீட்டி சுகமாக படுத்து தூங்கு. கொசு கடிப்பது கூட தெரியாது. உழைப்புக்கு பிறகு கிடைக்கும் தூக்கம் விலை மதிப்பில்லாதது.

நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம். அதை அப்படி உருவாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது. விட்டு கொடுத்தல், மற்றவர் செயலை பாராட்டுவது, ஊக்குவிப்பது, பிறர்க்கு உதாரணமாக திகழ்வது. மற்றவரை மதிப்பது மகிழ்விப்பது.இது வீட்டில் மட்டும் இல்லை, அலுவலகம் நட்பு வட்டாரத்தில் கூட உங்களுக்கு நல்ல பெயரை கொடுக்கும் மதிப்பை உயர்த்தும். சந்தோஷம் தரும்.

நல்ல நண்பனாக இருங்கள், நல்ல நண்பர்களை பெறுவீர்கள். அதுவே உங்கள் சொத்து. வாழ்வுக்கு வளம் தருவது. சந்தோஷம் அதில் கிடைக்கும் போனஸ்.

எனக்கு வயதாகிவிட்டது என்று நான் நினைப்பதே இல்லை. ஏதாவது ரூபத்தில் என் குடும்பத்துக்கு உதவிக்கொண்டு தான் வருகிறேன். நண்பர்களோடு பேசுகிறேன். சிரிக்க வைக்கிறார்கள். என்னால் முடிந்தால் நானும் அதை செய்கிறேன். பாடுகிறேன், பேசுகிறேன். படம் வரைகிறேன். படிக்கிறேன். இன்னும் என்ன தெரியும் எனக்கு? பொழுது போகவே இல்லையே என்று சொல்பவர்களை கண்டால் ஓடிவிடுகிறேன். நேரம் போதவில்லை எனக்கு. இது எல்லாம் பெருமைக்காக சொல்ல வில்லை. யாரிடமோ கற்றுக்கொண்டு என் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறேன். சோர்வு சோம்பல், இருக்கவே கூடாது. நோய் காத்துக்கொண்டிருக்கும் காலியான இடத்தை பிடிக்க. ஜாக்கிரதை.

சிரிக்க விஷயமில்லையானால் டிவி பாருங்கள் நிறைய சேன்னல்களில் அரசியல் வாதிகள் அள்ளி அள்ளி வீசுவதை கண்டும் கேட்டும் வாய் விட்டு சிரிக்கலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...