ரஸ நிஷ்யந்தினி J K SIVAN
ராமன் யார் தெரியுமா?
1 ஸாஸ்திரிகளின் முதல் குரு
நமது வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை எத்தனையோ. எண்ணற்ற மஹான்கள் சத்தம் போடாமல் இருந்த இடம் தெரியாமல் அநேக அற்புதங்களை செய்துவிட்டு மறைந்திருக்கிறார்கள். அவர்களை அறிந்தவர்கள் மூலம், அவர்களை பற்றி எழுதப்பட்ட சில விஷயங்கள் நம்மை அடைவதன் மூலம் நாம் அந்த மஹான்களைப் பற்றி அறிந்து புளகாங்கிதம், ஆனந்தம் அடைகிறோம். இவரைப்போல் இன்னொருவர் இல்லை என்று வாழ்ந்தவர்களில் ஒருவர் பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் . அவரைப் பற்றி சில விஷயங்களை அவர் கொள்ளுப்பேரன் ஸ்ரீ சுந்தர ராம மூர்த்தி எழுதிய ஒரு கட்டுரையில் தெரிந்து கொண்டேன்.
ரஸ நிஷ்யந்தினி - ஒரு நூறு வயது புத்தகமாக இருக்கும்போல தோன்றுகிறது. பருத்தியூர் பிரம்மஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற மஹான் எழுதியது. ஸமஸ்க்ரித ஸ்லோகத்தில். அதை அவர் நாடு பூரா பிரவசனம் பண்ணி எத்தனை பாக்கியசாலிகள் நேரடியாக காதுகுளிர கேட்டிருக்கிறார்கள்.
ரஸ நிஷ்யந்தினி பற்றி சொல்லுமுன் அதன் ஆசிரியர் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் பற்றி நான் அறிந்தவரை சொல்கிறேன்:
நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் குருவிடம் சென்று கல்வி கற்கும் பழக்கம் இருந்தது. அதற்கும் முன்பு குருகுல வாசம். குருவுடன் அவர் இல்லத்தில் தங்கி சேவை செய்து கல்வி பெறுதல்.
ஆரம்பக்கல்வி அப்பா ராமசேஷ ஸாஸ்த்ரியிடம் வீட்டிலேயே பெற்று, ஏழாம் வயதில் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதரிடம் சிஷ்யனாக சேர்கிறார். இந்த தீக்ஷிதரை அனைவரும் மரியாதையோடு ''முத்தண்ணாவாள்'' என்று அழைப்பார்கள்.
கிருஷ்ண ஸாஸ்திரியோடு அவர் அப்பா வைத்யநாத தீக்ஷிதரை அணுகி மகனை சிஷ்யனாக சேர்த்த அன்று தீக்ஷிதர் தனது வீட்டு திண்ணையில் மற்ற சிஷ்யர்களுக்கு காளிதாசனின் ரகு வம்ச மஹா காவ்ய ஐந்தாவது சர்க முதல் ஸ்லோகம் அர்த்தம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
तमध्वरे विश्वजिति क्षितीशं निःशेषविश्राणितकोशजातम्|
उत्पातविद्यो गुरुदक्षिणार्थी कौत्सः प्रपेदे वरतन्तुशिष्यः॥ ५-१
tamadhvare viśvajiti kṣitīśaṁ niḥśeṣaviśrāṇitakośajātam
utpātavidyo gurudakṣiṇārthī kautsaḥ prapede varatantuśiṣyaḥ || 5-1
இதற்கு அர்த்தம்: ரவி வம்ச ராஜா ரகு ஒரு யாகம் பண்ணினான். விஸ்வஜித் யாகம் என்று அதற்கு பெயர். அந்த யாகம் முடிந்தபின் வந்திருந்த பிராமணர்கள் அனைவருக்கும் வாரி வாரி அனைத்து செல்வங்களையும் தான தர்மமாக வழங்கினான். வரதந்து எனும் ஒரு ரிஷியிடம் பாடம் கற்று முடித்த மாணவன் கௌஸ்தன் என்பவன் ராஜாவின் யாகத்துக்கு ரொம்ப லேட்டாக தானம் பெற வந்தபோது எல்லாம் காலி. கௌஸ்தன் ராஜாவிடம் நிறைய தானம் கிடைக்கும். அதை வாங்கி தனது குரு வரதந்துவுக்கு குரு தக்ஷிணையாக தரலாம் என்று எண்ணம். பாவம் ஏமாற்றம்.
சிறுவன் தனது குரு வரதத்துவுக்கு குரு தக்ஷிணை கொடுக்க இந்த யாகத்தில் ராஜா ரகுவிடம் நிறைய தானம் பெற வந்ததை சொல்கிறான். இதை அறிந்ததும் ராஜா ரகு நிலை குலைகிறான். கண்களில் நீர் மல்க:
''என் மகனே, நான் என்ன செய்வேன் அப்பா. நீ வந்த இந்த நேரத்தில் என்னிடம் எதுவுமே இல்லையே . என்னிடம் இருந்த எல்லாவற்றையும் ஏற்கனவே தானம் செய்துவிட்டேனே'' என்று ராஜா வருந்துகிறான்.''
தீக்ஷிதர் பாடம் சொல்வதை நிறுத்தினார்
'இந்த பயல் உம்ம புத்ரனா? பார்க்க சூட்டிகையா இருக்கானே?
''பெரியவா ஆசிர்வாதம், ஸ்ரீ ராமன் அனுக்கிரஹம். என் பிள்ளை இவன். எனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கேன். இனிமே இவன் உங்களைப் போல பெரியவா கிட்டே சிக்ஷை பெறணும்னு அழைச்சுண்டு வந்திருக்கேன்'' என்கிறார் பவ்யமாக சாஸ்திரிகளின் அப்பா.
''பயலே இங்கே வா இதை வாசி....''- தீக்ஷிதர். கையிலிருந்த சுவடியை பையனிடம் கொடுத்தார்.
மேலே கண்ட ஸ்லோகத்தை சிறுவன் கிருஷ்ணன் வாசித்தான்.
இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை (மேலே கொடுத்திருக்கிறேன்) முத்தண்ணாவாள் எடுத்துச் சொன்னதும் சிறுவன் கிருஷ்ணன் தீக்ஷிதருக்கு நமஸ்காரம் செயது ஒரு வார்த்தை சொல்கிறான்:
''குருநாதா, நான் கல்வி கற்க தங்களிடம் வந்த நேரமே சரியில்லை. குரு தக்ஷிணை கொடுக்க வழியில்லாத கௌஸ்தன் நிலை தான் எனக்கும். கொஞ்சம் நல்ல நிலை அடைந்ததும் தங்களிடம் வருகிறேன்'' என்கிறார் சிறுவனான கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் .
''அதெல்லாம் இல்லை அப்பனே, நீ இன்றுமுதல் என்னிடம் சிஷ்யனாக கல்வி கற்கப்போகிறாய். பின்னால் ரகு குபேரனைப் போல செல்வம் பெற்று நிறைய தானம் கொடுத்து கௌஸ்தனை திருப்தியாக அனுப்பி கௌஸ்தனும் தனது குரு வரதந்து ரிஷிக்கு குரு தக்ஷிணை சமர்பித்ததுபோல் நீயும் சில காலத்தில் நிறைய செல்வம் பெற்று தான தர்மம் செய்யப்போகிறாய் '' என்று ஆசீர்வதிக்கிறார் முத்தண்ணா. (இவர் தான் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் அப்பா)
அன்றுமுதல் அவர் சிஷ்யனாகி காவியம், நாடகம், அலங்காரம், வேதாந்த சாஸ்திரம் எல்லாம் கற்று சிறந்தார் கிருஷ்ண ஸாஸ்திரி .
No comments:
Post a Comment