Wednesday, December 4, 2019

SHEERDI BABA



மனிதருள் ஒரு தெய்வம்   J K  SIVAN 
ஷீர்டி பாபா  

                                                    
         கிருஷ்ணனும்   பாபாவும் ஒருவரே   

ஷீர்டி  பாபா  தான் மறைந்த மறுநாளே  சிம்லாவில்  க்ரிஷ்ணப்ரியாவின் வீட்டில் தேநீர் பருகினார் எங்கு எழுதியிருந்தேன்.  அவர் மலைச்சாலையில் மெதுவாக கடைத்தெரு வீதியில் நடக்கும்போது  சாலை ஓரமிருந்த ஆழமான பள்ளத்தாக்கில்  தடுக்கி விழுவார் என்று எதிர்பார்த்த ஒரு சாலை பணியாளன் ஓடிவந்து அவரை நெருங்கும்போது அவரைக் காணவில்லை என்று சொன்னது  கவனமிருக்கலாம்.  

பாபா  விடை பெறுமுன்பு  சிம்லாவில்  க்ரிஷ்ணப்ரியாவிடம் இன்னொரு விஷயமும் சொல்லியிருக் கிறார்.  
அவள் காதருகே  ரகசியமாக    ''1926ல்  என்னைப்  பார்..'''    1926லா.?.  எட்டு   வருஷங்கள் கழித்தா?  எங்கே  எப்போது, எப்படி அவரை பார்க்கமுடியும்?

பாபாவின் சிலையை   ஷீர்டியில் பல வருஷங்களுக்கு பிறகு  ஒரு நாள்  கிருஷ்ணப்ரியா தரிசிக்கும்போது  மனதில்  தோன்றியதை கேட்டாள் ''பாபா  நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கு மறந்து விட்டதா?''
பாபாவின் பதில்  உடனே அவளுக்குள் பதிந்தது: 

''நீ தான்  மறந்து விடுபவள்.  நான் கொடுத்த வாக்கை மறப்பதில்லை''

ஷீர்டியில்  பிளேக்  PLAGUE  நோய் பரவி இருந்த காலம். அங்கு செல்லவே  பயப்படுவார்கள்.  அந்த நோய்க்கு பலியானவர் பலர். மருந்து கண்டுபிடிக்காத காலம்.  தாதா என்பவர் மனைவி தனது குழந்தையோடு ஷீர்டி வந்து பாபாவை தரிசித்து அங்கேயே  தங்க எண்ணினாள் .  அவள் கணவனுக்கு அவளை குழந்தையோடு ஷீர்டி அனுப்ப இஷ்டமில்லை. அரை மனதோடு அனுப்பினான். 

ஷீர்டி வந்த ரெண்டாம் நாள்  அந்த குழந்தைக்கு  ஜுரம் கண்டது.   ஐயோ என் கணவன் வார்த்தையை நான் தட்டிவிட்டேனே.  என் குழந்தையை  காப்பாற்றவேண்டும்  தெய்வமே  என்று வேண்டிக்கொண்டாள். பாபாவின் காலடியில் குழந்தையை போட்டாள். ''பாபா  பாபா'' என்று  கதறினாள்  வார்த்தை வரவில்லை.

''எதற்கு வந்தாய் இங்கே ?'' என்று கேட்டார் பாபா.

''உங்களை தரிசிக்க. குழந்தைக்கு ஆசி பெற''

'''குழந்தைக்கு ஜுரமா,  உடலெல்லாம்  கட்டிகள், கொப்புளங்கள் இருக்கிறதா?''

''குழந்தைக்கு மட்டும் இல்லை பாபா, எனக்கும் தான்... நீங்களே  பாருங்கள் ''  அந்த பெண்  தன்  மேலே போர்த்தியிருந்த  அங்கியை கழற்றி  காட்டினாள்.  

அருகே  இருந்த  மஹாலஸாபதி  '' ஐயோ  பாபா,   பெரிய பெரிய  கொப்புளங்களாக, கட்டிகளாக உடல் பூரா  இருக்கிறதே''     என்கிறார்.   பாபா  சாய்கிறார் ...  மஹாலசாபதி   பாபாவை தொடுகிறார்.  

எப்படி  பாபாவின் உடலில் திடீரென்று  அனல்பறக்கும் சூட்டில் ஜுரம், 

''பாபா, என்னால் உங்களுக்குமா ஜுரம் தொற்றிக்கொண்டது '' என்று வருந்தி  அழுதாள் அந்த தாய்.
 யார் உங்களை காப்பாற்றுவது?

''எல்லோரையும்  காப்பாற்றுபவனை  வேறுறொவர் காப்பாற்ற தேவையா?'' என்கிறார்  பாபா.  

''என்னை மன்னித்துவிடுங்கள் பாபா. எனக்கு உங்களைப்பற்றி தோன்றிய   கவலையால் சொல்லிவிட்டேன் என்றாள்.

சில நிமிஷங்களில்  பாபாவின் உடலில் ஜுரம்  குறைந்துவிட்டது. அந்த குழந்தைக்கும்  அவளுக்கும் கூட  ஜுரமோ உடலில் கொப்புளங்களோ, கட்டிகளோ  காணோம்.  பாபாவை நமஸ்கரித்து   ஊருக்கு திரும்பும் முன்பு,  மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொண்டாள் .

''பாபா, என் ஜுரத்தை, என் குழந்தை ஜூரத்தை  நீங்கள் எடுத்துக் கொண்டீர்களா''

பாபா  பதில் பேசவில்லை,  அவரது அபய  ஹஸ்தம்  அவளை வழியனுப்பியது.  பாபாவின் மேல் உள்ள பரிபூர்ண விசுவாசத்தால், நம்பிக்கையால்,  பக்தர்கள் அவர் சொல்லை தட்டுவதில்லை.

செப்டம்பர் 28, 1918ல்  பாபாவுக்கு ஜுரம் கண்டது.  பதினேழு நாட்கள்  அவரை வாட்டியது.   பிறகு அவர் சாதாரணமான நிலைக்கு வந்தார். 

அக்டோபர்  15 பாபாவை காணோம்.  எங்கே போனார்  மாயமாக  பாபா?  என்று  நானா,  காகா,  தாஸ், லக்ஷ்மணராவ்  ஆகியோர் ஆளுக்கொரு பக்கம்  தேட ஆரம்பித்தார்கள். எங்கெல்லாம் தேடியும் காணோம்,  அருகே ஒரு கிணறு  அதில் விழுந்திருப்பாரோ என்று  எட்டிப்பார்த்தார்கள்.  இல்லையே.?  சாயந்திரம் எல்லாரும் பல திசைகளிலிருந்து திரும்பி ஒரு விஷயமும் கிடைக்காமல்  சத்திரத்துக்கு திரும்பி வந்தபோது தனது அறையில் இருந்து  அவர்களை வரவேற்றார் பாபா. 
  
''எங்கெல்லாம்  என்னை தேடி செண்றீர்கள்?  நான் ஒரு இடத்தில் இருப்பவன். க்கிறேன் . எல்லா பரிசுத்த  இதயங்களிலும். நீங்களோ எங்கெல்லாமோ அசுத்தமான இடத்தில் என்னை   தேடுகிறீர்கள்.  நான் எப்படி உங்களுக்கு கிடைப்பேன்?'' என்கிறார் அவர்களிடம்.  

எழுந்து உட்கார்ந்தார். அன்றே  பாபா  காலமானார்.  அவரது  மறைவை தொடர்ந்து இஸ்லாமியர் அவர் உடல் அவர்களுக்கு சொந்தமானது என்றார்கள் .  ஹிந்துக்கள்  எங்களுக்கு தான் பாபா  என்கிறார்கள்.  பாபா  ''அல்லா மாலிக்''  என்றும் சொல்வார் ''ராமா  மாலிக்,  கிருஷ்ணா மாலிக்'' 
 என்றும் சொல்வார். 
36 மணிநேரம் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.  சர்ச்சை குழப்பத்தை உண்டுபண்ணக்கூடாது தடுக்கவேண்டும் என்று  ஜில்லா கலெக்டர், போலீஸ்  உயர் அதிகாரி, மற்ற  அதிகாரிகள் எல்லோரும் வந்துவிட்டனர். 

 ஷீர்டி வாசிகள் எல்லோரும் ஒன்று திரண்டனர் . வெள்ளைக்கார ஆட்சி நடந்த காலம்.  முழுமனதாக  பெரும்பாலோர் ஹிந்து சம்பிரதாய  முறைப்படி  இறுதி சடங்குகள் நிறைவேறட்டும் என்று முடிவெடுத்தார்கள்.  பூட்டி என்பவர் கட்டிய  முரளிதரன்  கோவிலில்  பாபா  சமாதி இன்றும் நாம் வழிபடும்  சாய்பாபா  ஆலயமாக  இருக்கிறது. 

சிம்லாவில்  மாதாஜி கிருஷ்ண பிரியா வீட்டில் கிருஷ்ணன்படம், ஷீர்டி சாய்பாபா பாதாம் அருகருகே வைக்கப்பட்டு மலர் மலைகள் சாற்றி இருந்தது.  கிருஷ்ணன் மேல் இருந்த மாலை சாய்பாபா படத்திற்கு தானாகவே  மாறியது.  சாய்பாபா  படத்தில் இருந்த மாலை கிருஷ்ணன் மேல் சென்றது.  கிருஷ்ணன் வேறு பாபாவேறு அல்ல என்ற உண்மையை இந்த நிகழ்ச்சி  நிரூபித்தது.  அங்கு கூடியிருந்தோர்   இந்த சம்பவத்தை கண்ணார கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள். இன்னொரு ஆச்சர்யமும் மறுநாள் காத்திருந்தது. முதல் நாள் கிருஷ்ணன் மேல் இருந்த மாலை மறுநாள் காலை காணோம். அது பூட்டி என்பவர் கட்டிய முரளிதரன்


 கோவிலில் அமைந்த சாய்பாபா சமாதி மேல் அல்லவோ இருந்தது!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...