திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
31 குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே
ஆதி சேஷன் நாராயணின் நிழல் எனலாம். இணை பிரியாதவர் விஷ்ணு ராமனாக அவதரித்தபோது லக்ஷ்மணனாக இக்கூடவே 14 வருஷம் தூக்கமே இல்லாமல் உடன் இருந்தவர். கிருஷ்ணனாக அவதரித்தபோது பலராமனாக. அவதாரம் எடுக்காமல் பாற்கடலில் ஓய்வெடுத்தபோது படுக்கையாக. ஆதிசேஷனின் ஒரு பெயர் அனந்தன். விஷ்ணு பாற்கடலில் ஆதி சேஷன் மேல் படுக்கும்போது அது அனந்தசயனம்.
''அர்ஜுனா, சர்ப்பங்களில் நான் ஆதிசேஷன்...''என்கிறார் கிருஷ்ணன் (கீதை 10-20). நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பொய்கை ஆழ்வார் ''முதல் திருவந்தாதி'' யில் ஒரு பாசுரம் அற்புதமாக இயற்றியிருப்பது இங்கு பொருத்தமானது.
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு
விஷ்ணு எனும் நாராயணன் பாற்கடலில் மிதப்பதற்கு தெப்பம், கப்பல், படகு எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அது ஆதிசேஷன். நாராயணன் எங்கு எப்போது நடந்து போய்கொண்டிருந்தாலும் அவருக்கு ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளால் படமெடுத்து பாதுகாப்பது தான் குடை. எங்காவது உட்கார்ந்தால் மெத்து மெத்தென்று சிம்மாசனம் போல் . சேஷாசனம் . நடக்கும்போது காலுக்கு பாதுகை. இப்படி யாராவது ஒருவரை நமக்கு தெரியுமா ? எங்கும் எதிலும் எப்போதும், எப்படியும் இருப்பவர் நாராயணன் என்றால் அவரோடு இணைந்து இருப்பவர் ஸ்ரீ ஆதிசேஷன்.
ராமானுஜருக்கு பதில் சொல்லும்போது திருக்கோளூர் பெண் பிள்ளையின் நினைவில் நின்றவரும் அதே ஆதி சேஷன் தான் இல்லாவிட்டால் இப்படி சொல்வாரா? ''நான் என்ன ஆதிசேஷன் மாதிரி ஸ்ரீமந் நாராயணனுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் ஏதாவது ஒரு சேவையாக செய்தவளா? நான் எப்படி இந்த திருக்கோளூர் புண்ய பூமில் வசிக்க இயலும்?'' என்று தானே பளிச்சென்று கேட்டாள்.
No comments:
Post a Comment