யாத்ரா விபரம் J K SIVAN
சுரைக்காய் ஸ்வாமிகள்
நாள் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. ஒரு வருஷம் ஆகப்போகிறது இதை எழுதி.
ஸ்ரீ சைலம், திருப்பதி திருச்சானூர் நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, சென்னை என்று பயணம். எல்லாம் காரிலேயே. திருச்சானூரில் மனம் நிறைய அலர்மேல் மங்காவின் தரிசன காட்சியை சந்தோஷத்தை நிரப்பிக்கொண்டு காற்றோட்டமாக சென்னையை நோக்கி செல்லும் அருமையான ரஸ்தாவில் பயணித்தோம்.
திருப்பதியிலிருந்து கிட்டத்தட்ட நாற்பது கி.மீ. தூரத்தில் போகும் வழியில் தான் இருக்கிறது ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் ஆலயம். அது இருக்கும் ஊர் நாராயணவனம். வனம் பேரில் தான் இப்போது இருக்கிறது. எங்கும் கலர் கலராக வீடுகள் இன்னும் பிளாட்டாக மாறாத பசுமை குறைந்த வயல்கள். திருமலை ஸ்ரீனிவாசன் திருச்சானூர் பத்மாவதியை கையை பிடித்து அழைத்துக்கொண்டு திருச்சானூர் சென்றபோது எங்கும் அடர்த்தியான மரங்கள் நிறைந்த வனமாக இருக்கவேண்டும். இந்த இடம் அதனால் தான் நாராயணனின் பெயரை தாங்கி நாராயணவனமாகியது.
இங்கு தான் அந்த ஆகாசராஜன் பெண் பத்மாவதிக்கும் வகுளாதேவி வளர்த்த ஸ்ரீனிவாசனுக்கும்
தெய்வத் திருமணம் நடந்தது. அதனால் தான் ஸ்ரீனிவாசன் கல்யாண வேங்கடேஸ்வரன் . காரில் சென்று கொண்டிருக்கும்போது தூரத்தில் திருமலைகள் ஏழின் எழில் தொடர்கள் அழகாக தெரிந்தன. அங்கு சென்று நின்று, ஏழுமலை மலைமேல் தானும் நிற்கும் அவனை தரிசித்தது மனதில் மீண்டும் தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த இனிய மலைகள் மறைந்து கொண்டே வந்தன. இந்த நாராயண வன கல்யாண வெங்கடேசன் ஆலயம் பல ஆயிரம் வருஷங்கள் வயதானது. அமைதியாக இருக்கும் தெலுங்கு தேச ஐந்து மாட கோவில். முதலில் இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர் பத்மாவதியின் சகோதரனும் ஆகாச ராஜன் புத்ரனுமான இளவரசன். இது சூர்ய வம்ச ராஜாக்கள் ஆண்ட நகரம்.
நாராயணவனத்தில் நான்கு கோவில்கள் இருக்கின்றன. ஸ்ரீ பத்மாவதி அம்மவாரி கோவில். ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ராமுலவாரி கோவில்.ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில். ரங்கநாயகுல ஸ்ரீ சுவாமி கோவில். T T D நிர்வாகம் தான் இதை பராமரிக்கிறது.
ஒரு பழைய விஷயம் இங்கு சொல்லவேண்டியிருக்கிறது. எனது சின்ன வயதில் என் வீட்டில் என் தாயார் தகப்பனார் அடிக்கடி வீட்டில் சுரைக்காய் ஸ்வாமிகள் என்று பேசிக்கொண்டிருப்பது ஞாபகம் வருகிறது. அது என்ன சுரைக்காய் மாங்காய் தேங்காய் ஸ்வாமிகள் என்று யோசிக்கிறீர்களா. அப்படித்தான் எனக்கும் அப்போது தோன்றியது. எங்கள் வீட்டில் பூஜை அறையில் சுரைக்காய் ஸ்வாமிகள் படம் என் தாயார் வைத்திருந்த ஒரு சின்ன கருப்பு வேலை படத்தை பார்த்த நினைவு இன்னும் 75 வருஷங்களுக்கு பிறகும் இருக்கிறது. தலையைவிட தலைப்பாகை பெரியது. இந்த கோவிலில் அவர் படத்தை பார்த்ததும் சட்டென்று நினைவுக்கு வந்தது.
சுரைக்காய் பிடித்து சாப்பிடுவதால் அந்த பேர் வாங்கவில்லை அவர். எப்போதும் காய்ந்த சுரைக்காய் ஓட்டை தண்ணீர் குடிப்பதற்கும் உண்வை சாப்பிடவும் பாத்திரமாக உபயோகித்தவர். அது தான் கப்பரை . தினமும் தெருக்களில் செல்வார். எப்போது தோன்றுகிறதோ அப்போது யார் வீட்டிலாவது நுழைந்து உணவும் தண்ணீரும் பெறுவார். அவர்கள் வீட்டில் அமோகமாக செல்வம் கொழிக்குமாம் . நினைத்து நடக்குமாம். கவலைகள் துன்பங்கள், நோய்கள் தீருமாம். சித்தர்களை பற்றி வரையறுத்து இப்படி தான் இருப்பார்கள், செய்வார்கள் என்று எதுவும் சொல்லவே முடியாது. சித்தன் போக்கு சிவன் போக்கு அல்லவா. சக்திகள் நிரம்பியவர்கள் என்று மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது.அவர் தம் வீட்டுக்குள் நுழைய மாட்டாரா என்று எண்ணியவர்கள் ஜாஸ்தி.
சுரைக்காய் சித்தரோடு கூடவே இருந்த ஒரு பக்தர் செங்கல்வராய முதலியார். சுரைக்காய் சித்தரை சந்தித்து அருள் பெற்ற பக்தர்கள் அனுபவங்கள் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார். 1911 இல் தெலுங்கில் ஒரு நூல் வந்தது. அது ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழி பெயர்ந்தது. சித்தரை ''சுரைக்காய் இராமசாமி'' என்று சொல்லியிருக்கிறது. இரு நாய்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வார். குடும்பம் இல்லாதவர். உருவத்தில் இவர் சற்றே குட்டையானவர், மாநிறத்தவர். கிழிந்த உடையும், பெரிய தலைப்பாகையும் அணிந்திருப்பார். அவர் பேசும் சொற்கள் எளிதில் புரியாது. உள்ளர்த்தம் வேறாக இருக்கும். சமாதி அடையும்போது வயது இருநூறு என்பார்கள். சரியா தப்பா என்று யாருக்கும் இன்னும் கூட தெரிய வழியில்லை. தபோவனத்த்தில் திருவண்ணாமலை பகுதியில் ஞானானந்த ஸ்வாமிகள் 350 வருஷங்களுக்கு மேல் வயதானவர் என்பார்கள் அவர் 50-60 வயதினர் மாதிரி ரவுண்டாக இருப்பவர் .
திருப்பதிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து திருவள்ளூரில் ஒரு கையில் கருடனை ஏந்திக் கொண்டு செல்வார் என்றும் ஒரு கதை உண்டு. சான்றுகள் வழக்கம்போல நமது நாட்டில்
என்றுமே ஒன்றுமே இல்லை. எவ்வளவோ உன்னதமான விஷயங்களை எல்லாம் இழந்தவர்கள், மறந்தவர்கள் மறைத்தவர்கள் , தொலைத்தவர்கள் நாம்.
ஓரிரவு 12.30 மணிக்கு சுரைக்காய் சித்தர் ஓர் ஏழைப்பெண் இறக்கப் போகிறாள்! குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள்! உடனே விரைந்து சென்று அவளைக் காப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டே சொன்னார். உடனே அவரது பக்தர்கள் அங்கிருந்த தோட்டத்தின் தொலைவான மூலையில் இருந்த ஒரு குளத்தில் சென்று தேடியபோது அங்கே எவரும் இருக்கவில்லை. ஓடிச் சென்று சித்தரிடம் தெரிவித்தபோது தவறான இடத்தில் தேடி இருக்கிறீர்களே. என்று கோபித்து வேறு ஒரு தொலைவிலுள்ள குளத்தைப் பற்றிய விவரம் சொல்ல அங்கே விரைந்து சென்று தேடியபோது ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியாக குளத்தின் ஆழமான பகுதியில் அந்த நள்ளிரவில் குளத்தில் மூழ்கிவிட முயல்வதை பார்த்த அவர்கள் அவளை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள் என்று ஒரு சேதி.
சித்தர் சமாதி அடைவதற்கு சில மாதங்கள் ஒரு பக்தர் அவரை தரிசித்து விடை பெறச் சென்றபோது மறுபடியும் ''ஊருக்கு போகிறேன், மீண்டும் எப்போ உங்களை தரிசிக்கிறது?'' என கேட்க, ”சித்திரத்தில் இங்கே வைத்திருக்கும். என் படத்தைப் பாரேன் '' மறைமுகமாக தான் சமாதி அடையப்போவதை தெரிவித்தார் என்கிறார்கள். அந்த படத்தை தான் நானும் பார்த்து மேலே விவரித்தேன். .
ஓரு கிழவி தன் பேத்தியை அழைத்து வந்து சித்தரிடம் காண்பித்தாள். நெடுநாள் காய்ச்சல். பெண் மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்தாள். வைத்தியர்கள் கைவிட்டு விட்டனர். சுரைக்காய்ச் சித்தர் அப்பெண்ணை ஆசிர்வதித்து தரையில் இருந்த மண்ணை எடுத்து மருந்தாக கொடுத்து '' இதை சாப்பிடு'' என்கிறார். ஜூரக்காரி அதை விழுங்கினாள். நோய் அகன்று பெண் சரியானாள் .
ஒரு துணி வெளுக்கும் வண்ணான் ராஜ பிளவை carbuncle வந்து துடிக்க அவனை ஆசிர்வதித்துக் கழுத்திலும் முதுகிலும் உள்ள பிளவையில் ''புளியை அரைத்து தடவு .சரியாயிடும்'' எனச்சொல்ல அவ்வாறே செய்தவனுக்கு பூர்ண குணம். அக்காலத்தில் ரத்தகுழாய் நரம்பில் இப்படி ரத்த கட்டி வந்து அதை ரண சிகிச்சை செய்யும் வசதி கம்மி. கட்டியால் இப்படி மரணமடைந்தோர் அநேகர்.
1902 ஆகஸ்ட் மாதம் சித்தர் சென்னையில் ஒரு வாரம் தங்கி '' நேரமாகிவிட்டது. நீங்கள் எல்லாம் இங்கேயே இருங்கள்'' என்று கூட இருந்தோரை விட்டுவிட்டு புருஷோத்தம நாயுடுவுடன் நாராயணவரத்திற்கு போக இரவே புத்தூர் அடைந்து தங்கினார். அடுத்தநாள் ஒரு பஜனை கூட்டத்துடன் சேர்ந்துகொண்டு பாடல்கள் பாடிக்கொண்டு நாராயணவரம் அடைந்தார்.
புருஷோத்தம நாயுடு, பாப்பைய செட்டி ஆகியோரிடம் ‘நான் நாளை மறுநாள் என்னுடைய ஊருக்குப் போகிறேன்’ என்றார். அன்று இரவு தம் தாகத்தைத் தணிக்க 10 படி தண்ணீர் குடித்தார்.
மறுநாள் இரவு திடீரென்று சுரைக்காய் ஸ்வாமிகள் ''என் மேல் நிறைய ஜலம் ஊற்று'' என்கிறார். புருஷோத்தம நாயுடு 150 குடங்கள் தண்ணீர் கொண்டுவந்து அவர்மேல் ஊற்றினார். அப்போது நள்ளிரவு 12 மணி. சித்தர் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புருஷோத்தம நாயுடுவிடம் ''தேங்காய் கற்பூரம் இருக்கா'' ? என கேட்டார். நாயுடு பாப்பைய செட்டி இருவருக்கும் தெரிந்துவிட்டது. சாமியார் சமாதியாகப் போகிறார் என்று.
மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு தான் விடைபெறப்போவதாக சித்தர் சைகை காட்டி வாய்திறவாது அபயஸ்தம் காட்டி தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்று'' என ஜாடை காட்டினார். அவ்வாறு செய்தபின் புருஷோத்தம நாயுடுவின் மேல் மெதுவாகச் சாய்ந்தார். இறைவனோடு ஒன்றிவிட்டார்.
அடுத்தநாள் ஏற்கெனவே வழியில் வளர்ந்து இருந்த நாகதாளிச் செடிகளை அகற்றி அங்கிருந்த குழிகளில் கூழாங்கற்களையும் மணலையும் நிரப்பிச் சீர்திருத்தி வைத்திருந்த நிலத்தில் வெட்ட வெளியில் ஸ்வாமிகளின் உடல் வைக்கப்பட்டு சமாதி நிறுவப்பட்டது. கோவில் உண்டானது.
இதெல்லாம் செங்கல்வராய முதலியார் புத்தகத்தில் வரும் விஷயங்கள். ஒரு ருசிகர தகவல் வேறு இருக்கிறது. ஏழாம் எட்வர்டு இங்கிலாந்து மன்னருக்கு (9th August 1902) முடிசூட்டிய நாளில் சுரைக்காய் சித்தர் சமாதி அடைந்தார்.
நான் சென்றபோது நிறைய பக்தர்கள் சித்தரின் நினைவாக சுரைக்காய்களை கொண்டுவந்து அவர் சமாதி கோவிலில் கட்டுவதை பார்த்தேன்.
நாராயணவனம் மெயின் பாதையில் இருப்பதால் நிறைய பஸ் வசதி இருக்கிறது. புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து மெதுவாக ஒரு சில கி.மீ. நடந்தும் செல்லலாம். சென்னையிலிருந்து சென்றால் ஏறக்குறைய 100 கி.மீ. இங்கிருந்து சற்று தூரத்தில் கைலாச கோனை நீர்வீழ்ச்சி இருக்கிறது. தண்ணீர் அதிகம் இல்லை.சொட்டு சொட்டு தான்.
இங்கிருந்து இன்னும் தள்ளி சென்றால் நாகலாபுரம் வரும். அதற்கு சென்றுகொண்டிருப்பதால் அதை அடைந்ததும் அது பற்றி பிறகு சொல்கிறேன்.
No comments:
Post a Comment