பேசும் தெய்வம் பாகம் 3 J K SIVAN
அம்பா தான் அம்மா
அம்பா வேறு அம்மா வேறு இல்லை. அவளுக்கு ஆயிரக்கணக்கான பெயர்கள். ஆயிரக்கணக்கான உருவங்கள். உண்மையில் அவளுக்கு உருவமே இல்லை பெயரே இல்லை. எதற்காக பிறகு அத்தனை பெயர்கள் உருவங்கள்? நமக்காக தான்? குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயர் வைத்தாலும் குச்சு சில்லு, பட்டு, ஜில்லு என்று ஆசையாக ஆயிரம் பெயர்கள், விதம் விதமான ஆடை, டிரஸ், சிங்காரம் என்று ஏன் பண்ணுகிறோம். ஆசையில் தானே. ஜகத் ரக்ஷகிக்கு நாம் குழந்தைகள் என்றாலும் அவளை நாம் பாலா முதல் பவானி வரை வெவ்வேறு உருவத்தில் பார்த்து மகிழ்கிறோம். கூப்பிட்டு நாமங்கள் ஆயிரக் கணக்கில் சொல்லி சந்தோஷிக்கிறோம்.
ஒருவருமே அம்பாளை பார்த்ததேயில்லை . ஆனாலும் வெவேறு படங்கள், கலர்கலராக அவளை வரைகிறோம், சிலை வடிக்கிறோம். வணங்குகிறோம். எதுவுமே கண்ணைப் பறிக்கிறமாதிரி தான் இருக்கிறது. எத்தனை தடவை பார்த்தாலும் மேலும் மேலும் பார்க்க துடிக்கிறோம். பளபளவென்று ஜொலிக்கும் ஆபரணம், வைர டால் அடிப்பவள் அவள். அம்பாளோ நிரந்தரமான கருணா மூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடு படுமோ
அந்த ரூபத்தில் வந்து அருள் புரிய பல ரூபங்கள் எடுத்துக் கொண்டிருக் கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி, அம்பிகை, அபிராமி, ன்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசு. வேறு வேறு ரூபம்.ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது.
''அம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும்னு உருவகப்படுத்த ஒரு ஐடியா. ஒரு நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற
ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பார்க்காதவா யோசனை பண்ணிப்பாருங்கோ அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.
நூறு பேர் வேண்டாம். முடியாது நம்மால். ஒரு பத்துபேருக்காவது போடறமா? ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவன் கிட்டே யே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதே. மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும் மனஸினால் மகா பாபங்களை , விடாமல் நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவள் முகம் எப்படி ஜீவனோட சந்தோஷத்தில் கொப்புளிக்கும்?
அவளுடைய அன்பையும், அதில் உருவாகும் ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை பண்ணக்கூட முடியாது எங்கே நான் எழுதறது? அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் ஆச்சே. அதால் தானே ஸெளந்தரிய லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் பாடியிருக் கிறார்.. இத்தனை ஸெளந்தரியம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது? அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு தங்குமா?, தாங்குமா?
மஹா பெரியவா காமாட்சியை எப்படி விவரிக்கிறார்?
''ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், நிறமில்லாமல் உருவில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்தி லிருந்தான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயா சக்தியைதான் அம்பாள், அம்பாள் என்கிறோம். இந்த அம்பா என்கிற அம்மாவின் சக்தியினால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.
அவள் மாயையில் நம்மைக் கட்டிப் போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.
ஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை. வேறு வழியும் இல்லை. மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்தப் பிரபஞ்ச ஆட்டத் திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத் திலிருந்து – ஜனன மரணச் சூழலிலிருந்து – விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.
‘மாயா’ என்றால் ‘எது இல்லையோ அது’ என்று அர்த்தம். இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது? அது எப்போதுமே இல்லாதது அல்ல; எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது. அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித் தனியாக உண்மையாக இருப்பதாக நினைக்கிறோம். அவற்றிடம் ஆசை – துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம். இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். அம்பாளை
உபாஸித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அனுபவ பூர்வமாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே; தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்டபின், வெளியே மாற்றிக் கொண்டும், அழிந்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது; இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகிறது. மாயையும் அப்போது இல்லாமலே போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது – அதாவது மாயைதான், அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.
மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாகவே வருகிறாள்.
காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு கரும்பு வில்லும், இன்னொன்றில் ஐந்து புஷ்ப அம்புகளும் இருக்கும். நமது வில் இரும்பால் கடினமானது. அம்பாளின் வில் மதுரமான கரும்பு வில். நாம் உபயோகிக்கும் கூரான அம்புகளுக்குப் பதில் அவள் ம்ருதுவான புஷ்பங்களை அம்பாக்கிவிட்டாள் . கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிக்கிறது. மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்துகிறாள்.. அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படிசெய்பவை. ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.
மீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும். அவள் ஏந்தும் பாசம் , நமது பாசங்களை, ஆசையை அழித்து, அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் PHYSICS ல் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களான கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பவையே நமது வாழ்வில் ஆசையும் துவேஷமும் ஆகும். இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். புரிகிறதா?? ‘
No comments:
Post a Comment