திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
21 தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே
நாம் எல்லோருமே கடவுளை கும்பிடுகிறோம். பூஜை செய்கிறோம், அவரைத் தவிர வேரெவரும் பிரதானம் இல்லை என்ற கோட்பாடுடன் வாழ்கிறோம். ஒருவர் அப்படி இருக்கவில்லை. எவரைத் தனது குருவாக கொண்டாரோ, அவரே கடவுள். எத்தனையோ கோவில்களில் குடியிருக்கும் எத்தனையோ தெய்வங்கள் அவருக்கு தெரியும், மதிப்பு உண்டு மரியாதை உண்டு என்று இருந்தாலும் அந்த தெய்வங்கள் அவருக்கு முக்கியமானதாக படவில்லை. தனது குரு தான் முதல் தெய்வம் அவரை வணங்கினாலே போதும் என்று தனது குருவைக் கண்டது முதல் மாறிவிட்டார்.
அவரும் நமது கட்டுரைகளில் வரும் பெண் போல, திருக்கோளூர் காரர் தான். மதுர கவி ஆழ்வார்.திவ்ய க்ஷே த்ரங்கள் பல தரிசித்து கடைசியில் ஒரு நக்ஷத்ரம் வழிகாட்ட (ஆழ்வார் திருநகரி) திருக்குருகூர் அடைந்து நம்மாழ்வாரை தரிசிக்கிறார். சீடராகிறார். அன்றுமுதல் வேறு தெய்வங்களை மறந்தார். இவ்வளவு சிறந்த குரு பக்தி சீடர் வேறு ஒருவரைப் பார்ப்பது இயலாத காரியம். உண்மையான ஆச்சார்ய பக்திக்கு ஒரு உதாரணம் மதுரகவி ஆழ்வார். இந்த அதிசய ஆழவார் பாடியது 11 பாடல்கள் கண்ட கண்ணிநுண் சிறுத்தாம்பு. அது மிகப் பிரபலமானது.
இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்கிற மதுர கவிஆழ்வாரின் 11 பாடல்களுக்கு பழையகாலத்தில் பெரியவாச்சான்பிள்ளை என்கிற வைணவ மஹான், எழுதிய வியாக்யானம் கடுமையான பழைய, நீண்ட கிரந்த வாக்கியங்களாக பழந் தமிழில் இருக்கிறது. அதை பிழை நிறுத்தியவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், 1879ல் இந்த புத்தகம் சென்னை ராயப்பேட்டையில் வெளிவந்துள்ளது.
அந்த பழைய புத்தகம் வேண்டுவோர் இலவசமாக என்னிடமிருந்து ஈபுத்தகமாக பெறலாம். என்னை வாட்ஸாப்ப் நம்பரில் 9840279080 தொடர்பு கொண்டால் இணைப்பாக கொடுப்பேன். முகநூலில் pdf அனுப்ப முடியவில்லை.
இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு 11 பாடல்களும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாஸ்வத இடம் பெற்றுவிட்டன. இவ்வளவு குறுகிய பாடலை எழுதி அதில் விஷ்ணு எனக்கு வேண்டாம், விஷ்ணுபக்தர் நம்மாழ்வாரே , என் குருவே போதுமே என்கிறார் ஆழ்வார். அதில் வரும் ஒரு வாக்கியம் தான் "தேவு மற்றறியேன்; குருகூர் நம்பிப்பாவின் இன்னிசை பாடிதிரிவேனே" எனக்கு எதற்கய்யா வேறு தெய்வம்? என் குருநாதர் நம்மாழ்வார் பாசுரங்களை எல்லா ஊர்களிலும் பாடிக்கொண்டு திரிந்து என் காலத்தை கழித்துவிடுவேனே'' என்கிறார் மதுரகவி ஆழ்வார்.
அதே ஊர்க்கார பெண் அல்லவா? எவ்வளவோ விஷயங்கள் தெரிந்து கொண்டிருப்பவள் தனது ஊர்க்கார ஆழ்வார் பாசுரங்கள் தெரியாதவளா? ராமாநுஜரிடம், மதுரகவி ஆழ்வாரின் கண்ணினுட் சிறுதாம்பில் வரும் ஒரு வாக்கியத்தை கூறி நான் என்ன மதுரகவி ஆழ்வாரைப் போல் யாராவது ஒரு குருவை, ஆச்சர்யனையாவது தெய்வமாக கொண்டு வேறு தெய்வம் இல்லை என் குருவைத்தவிர என்று சொன்னவளா, அவ்வளவு குருபக்தி கொண்டு இதுவரை வாழ்ந்தவளா? எந்த விதத்தில் இந்த புண்ய பூமியில், திருக்கோளூரில் வசிக்க யோக்கியதாம்சம் கொண்டவள், நீங்களே சொல்லுங்கள் என்று ''டபார்' என்று ஒரு கேள்வியை அஸ்திர பிரயோகம் பண்ணுகிறாள்.
No comments:
Post a Comment