ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN
ஆயிர நாமன் (281-296)
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அர்த்தத்தோடு பீஷ்மர் சொன்னதாக யாரும் இதுவரை சொல்லவில்லை. நாமங்களை மட்டும் ஸ்லோகமாக சொல்லி இருக்கிறார். அந்த காலத்தில் எல்லோருமே ஸமஸ்க்ரிதம் பேசுவார்கள். ஆகவே விஷ்ணுவின் நாமங்கள் நமக்கு அற்புதமாக கிடைத்தன. நமக்கு ஸமஸ்க்ரிதம் கற்றுக்கொடுக்க பள்ளிகள் முன்வரவில்லை, ஆகவே நிறையபேருக்கு அது ஏதோ புரியாத தேவ பாஷை என்று தோன்றுகிறது.
இதில் நான் கொடுத்திருக்கும் அர்த்தங்கள் ஏதோ என் மனதுக்கு தோன்றியவை என்று நினைக்கவேண்டாம். நானும் இவற்றின் அர்த்தத்தை எங்கெல்லாமோ படித்து தான் சுருக்கி தருகிறேன்.
281. சந்திராம்சு : சந்திரனின் கிரணங்கள். ''சோமனின் கதிர்கள் போல, நான் சகல தாவரங்களிலும் ஜீவ சக்தியை ஊட்டுபவன்'' என்கிறார் கிருஷ்ணன்.
282. பாஸ்கரத்யுதி: சூரியமண்டலத்தில் சூரியன் நடு நாயகமாக இருக்கிறான். சூரியன் இல்லையேல் உலகில் பிராண சக்தி கிடையாது. உயிரினம் இல்லை. உயிரை அளிப்பவனாக இருந்தும் நமது வாழ்வில் சூரியன் குறுக்கிடுவதில்லை. அதுபோல, கண்ணுக்கு தெரியாமல் நம்மை விட்டு விலகி எங்கோ இருந்தும் மஹா விஷ்ணு சூர்ய கதிர்கள் போல் நம்மை காத்தருள்பவர்.ஆத்மாவில் உள்ளவர்.
31.அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: ||
283. அம்ருதாம் ஸூத்பவா : சந்திரனின் ஒளிக்கிரணங்களில் மென்மையான ஒரு ரசம் ஒன்று உருவாகி அது தாவரங்களுக்கு ஜீவனை அளிக்கிறது. அதற்கு . அம்ருதாம்ஸு என்று பெயர். விஷ்ணுவும் அதுவே. பாற்கடலில் முதலில் தோன்றியவன் சந்திரன் அல்லவா. பால் பொழியும் நிலவு என்று சும்மாவா சொல்கிறோம்?
284. பானு: ஸ்வயமாக ஒளி விடும் ஸ்வயம்பிரகாசம். சூரிய மண்டலத்திற்கே திலகம். விஷ்ணுவே அது.
285. ஸஸபிந்து: சந்திரனுக்குள்ளே பாட்டி இருக்கிறதாக சின்னவயதில் ஏமாற்றப்பட்டவன் நான். மேலே பார்த்தால் ஒரு முயல் இரு காதுகளை உயர்த்தி நிமிர்ந்து இரு முன்னங்காலை மேலே தூக்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல் தெரியும்; இதை ஸஸபிந்து என்பார்கள்.
286. சுரேஸ்வரா: தேவர்களின் தேவன் விஷ்ணு. .நிறைய வாரி வழங்குபவர் என்று ஒரு அர்த்தம்.
287. ஒளஷதாம் : விஷ்ணு தான் சிறந்த தெய்வீக மருந்து. உடல் நோய்களுக்கு காரணம் உள்ளம் மனிதனால் விளைந்த எண்ணம், காரியங்கள், எனவே உள்ளே சுத்தமாகிவிட்டால் வெளியே என்ன வியாதி அணுகும்.? உள்ளே சுத்தமாக தேவையான மருந்து விஷ்ணுவின் மீது பக்தி.
288. ஜகத ஸேது : நீர் பரப்பை கடக்க இணைக்கும் பாலம் தான் சேது. குறைபாடு நிறைய உள்ள நாம் குறை ஒன்றுமில்லாத கோவிந்தனை அடைய இணைக்கும் பாலம் தான் விஷ்ணு. கொடியவர்களை, அதர்மம் அக்கிரமம் செய்பவர்களை அழித்து, சாதுக்களை நல்லோர்களை காத்து தன்னிடம் இணைத்துக் கொள்ளும் பாலம் விஷ்ணு.
289. சத்ய தர்ம பராக்ரமா: சத்யம், தர்மம் வீரம் ஒருங்கிணைந்தவர் விஷ்ணு. துஷ்டர்களை வதைத்து சிஷ்டர்களை காப்பவர்.
32. பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: ||
290. பூத பவ்ய பவன் நாதா: த்ரிகாலமும் கடந்தவர். கால தேவன். காலத்தால் கட்டுண்ட அனைத்துயிர்களும் வேண்டும் தெய்வம். காக்கும் கடவுள் விஷ்ணு.
291. பவனா :அணுகும் எதையும் சுத்திகரிக்கும் தெய்வம். உயிர்களின் இயக்கம்.
292. பாவனா: எங்கும் பரவியுள்ள காற்றில் பிராண சக்தியை புகுத்தி வாழ்விப்பவர். அந்த பிராண சக்தியே விஷ்ணு தான்.
293. அனலா: அக்னி. உலகில் உயிர்கள் உயிர்வாழ இன்றியமையாதது அக்னி. இதன் அருமை தெரிந்த முன்னோர் யாகத்தீ வளர்த்தனர். உஷ்ணம் இன்றியேல் உடலே இல்லை. உஷ்ணம் இன்றேல் ஜீரணம் இல்லை. மழை இல்லை. வளம் இல்லை. உஷ்ணமே விஷ்ணு.
294. காமஹா: ஆசையை சுட்டெரிப்பவர். பூர்வ ஜென்ம தொடராக வருவது வாஸனா. அதனால் விளைவது விருப்பம். சூரியன் இருளை போக்குவது போல் ஆத்ம ஞானம் வாசனா வை விரட்டும். ப்ரத்யும்னன் காமனின் தந்தை. இதுவும் விஷ்ணுவின் ஒரு பெயர் தான்.ஆசையே அழிவுக்கு காரணம்.
295. காமக்ரித்: விருப்பங்களை நிறைவேற்றுபவர். காரண சரீரத்திலிருந்து தான் ஆசை விருப்பங்கள் எழுகின்றன. வாசனைகளால் உரு பெறுகின்றன. ஜீவனால் நாடப்பட்டு துன்புறுத்துகிறது.
296. காந்தா: காந்த சக்தி கொண்ட உருவானவர். உபநிஷத்துகள் அதனால் தானே 'சாந்தம் சிவம் சுந்தரம்'' என்றது. விஷ்ணு எல்லையற்ற, விவரிக்க இயலா சுந்தர ரூபர். தெய்வீக அழகு.
No comments:
Post a Comment