Wednesday, December 25, 2019

THIRUVEMBAVAI.



திருவெம்பாவை.  J K  SIVAN 

                                                       
       10    ஊர் ஏது , பேர் ஏது  உற்றார் யார், அயலார் யார்?


மணிவாசகர் என்ற  பெயர் ரொம்ப  பொருத்தமாக    அமைந்த ஒரு சிவபக்தர்,  சிவனடியார்,மாணிக்கவாசகர்.
 வார்த்தைகள் பரிமளிக்க வேண்டும் என்றால் அவற்றில் உணர்ச்சி ததும்ப வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் இதை செய்ய முடியாது.சொல்லில்  எழுத்தில் பேச்சில்,  பக்திரசம் பொங்க வேண்டுமானால்  உள்ளே  மனம்,   அடுப்பில்  ரசம்போல்  அன்பு மணத்துடன் கொதிக்கவேண்டும். அப்போது தானே  பக்திரஸம்  பொங்கி  வழியும்.

அதோ  திருவண்ணாமலையில்   பெண்கள் கூட்டமாக வீடு வீடாக சென்று மற்ற பெண்களை துயில் எழுப்புகிறார்கள். தானே அவர்களில் ஒருவளாக அவர்கள் பாடுவதை தான்  தன் எழுத்தில் படம் பிடித்து காட்டுகிறார் மணிவாசகர்.   பாடலின் அர்த்தம் எளிதில் புரிகிறது. தெள்ளு தமிழில் தெளிவாக எழுதியிருக்கிறார்:

10. ''பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். ''

மாணிக்கவாசகர் எப்போது ஆண்டாளை சந்தித்தார்? எப்படி இருவரும் சொல்லி வைத்தாற் போல் மார்கழி குளிரில் சுகமாக போர்த்திக்கொண்டு தூங்கும் மற்ற பெண்களை எழுப்ப முடிவெடுத்தார்கள். வீடு வீடாக சென்று கதவை தட்டலாம் என்று யோசனை சொன்னது யார்? இதனால் நமக்கெல்லாம் ஒரு பெரிய நன்மை கிடைத்து விட்டது. ஒருபக்கம் ஆண்டாளின் திருப்பாவை. இன்னொரு பக்கம் மணி வாசகரின் திருவெம்பாவை. என்ன சுகம்.!

இந்த 10 வது திருவெம்பாவை பாடல் அழகாக அமைந்துள்ளது. '' அய்யனே, ஆடலரசனே, நினது திருவடிக் கமலங்கள், பாதாளம் எனும் கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கிறது. ; திருமாலான  விஷ்ணுவால் கூட  கண்டுபிடிக்கமுடியவில்லையே.   மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட உனது திருமுடியோ, வானிலுள்ள எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அடி முடி காண முடியா ஸ்தாணு அல்லவா நீ.? அறியமுடியாத பிரமன்  கண்டதாக பொய் அல்லவோ சொல்லவேண்டியதாயிற்று.

 ஒரேவகையானவன் அல்லவே நீ. ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; மறுபக்கம் சர்வ லோக புருஷனான நீ. வேதமுதல்வன்.    விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் குழாம் சூழ நடுவாக இருப்பவன்''. 

தூங்கும் பெண்களே, இப்படிப்பட்ட சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது? இதனால் தான் ஒரு அருமையான பாட்டு எனக்கு பிடித்து அடிக்கடி பாடுவேன். ''தந்தை தாய் இருந்தால் உனக்கிந்த தாழ்வெலாம்.....''

இப்படி மாணிக்கவாசகர் அண்ணாமலையானை பற்றி பாடும் போது அண்ணாமலையார் அருளி குபேரன் புதல்வர்களுக்கு பொன் வில்வ சாரம் பற்றிய ஒரு தகவல் ஒன்று சொல்லட்டுமா?.

ஒரு அற்புதமான மரகத லிங்கம், மிகப் பெரிய ஆவுடையார், சமீபத்தில் சென்ற வருஷம்  வாளாடி யாத்திரையின் போது நன்னிமங்கலம் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தரிசித்தேன்.  1200 வருஷ பழமையான சிவாலயம். அம்பாள் பொருத்தமான பேர் கொண்ட மீனாட்சி. எங்கோ எதற்கோ சாபம் பெற்ற குபேரனின் பிள்ளைகள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கிருபையால் நன்னிமங்கலம் வந்து பொன்வில் சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஸ்தலம்..

இப்போதும் கூட நிறைய தோப்புகளும் மரங்களும், பச்சை வயல்களும், பசு கன்று, மாட்டு வண்டிகள், வைக்கோல் போர்கள் குவிந்துள்ள இந்த கிராமம் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு எவ்வளவு வளமையோடு சுற்றிலும் நீர் நிலைகள் நிறைந்து அற்புதமாக காட்சி தந்திருக்கும்? எவ்வளவு சிவ பக்தர்கள் எங்கும் கண்ணில் பட்டிருப்பார்கள்? 

எந்த ராஜா கட்டினானோ,  ரொம்ப  கெட்டிக்காரன் வருமுன் காப்போன். அவன் சுந்தரேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி கட்டிய  உயரமான மதில் சுவர்கள்  இன்னும் ஆக்கிரமிப்பு நடத்த விடவில்லை. மேற்கு பார்த்த கோவில். வாயிலில் நுழைந்தால் நீளமான நடைபாதை, அப்புறம் இன்னொரு வாயில். அதை தாண்டி அகல பிரஹாரம் , ஒரு மஹா மகாமண்டபம், அதன் நடுவே நந்தியும் பீடமும். அப்புறம் தான் அர்த்த மண்டபம். கற்பகிரஹத்தில் சுந்தரேஸ்வரர் மேற்கே பார்த்த ஐந்தடி உயர, கரும்பச்சை நிற மரகத லிங்கமாக அருள் பாலிக்கிறார். கற்பூர ஜோதியில் கண் கொள்ளா காட்சி. மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை ஏறக்குறைய சுமார் 15 தினங்களுக்கு மாலையில் சூரிய கதிர்கள் இறைவன் மீது நேராக படும்போது கரும்பச்சை வண்ணத்தில் இறைவன் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சி.

ஆலய அர்ச்சகர் கணேச குருக்கள் நன்றாக பாடுகிறார். இவர் தலைமுறை தலைமுறையாக சுந்தரேஸ்வரரை அர்ச்சிக்கும் புண்ய குடும்பத்தவர். இங்கே  ஒரு  பெரிய ராஜ நாகம் தினமும் சிவனை தரிசித்து லிங்கத்தின் மேல் படுக்கிறது. ''நாகா, எழுந்து போ . அப்புறம் வா '' என்று கணேச குருக்கள் சொன்னால் நாய்க்குட்டி போல் போகிறது' என்கிறார். கேட்கும்போது நடுங்கினேன். ஒரு சிறு நெளியும்  பூரானைப்  பார்த்தாலே ஐந்தடி குதிப்பவர்கள் நாம். 

மார்கழி  அமைதியான சூழ்நிலையில் கணேச குருக்களின் இனிய குரலில் தேவார, சமஸ்க்ரித ஸ்லோகங் களை கேட்டவாறு கற்பூர ஜோதியில் மரகத லிங்க சுந்தரேஸ்வரரை தரிசிக்க நான் எவ்வளவோ புண்யம் செயதிருக்க வேண்டும்.  நினைக்கும்போது  இப்போதும் எனக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம்.

மீனாட்சி அம்மனின் சன்னிதி இடது புறத்தில் உள்ளது. முன் கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் கொண்டு, கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்து,   நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி புன்னகைக்கிறாள்.

ஒரு சிறு புராண கதை.  மூன்று  தளங்கள் கொண்ட தங்க வில்வ சாரம் தேவலோகத்தில் தேடினாலும் கிடைக்காதது. எங்காவது ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று உச்சரித்து ஒரு தடவை அர்ச்சனை செய்து வணங்கினால் அது உடனே பலமடங்காக உருவெடுத்து நிறைய செல்வத்தைத் தரும்.. யோகிகள் ஞானி, தவ ஸ்ரேஷ்டர்கள் கண்ணில் மட்டும் தான் இந்த பொன்வில்வ சாரம் படும். நாம் தேட முயற்சிக்க வேண்டாம்.    இதை சிவன் ''இந்தா   நீ  இதை வைத்துக் கொள் '' என்று குபேரனிடம் கொடுக்க, அவனோ அதை தன் பிள்ளைகள் மணிக்ரீவன், நளகூபன் ரெண்டு பேரிடமும் கொடுத்து ''ரெண்டு பெரும் பூலோகம் சென்று எங்கெல்லாம் சுயம்பு லிங்கம் கண்டாலும் இதை அந்த லிங்க மூர்த்திகள் மேல் வைத்து வணங்குங்கள். அதன் மகிமையை என்ன என்று அறிந்து வாருங்கள் '' என்றான்.

சிறந்த சிவ பக்தர்கள் என்பதால் அவர்கள் புறப்பட்டு எங்கெல்லாமோ   சென்று  சுயம்பு சிவலிங்கங்கள் மேல் பொன்  வில்வத்தை வைத்து பூஜித்தார்கள். ஒன்றும் மாறுதல் தெரியவில்லை. சில இடங்களில் பசுமையாக இருந்தது. பல இடங்களில் மறைந்து விட்டது. என்ன செய்வது? எத்தனையோ நூறு வருஷங்கள் இப்படி செல்ல, சரி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உதவி நாடுவோம் என்று அங்கே சென்றார்கள். அன்று பவுர்ணமி. ஆகவே சந்தர்ப்பத்தை வீணாகாமல் கிரிவலம் வந்தார்கள். பொன் வில்வத்தை அண்ணா மலையார் பாதங்களில் வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதினர். ''எம்பெருமானே, நீங்கள் தான் இதன் மகிமையையும் தேவ ரகசியத்தையும் உணர்த்தவேண்டும்'' என கெஞ்சினார்கள். அவர் பாதத்
தில்
 வில்வதளம் சொர்ணமாகப் பிரகாசித்தது. ''நீங்கள் இருவரும் சென்னி வளநாடு செல்லுங்கள் '' என அருள் வழங்கினார் அண்ணாமலையார்.

குபேர புத்திரர்கள் சோழ நாட்டிற்கு வந்து திருத்தவத்துறை எனப் பெயர் கொண்ட இப்போதைய லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் ஸ்னானம் செய்தார்கள். என்ன ஆச்சர்யம். நீரில் மூழ்கி எழுந்தபோது அவர்கள் எப்படி வேறொரு சிவன் கோவிலில் இருந்தார்கள்? எங்கே பொன்வில்வம் ?? அடடா என்ன இப்படி ஒரு  அதிசயம். சிவனே நீயே கதி ''என அந்த சிவன் கோவிலின் கருவறைக்குள் சென்றார்கள்.
அங்கே ஒரு பெரிய சிவலிங்கம். கரும்பச்சை மரகத லிங்கம். மேலே தான் நன்னிமங்கலம் சுந்தரேஸ்வரர் விவரம் கொடுத்து விட்டேனே. நன்னிமங்கலம் சுந்தரேஸ்வரர் மீது பொன்வில்வம் அரசித்தவுடன்,  பல மடங்கு பெருகி கண்ணைக் கூசும் தங்க மயமாக பொன்வில்வங்கள் அநேகமாக நிறைந்தது .மகிழ்ச்சியோடு குபேர புத்திரர்கள் தேவ லோகம் சென்றனர். பௌர்ணமி கிரிவலம் மிக முக்கியமான விசேஷம் இங்கே.

கோஷ்டத்தில்  துர்க்கை , தட்சிணாமூர்த்தி, ப்ரஹாரத்தின் மேற்கே, லட்சுமி நாராயணர் ,வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் சந்நிதிகளில் அருள் பாலிக்கிறார்கள். முருகன் வள்ளி-தெய்வானையுடன் தனி சன்னிதியில் .வடக்கு பிரகாரத்தில் ரெண்டு சண்டிகேஸ்வரர்கள் . கடாசனத்திலும், அர்த்த பத்மாசனத்திலும் தெற்கு மேற்காக காட்சி தருகிறார்கள். வடகிழக்கு மூலையில் நவக் கிரக சன்னிதி, மேற்கே, செவி சாய்த்த விநாயகர்.

ஸ்தல விருட்சம் பொன் மூன்று தள வில்வ மரம். பவுர்ணமி அன்று இந்த ஸ்தலவிருட்சத்திற்கு அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி, அடிப்பிரதக்ஷணம்  செய்கிறார்கள். குபேரன் லட்சுமி தேவி கடாக்ஷம் கிடைக்க வேண்டாமா?   சிவபெருமானுக்கு சிவகாமப்படி, லட்சுமி நாராயணருக்கு வைகானஸ ஆகம முறைப்படி நித்ய பூஜைகள். தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும்    ஆலயம்  திறந்திருக்கும் .  எங்கிருக்கிறது நன்னிமங்கலம்?

திருச்சியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில்,  லால்குடியிலிருந்து 3 கி.மீ. தூரம்.  லால்குடி வழியாக பஸ் வசதி உண்டு. ஆட்டோ ரிக்ஷாக்கள் மஞ்சளாக நிறைய கண்ணில் படுகிறது.   நன்னிமங்கலம் சிவாலயத்திற்கு அருகே, உள்ள சென்னிவாய்க்காலில் ஒரு நடுக்கல் கிடைத்து அதை ஆலயத்தில் வைத்திருக்கிறார்கள். பல்லவர் கால நடுக்கல்லில் கல்வெட்டுகள் சொல்வது: நந்தி வர்மனின் 21-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.867) மைசூர் நகரிலிருந்து ஹொய்சாலர்கள் இங்கே வந்து இவ்வாலய நிலங்களுக்கு மதகு அமைத்து கொடுத்து விவசாயம் தழைக்க உதவி செய்தார்களாம். நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். 

உள்மண்டப மேல்நிலையில் உள்ள கல்வெட்டு ராஜ ராஜ சோழன் காலத்தது என்பதால் 1200 ஆண்டுகளாக தொடர்ந்து சிவாகம பூஜை நடந்திருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...