திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
30 கடித்து அவனைப் பெற்றேனோ திருமங்கையார் போலே
நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களின் பாசுர தொகுப்பு. அதில் நிறைய பாசுரங்களை அளித்தவர் பன்னிரண்டு ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆழவார் ஒருவர். அரசனாக இருந்து கள்வனாக மாறிய ஸ்ரீரங்கம் கோவிலை நிர்மாணித்த அற்புத ஆழ்வார். அழகு தமிழ் பாசுரங்களில் அரங்கனை அள்ளி அள்ளி தருபவர் . பெயர் : திருமங்கையாழ்வார்.
தமிழகத்தில், திருவாலி திருநகரி என்னும் ஊருக்கு அருகாமையில் இருக்கும் திருக்குரையலூரில் பிறந்தவர். சோழநாட்டில் முக்கியமான ஊராக கருதப்பட்டது இந்த ஊர். ஆழ்வாருக்கு 'கலியன்' என்று பெற்றோர் நாமகரணம் செயது வைத்தாலும் உலகம் அவரை திருமங்கை ஆழ்வார் என்று தான் என்றும் அறியும். .
கலியன் சோழ ராஜாவுக்கு பராக்கிரமம் மிகுந்த தளபதி யாக இருந்தவர். கலியன் யுத்தகளத்தில் எவ்வாறு இயங்குகிறார் என்று நேரடியாக கவனித்த சோழ ராஜா, போரில் தனது படைக்கு வெற்றியை தேடித் தரும் கலியனை பாராட்டி தனது ஆதிக்கத்தில் இருக்கும் ''திருமங்கை" எனும் ஊருக்கு அவனை சிற்றரசனாக நியமித்தான். அன்று முதல் எல்லோருக்கும் கலியன் "திருமங்கை மன்னன்" ஆனான். .
திருவெள்ளக்குளம் என்று ஒரு ஊர். அதற்கு அண்ணன் கோவில் என்றும் பெயர். ஒரு அழகான அமைதியான வைணவ திவ்யதேசம். அங்கு மூன்று முறை செல்லும் பாக்யம் எனக்கு கிடைத்தது. அந்த ஊர் வைணவ பக்தை குமுதவல்லி நாச்சியார் அவதரித்த ஸ்தலம்.
அவளை சந்தித்த முதல் முறையே திரு மங்கை மன்னனுக்கு குமுதவல்லி மீது அளவற்ற காதல் உண்டாகி அவளை மணக்க விருப்பம் கொண்டான்.. அவளோ ஒரு கண்டிஷன் போட்டுவிட்டாள் . அது என்ன ?
''நீ வைணவனாக வேண்டும். தினமும் குறைந்தது ஒரு ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்காவது அன்னம் இடவேண்டும். விஷ்ணு திருக்கோயில் காரியங்களில் ஈடுபடவேண்டும். அப்படியென்றால் நான் உன்னை மணக்கிறேன் ''
கலியன் சரியென்றார். வைணவத்தை தலையாய கடமையாக கொண்டு, திருமால் அடியார்களுக்கு அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் மும்முரமாக செய்தார். தன் வசமிருந்த பொருள் அனைத்தும் முழுதுமாக இதில் கரைந்தது. சோழராஜாவுக்கு கட்டவேண்டிய கப்பம் கட்டக்கூட வழியில்லை. சோழன் படை அனுப்பி யுத்தம் நடந்து திருமங்கை மன்னன் நாடிழந்து சிறைப்பட்டான். தனது பக்தன் இவ்வாறு துன்பப்படும்போது காஞ்சி வரதன் பார்த்துக்கொண்டிருப்பானா? சோழனின் கனவில் வரதராஜன் தோன்றி தானே அரசனுக்குரிய கப்பம் பணத்தை தருவேன் என்று சொல்ல யாரோ ஒருவர் வந்து அரசனிடம் திருமங்கை மன்னனிடமிருந்து சேரவேண்டிய தொகையை விட அதிகமான தங்கம் வெள்ளியை தர, சோழன் தனக்குரிய பங்கை எடுத்துக்கொண்டு மீதியை திருமங்கை மன்னனிடம் திருப்பி கொடுத்தான்.
நாடிழந்த திருமங்கைமன்னன் வேறு வழியின்றி தனது வைணவர்களுக்கு படைக்கும் அன்னதானம் தொடர்வதற்காக, பணத்தை வழிப்பறி, திருடு, கொள்ளை அடித்தாவது சேகரிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டான். கொள்ளை அடித்தான் வழிப்பறி செய்தான். அதில் கிடைத்த பொருள்களை வைத்து அன்னதானம் ஆலய காரியங்கள் எல்லாம் நடந்து வந்தது.
ஒருநாள் என்ன ஆயிற்று தெரியுமா? ஒருநாள் கலியன் இருந்த காட்டு பகுதியில் புதிதாக திருமணமான தம்பதியர் கோஷ்டி நடந்து வந்து அடுத்து ஊருக்கு போய்க் கொண்டிருக்கும் விஷயம் காதுக்கு எட்டியது. திருமங்கை மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். ஆஹா இந்த திருமண கோஷ்டியிடம் நிறைய பொருள் கிடைக்கும். நமது அன்னதான சேவை சில காலம் இடையூறில்லாமல் தொடரும் என்று மகிழ்ச்சி. அந்த கும்பலை மடக்கி எல்லோரிடமும் இருந்த நகைகளையும், பொருள்களையும் கொள்ளை அடித்தான். புதிதாக திருமணமான மாப்பிள்ளையின் காலில் உள்ள ஒரு நகையைமட்டும் எவ்வளவு முயன்றும் பலமாக இழுத்தும் கழற்ற முடியவில்லை. மணமகன் காலில் தலைவைத்து குனிந்து தனது பல்லால் கடித்தும் கால்விரலில் இருந்த ஆபரணத்தை கழற்ற முடியவில்லை. சரி இது இல்லாமல் போகட்டும் மற்ற கொள்ளையடித்த எல்லா நகை பொருள்களையும் மூட்டை கட்டி தூக்கிக் கொண்டு போவோம் என்று கட்டிய மூட்டையை தூக்க முயன்றான். அந்த மூட்டையை கொஞ்சமும் இருந்த இடத்தை விட்டு அசைக்க முடியவில்லை. கலியன் பெரும் பலம் கொண்டவன். அவனாலேயே அந்த மூட்டையை அங்கிருந்து நகற்ற முடியவில்லை.
கல்யாண மாப்பிள்ளையை கோபமாக பார்த்த கலியன் எனும் திருமங்கை மன்னன் “என்னய்யா மாப்பிள்ளை, இது ஏதோ மாயமாக இருக்கிறது. நீ ஒரு மந்திரக்காரனா? ஏதேனும் மந்திரங்கள் போட்டாயா? நீ மாயாஜால வித்தை காட்டுபவனா சொல்லு? என்ன மந்திரம் போட்டாய் எனக்கு அந்த மந்திரத்தை சொல்லு? இல்லாவிட்டால் என்னுடைய வாள் உன் தலையை சீவிவிடும். உடனே சொல் அந்த மந்திரத்தை? '' என்றான் திருமங்கை மன்னன்.
சரி சொல்கிறேன் இப்போது மீண்டும் என் கால் ஆபரணத்தை இழுத்து எடு'' என்று மாப்பிள்ளை சொல்ல, கலியன் அவன் காலில் தலை வைத்து குனிந்தபோது அவன் செவியில் மாப்பிள்ளையாக வந்த பெருமாள் அவனுக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்க, கலியன் அப்போது முதல் திருமங்கை ஆழ்வாராகிறார்.
ஆழ்வார் ஆச்சரியத்துடன் கைகூப்பி ஸ்ரீமந் நாராயணன் மஹாலக்ஷ்மி தேவியாக காட்சி அளித்த அந்த கல்யாண தம்பதிகளை பார்க்கிறார். சாஷ்டாங்கமாக விழுந்து சரணாகதி அடைகிறார். அஞ்ஞான இருள் அகன்று கடல் மடை போல் பெரிய திருமொழி பாசுரங்கள் நமக்கு கிடைத்தது. அவரது அன்னதானத்தை விட இந்த பக்தி, ஞான தானம் இன்னும் தொடர்கிறது.
“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே ”
இந்த வாடினேன் வாடி , நாடினேன் நாடி பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவம் எனும் வார மின்னஞ்சல் புத்தகத்தில் வைணவ எழுத்தாளர் திருமதி கீதா ராகவன் அழகாக விளக்கி எழுதியதை தொடர்ந்து படித்து அவர் என் நண்பரானது எனக்கு கலியனும் கோவிந்தனும் கொடுத்த கிண்ண தானம் பரிசு. கலியன் தனது ஒலி மாலை வைணவ மாநாட்டில் எனக்கு அவர் மனைவி குமுதவல்லி பிறந்த ஊரான திரு அண்ணன் கோவிலில் ''வைணவ சேவா ரத்னா'' விருதுமல்லவா கொடுத்து என் நெஞ்சையும் கொள்ளை அடித்தார்.
கலியன் அரசனாகி, கொள்ளையனாகி, ஆழ்வார் ஆன முழு விபரமும் திருக்கோளூர் அம்மாளுக்கும் தெரியும் என்பதால் தான் அவள் ஸ்ரீ ராமாநுஜரிடம் '' ஐயா திருமங்கையாழ்வார் போல் ஸ்ரீமன் நாராயணனின் திருவடி விரலை கடித்தாவது நான் அவரின் அருளை பெருகின்ற அதிர்ஷ்டத்தை, பாக்கியத்தை உடையவளா, நான் எப்படி இந்த திருக்கோளூர் புண்ணிய பூமியில் வாழ அருகதை உள்ளவள் சொல்லுங்கள் '' என்று கேட்டாள் .
No comments:
Post a Comment