திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
'24. 'ஆயனை வளர்தேனோ யசோதையாரைப் போலே''
குழந்தைகளுக்கும் தாய்க்கும் உண்டான இனிய நெருக்கமான தொடர்பு முன்பு போல் இப்போது இல்லாததன் காரணம் தாய்மார்கள் வேலைக்கு செல்கிறார்கள். வேலை, பணத்தேவை பாசத்தை விழுங்குகிறது. இன்னொன்று பால் குடிக்க மறக்கும் முன்பே பள்ளிக்கூடம் சேர்ப்பது. எங்கோ யாரிடமோ திட்டு, அடியுடன் , வெறுப்புடன் அருவருப்புடன் குழந்தை வளர்கிறது. காலை முதல் மாலை முன்னிரவு வரை இவ்வாறு பிரிந்த குழந்தையை வீட்டுக்கு கூட்டி ச்சென்று மறுநாளுக்கான வேலைகளில் ஈடுபடும் தாய் தானும் அசந்து போய் ஒய்வு தேடுகிறாள். அவளும் மனுஷி தானே. விளையாட இது நேரமா என்று கேட்கவேண்டியவளுக்கு விளையாட நேரமில்லையே.
ஒரு தாய்க்கு வேலையுமில்லை, பணத்தேவையும் மில்லை, பிறந்தபோதே மிகவும் அரிதான, அழகான குழந்தையை பெற்றாலும் அடுத்த கணமே அதை பிரியும் சூழ்நிலையில் இருந்தாள். சுயநலம் இல்லை. குழந்தை உயிரோடு இருக்கவேண்டுமே என்ற வேதனை, கவலையோடு. ஆகவே எங்கோ இருந்த யசோதைக்கு அந்த பாக்யம் கிடைத்தது. கண்ணனோடு ஒவ்வொரு கணமும் வளர்த்தாள், வளர்ந்தான், மகிழ்ந்தாள், கோலாகலமாக கோகுலமும், ஆனந்த மாக பிருந்தாவனம் அவளைச் சுற்றியே அமைந்தது, நகர்ந்தது.
கிருஷ்ணனை நந்தகுமாரன், யசோத நந்தன், யசோதபாலன், என்று தான் வாய் மணக்க கூறுகிறோம். இந்த செல்வத்தை வேண்டுமென்றே அவனுக் காக தியாகம் செய்த மிகப்பெரிய தியாகி தேவகி.
அடேயப்பா அந்த கிருஷ்ணன் படுத்திய பாடு, அடித்த லூட்டிகள், தாங்க முடியாமல் உரலில் கட்டிப்போட்ட பாக்கியவதி, அவன் வாயை பிளந்து பிரபஞ்சத்தையே பார்த்தவள் யசோதை. தேவாதி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் தேடியதை எளிதில் பெற்றவள்.
ஆண்டாளின் வாக்கு ஞாபகம் இருக்கிறதா....ஏரார்ந்த கண்ணி ''யசோதை இளஞ்சிங்கம்'' ஜெயதேவர், பில்வமங்கள், நாராயண நாராயண தீர்த்தர், ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், ஆகியோர் ஆற்று வெள்ளம் போல் அவனையும் யசோதையையும் பாடி தள்ளி இருக்கிறார்கள். ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், ''என்ன தவம் செய்தனை யசோதா'' என்று எழுதிய பாடலின் ஒவ்வொரு எழுத்தும் நவகோடி வைர, வைடூர்யங்கள் கொடுத்தாலும் ஈடாகாது. இந்த வாக் கேய காரர்கள் (பாடலாசிரியர்கள்) கண்ணனை நேரில் கண்டவர்களாக இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனை இப்படி வர்ணிக்கவே முடியாது.
இந்த பாடலை மகாராஜபுரம் சந்தானம் பாடி ஆயிரமாயிரம் தடவி கேட்டு மகிழ்ந் திருக்கிறேன். இத்துடன் இணைத் திருக்கிறேன். லிங்கை க்ளிக் செயது அனுபவிக்கலாம். https://youtu.be/TSesWXxfuT4
மதுராவில் கிருஷ்ணன் கம்சவதம் முடிந்து துவாரகையில் கிருஷ்ணன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ளும் போது ஏராளமான ராஜாக்கள், ரிஷிகள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் குழுமி இருந்தாலும் அவர்களைத் தவிர்த்து கிருஷ்ணனின் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடியது.
கூட்டத்தில் எங்கோ ஒரு எளிமையான யாதவப் பெண், சரியாக சீவப்படாத முடிந்த கூந்தலோடு, பழம் புடவை யோடு,முடி வைபவத்தை ரசித்து க் கொண்டிருந்தாள். அங்கே நின்றது கண்ணனின் பார்வை. சைகையால் அவளை முன்னால் அழைக்கிறார். அவள் புளகாங்கிதம் அடைகிறாள். யார் இவள் என்று புருவங்கள் உயர்ந்தபோது கிருஷ்ணன் ''அன்பர்களே, இந்த தாய், என் அன்னை, யசோதை, என்னை வளர்த்து ஆளாக்கியவள். அவள் கையால் எனக்கு முடி சூட்டுவதே எனக்கு பெருமை'' என்கிறார் கிருஷ்ணன். எங்கும் மலர் மழை.
அப்போது கிருஷ்ணன் ''தாயே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்ற போது யசோதை ''கண்ணா, , இனி நான் எத்தனை பிறவி எடுத்தாலும் உனது தாயாக அதுவும் வளர்ப்புத் தாயாகும் பேற்றினை அருள வேண்டும்! அது வே நான் கேட்கும் வரம்'' என்கிறாள்.
அடுத்த பிறவியில் யசோதை வகுளா தேவியாக பிறந்து கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ திருப்பதி வேங்கடேசனாக கிருஷ்ணன் அவதரித்தபோது, அவனது வளர்ப்பு தாயாகி, ஆகாச ராஜன் புத்ரி அலர்மேல் மங்கை பத்மாவதியை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். இனி இன்னும் எத்தனை எத்தனை வளர்ப்புத் தாயாக வருவாளோ நமக்கெப்படி தெரியும்.
திருக்கோளூர் தயிர் மோர் கடைந்து விற்கும் பெண் கடைந்தெடுத்த ஞானி. பண்டிதை. அவளுக்கு தெரியாத விவரமே இல்லை. அவள் ராமானுஜரின் ஒரு கேள்விக்கு 81 உதாரண புருஷர் களை, ஸ்திரீகளை அடையாளம் காட்டி நான் அவர்கள் போல் ஏதாவது செய்ததுண்டா?, இந்த யசோதை போல நான் என்றாவது கிருஷ்ணனை தாயாக அக்கறையோடு, அன்போடு நினைத் ததுண்டா, வளர்த்ததுண்டா? நான் எப்படி இந்த திருக்கோளூர் புண்ய ஸ்தலத்தில் வாழ அருகதை உடையவள்? என்று கேட்கிறாளே!
No comments:
Post a Comment