மனிதருள் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி பாபா
யார் இந்த இளைஞன்?
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்ந்த நாடு இது என்பது உண்மை. எப்படி இருவேறு நம்பிக்கை கொண்டவர்கள், சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பது தெரியாத விஷயம். ஒன்றுமட்டும் நிச்சயம், என்றுமே எல்லா முஸ்லிம்களும், எல்லா ஹிந்துக்களும் விரோதிகளாக வாழவில்லை. மதவெறி குறுக்கிட்து, மனிதன் மிருகமாக மாறும்போது பல உயிர்கள் மாண்டன, நம்பிக்கைகள், வழிபாட்டு சின்னங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு முக்கிய காரணம். ஆப்கானிஸ்தான், துருக்கி, பாரசீகம் என்றெல்லாம் இடத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த இஸ்லாமிய மதவெறியர்கள் ஆள் பலம், ஆயுத பலத்தால் ஆட்சியை பிடித்து பல நூறு ஆண்டுகள் நம்மை ஆண்டது தான்.
ஷீர்டி சாய்பாபா ஹிந்துக்களாலும் முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மஹான். ஆகவே அவரை வணங்குவதில், அவரை தரிசிப்பதில் எந்த கலவரமும் இதுவரை ஏதும் இல்லை. அவரது கருணை அற்புதங்கள் இரு பாலாருக்கும் சமமாகவே அருளப்பட்டது.
பகவந்த ராவ் என்று ஒருவரின் அப்பா ஷீர்டி சாய்பாபா பக்தர்.அவர் காலமானதும் பகவந்த ராவ் தந்தைக்கு செய்யவேண்டிய கர்மா ஒன்றையும் செய்யவில்லை. அவனை ஏதோ ஒரு சக்தி ஷீர்டி அழைத்து வந்ததா இழுத்து வந்ததா? பாபா முன் நின்றபோது அவருக்கு பகவந்த ராவின் தந்தை நினைவு வந்தது. அருகிலிருந்த தாஸ்கணுவிடம் , ''இவன் அப்பா எனக்கு நல்ல நண்பன். அதனால் இவனை இங்கே இழுத்தேன்'' என்று சொன்னார். நைவேத்யமே அவன் தராததால் அவன் தந்தை விட்டல் ராவும் நானும் பட்டினி. இனி இவனை வரவழைத்து அவன் செய்ய வேண்டியதை செய்ய வைக்கப்போகிறேன்'' ஒரு சில தினங்கள் ஷீர்டியில் பகவந்த ராவை தங்க வைத்தார்.
ஷீர்டியை விட்டு திரும்பும்போது பகவந்த ராவ் முற்றிலும் மாறியிருந்தான். தந்தைக்கு ஸ்ராத்தம், தர்ப்பணம், எல்லாம் விடாமல் செய்து, சிறந்த சாய் பக்தனாக எல்லோருக்கும் சேவை செய்தான். இது தான் ஷீர்டி பாபாவின் சக்தி.
நம் எல்லோருக்கும் தெரியும். பிரயாகை ஒரு புண்ய ஸ்தலம். கங்கையும் யமுனையும் சேருமிடம், லக்ஷோபலக்ஷம் யாத்ரீகர்கள் வருடமுழுதும் வந்து ஸ்நானம் செய்து பாபம் தொலைக்கும் இடம்.
தாஸ்கணுவிற்கு பிரயாகை சென்று புண்யநீராடவேண்டும் என்று ஒரு எண்ணம். பாபாவிடம் அனுமதி பெற்று செல்லலாம் என்று தோன்றியது.
''பாபா நான் பிரயாகை சென்று புண்ய நீராடிவிட்டு வரலாம் என்று இருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் அனுமதி தேவை''
''தாஸ்கணு, எதற்கு அங்கெல்லாம் போகவேண்டும். பிரயாகை இங்கேயே இருக்கிறதே. என்னை நம்பு '' என்கிறார் பாபா. பாபாவின் கரம் தாஸ்கணுவின் சிரத்தில் படுகிறது. தாஸ்கணு மின்சாரத்தால் தாக்கப்பட்டவன் போல் அப்படியே பாபாவின் கால்களில் தனது சிரத்தை பதியவைத்து கட்டையாக விழுகிறார். அப்போது அங்கு ஒரு அதிசயம் நடந்ததே..
பாபாவின் கால்களின் இரு கட்டை விரல்களிலிருந்தும் கபகபவென்று வெள்ளம்போல் கங்கை-யமுனை சில்லென்று தாஸ்கணுவின் மேல் பாய்ந்து அவரை திக்குமுக்காட வைத்தது.
அங்கே தாஸ்கணு அனுபவித்தது பிரயாகை ஸ்னானம்... அன்பு, பக்தி, நன்றி க்கண்ணீர் பெருக்கோடு தாஸ்கணு பாபாவின் கால்களை கட்டிக்கொண்டார். அவரை அறியாமல் அவர் வாயிலிருந்து ஒரு பாடல் பாபாவின் பெருமை லீலாவிபூதி பற்றி ஆத்மார்த்தமாக வெளி வந்தது. வாயார பாடினார்.
பாபா யார் என்றே இன்றுவரை சரியான தகவல் இல்லை. அவர் நமக்காக வந்த தேவன். பகவானே ப்ரத்யக்ஷமாக அவதரித்தவர்.
நாமதேவர் கபீர்தாசர் போல் பாபாவும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காதவர். நாமதேவர் பீமரதி நதிக்கரையில் கோனாய் என்பவளால் கண்டெடுக்கப்பட்டவர். கபீர் பாகீரதி நதிக்கரையில் தமால் என்பவரால் கண்டெடுக்கப்பட்டு வளர்ந்தவர்கள். அப்படித்தானே சாய்பாபாவும் எங்கோ ஒரு முஸ்லீம் பக்கீரால் வளர்க்கப்பட்டவர்.
பதினாறு வயதில் ஷீர்டி கிராமத்தில் ஒரு வேப்பமரத்தடியில் முதலில் அறிமுகமானவர் பாபா . ப்ரம்மஞானி. உலகோடு கனவிலும் ஒட்டாதவர். மௌனி.
நானா சோப்தார் என்பவரின் தாய் அவரை முதலில் பார்த்தவர்களில் ஒருவள். அவரைப் பார்த்ததும் என்ன சொன்னாள் தெரியுமா?
''இவன் யார், இளைஞனாக அழகாக இருக்கிறான்?. இந்த பையன் தெவீக களையோடு காண்கிறானே. அவனை முதலில் அந்த வேப்பமரத்தடியில் ஒரு கல்லை ஆசனமாக கொண்டு உட்கார்ந்திருக்கும்போது தான் பார்த்தேன். ஊர் மக்கள் எல்லோரும் யார் இவன் என்று அதிசயமாக வந்து பார்த்தார்கள். அவனோ ஆழ்ந்த தவத்தில் இருந்தான். பகலில் யாருடனும் பழக, பேசவில்லை. இரவில் தனியாக எந்த பயமுமின்றி அந்த மரத்தடியிலேயே உறங்கினான். எங்கிருந்து வந்தவன் என்று யார் யாரோ கேட்டுப்பார்த்தும் ஒருவருக்கும் ஒரு வித தகவலும் இல்லை. அங்க லக்ஷணம் அமைந்தவனாக இருக்கிறானே. பார்த்தவுடனே எல்லோருக்கும் அவனை பிடித்துவிட்டது. பார்ப்பதற்கு இளைஞனாக தோன்றினாலும் அவன் ஒரு தேர்ந்த ஞானி. கருணை மிக்கவனாகவும் அன்பின் உருவமாகவும் அல்லவோ இருந்தான்.
அந்த வேப்பமரம் அருகாமையில் ஒரு பழைய கோவில். கண்டோபா என்ற தெய்வத்தை உள்ளூர் மக்கள் வழிபட்டுவந்தார்கள். ஒரு நாள் ஏதோ விசேஷம் அந்த கோவிலில். கூடியிருந்த பக்தர்களில் ஒருவருக்கு ''சாமி'' வந்துவிட்டது. அவர் மீது காண்டோபா இறங்கிவிட்டதாக மற்ற பக்தர்கள் பாவித்து அவரை அணுகி வணங்கி ''அருள் வாக்கு'' கேட்டார்கள்.
ஒரு கேள்வி: ''தேவா, இதோ இந்த வேப்பமரத்தடியில் இருக்கிற பையன் யார். ?''
''சாமி'' வாக்கு சொல்லியது: '' ஓஹோ தெரியனுமா? உடனே போய் ஒரு கடப்பாரையை கொண்டுவந்து இங்கே தோண்டுங்க என்று ஒரு இடத்தை காட்டியது''
தோண்டினார்கள். என்ன ஆச்சர்யம். ஏதோ செங்கல் சுவர் தோன்றியது. ஒரு பெரிய பாறையை போட்டு அதை மூடியிருந்தது. பாறையை நீக்கினார்கள். ஒரு பாதாள அறை பாதை. அதன் வழியாக உள்ளே கீழே நுழைந்தால் ஒரு பாதாள அறை . வாய் திறந்த பசு, கோமுகம், போல் உருவம், அதில் மரச்சிற்பங்கள்.
மாலைகள், தெரிகிறதா ? இங்கே தான் இந்த இளைஞன் 12 வருஷம் தவமிருந்தவன்'' என்றது காண்டோபா இறங்கிய ''சாமி''
பின்னர் அந்த இளைஞனை இது பற்றி கேட்டார்கள். பாபா சொன்ன பதில்:
''இது என் குருநாதர் இடம். அவர் ஆஸ்ரமம். இதை ஜாக்கிரதையாக பாதுக்காப்பீர்களா?'' என்று கேட்டார்.
அந்த சுரங்கப்பாதை, மூடப்பட்டது. பக்தர்கள் சேர்ந்துவிட்டார்கள்.
அரசமரம் போல் அந்த வேப்ப மரம் புனிதமாகிவிட்டது. மஹாலசாபதி மற்றும் பாபா பக்தர்கள் அந்த இடத்தை புனிதம் குன்றாமல் போற்றி வழிபட்டனர். அது பாபாவின் குருவின் சமாதிஸ்தானம் என்று புனித வழிபாட்டு ஸ்தலமாகியது.
No comments:
Post a Comment