யாரும் கேட்காமலேயே சில அறிவுரைகள் J K SIVAN
பைத்தியம் மாதிரி எதற்கெடுத்தாலும் சிரிக்காமல் எதற்கு சிரிக்கவேண்டுமோ அதற்கு மனம் விட்டு, வாய்விட்டு சிரிக்கவேண்டும். சிரிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ரொம்ப அருமையான அர்த்தம் பொதிந்த வாக்கியம்.
துன்பமும் இன்பமும் மனதில் தான் உருவாகிறது. வெளியிருந்து வருவதில்லை. சரிசமானமான நோக்கோடு அவற்றை எதிர்கொள்ளவேண்டும். வாழ்க்கை நிலையற்றது. துன்பம் இன்பமும் என்றும் தொடர்ந்து இருக்காது. மாறி மாறி தான் வரும். எதிர்கொள்ள மனோதைரியம் வேண்டும்.
சிறு துரும்பாக இருந்தாலும் பிறர் செய்த நன்மைக்கு நன்றி மறக்கவே கூடாது. வாழ்க்கையில் எத்தனையோ நமக்கு தெரியாத நல்ல விஷயங்கள் நடக்கிறது. கவனிக்க தனி கண்ணோட்டம் வேண்டும். இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
நம்பிக்கை மனிதனின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிப்பது. நம்பிக்கையால் தான் அடுத்த நிமிஷமே தெம்புடன் தொடர்கிறது. அதை எக்காரணம் கொண்டும் இழக்கக் கூடாது. பிறர் படுத்தும் காயங்களை நாமாக பட்டுக்கொண்ட காயம் போல் அவர்கள் மேல் குறையின்றி ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்.
பேசுவதைக் காட்டிலும் அமைதியாக கேட்பது ஞானத்தை கூட்டும். உன்னைப்பற்றி உன்னைவிட பிறர் தான் பேசவேண்டும். பிறர் வாயிலாக உன்னைப்பற்றி கேள்விப்படும்போது தான் உன் உண்மை ஸ்வரூபம் உனக்கு விளங்கும். நீ நினைக்கும் ''நீ '' வேறு என்பதும் புரியும்.
உனக்கென்று ஒரு தனி அடையாளம் நீ ஏற்படுத்திக் கொள்வது தான். பிறரின் நிழலாக இருக்காதே.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. கோபத்தில் குதிக்காதே. முடிவு என்பது நிதானமாக சிந்தித்து அமைதியான நேரத்தில் தீர்மானிப்பது. பின்னால் வருந்த வேண்டிய அவசியம் வராது.
சுறுசுறுப்பாக இரு. சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தம்பி. தூங்காதே.
யார் எது சொன்னாலும் ஆமாஞ்சாமி யாக இருக்காதே. ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். நீ யாருக்கும் அடிமையல்ல. பயத்தில் தலை ஆட்டவேண்டாம். பிடிக்காததை செய்யவேண்டாம்.
உடல் ஒத்துழைக்கும்போதே நிறைய இடங்களை சென்று பார். புது இடங்கள், புது மனிதர்கள் நமக்கு நல்ல பாடம். சில அதிசயங்கள் ஆச்சர்யங்கள் நமக்கு விளங்கும். வாழ்க்கையின் பற்பல கோணங்கள் புரியும்.
தனித்திரு, விழித்திரு பசித்திரு என்கிறார் வள்ளலார். அறிவுப்பசி இங்கே சொல்வது. கண் காது கொடுத்திருப்பதே கவனிக்க அதன் மூலம் அறிவு பெற.
எதற்கெடுத்தாலும் சந்தேகம் பயம் வேண்டாம். பிறரின் மதிப்புக்காக செய்யும் காரியம் உன் எண்ணத்திற்கு தோல்வியை தான் தரும். உன் கனவு மெய்ப்படவேண்டும் என்றால் நீ உனக்கென்று ஒரு வரம்பு, அதில் முறையான முயற்சியோடு தொடரும் காரியம், அதனால் பிறருக்கும் உண்டான பலன் தெளிவாக தெரியவேண்டும்.
வானத்தை வில்லாக வளைப்பேன் என்று எண்ணம் என்னால் எல்லாம் முடியும், என்று பேசுவது எளிது, ஒரு துரும்பையாவது அசைக்க முடிந்தால் அது தான் உன் சக்தி. வாயினால் பல மைல்கள் பறப்பவன் நடக்கும் போது சில அடிகளே நடப்பவன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் எப்போதும் உண்டு.
உயிர் உடலில் உள்ளவரை உடம்பை பேணவேண்டும். அது ஆத்மாவின் கோவில். கடைசியாக நீ உடம்பு சரியாகி இல்லாமல் அவஸ்தைப்பட்டதை நினைத்து பார்த்தால் இனி எப்படி ஜாக்கிரதையாக அதை பராமரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும்.
அன்பினால் எவரையும் எதையும் வெல்ல முடியும். அன்பு இல்லாதவனுக்கு அவனே கூட அவன் எதிரி.
இதுமாதிரி இன்னும் நிறைய சொல்லட்டுமா?
No comments:
Post a Comment