Friday, December 20, 2019

THIRUKKOLOOR PEN PILLAI



திருக்கோளூர்  பெண்பிள்ளை வார்த்தைகள் J K SIVAN  



       29  கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே


இறைவன் படைப்பில்  நாம் யாரும் சோடை போகவில்லை. எல்லோரும் ஒன்று போல இல்லாமல்  தனித்துவம் கொண்டவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் சிறந்தவர் என்ற  போது யார்  முதல் யார் முதல், யார்  கடைசி, யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர். இந்த வித்தியாசம் கூடாது. வேண்டாம் என்று தான் ஒவ்வொருவரையும் கொஞ்சமாவது வித்தியாசப்படுத்தி படைத்திருக்கிறான் கடவுள்.   ஒரே மாதிரி இருந்தால் தான் ஒப்புமை இட  முடியும்,  மனசு அதில் தங்கி படாத பாடு படுத்தும்.

மிதிலை என்று ஒரு நகரம். அதன் ராஜா  ஜனகர்.  எல்லோருக்கும் தெரியும்.  இவர் தான் சீதையை கண்டெடுத்து வளர்த்த தந்தை.  ''ஜனகன்''  என்றால்  ' ''பிறப்புக்கு  ஆதாரமான பெற்றெடுத்த  அப்பா'' என்று  பொருள். ஜனகர்  சிறந்த வேதாந்தி.  ஞானி. கர்ம யோகி.    செல்வமிக்க  நாட்டின்  ஏகபோக  மஹாராஜாவாக இருந்தும் தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமல், ஒட்டி உறவாடாமல், எதன் மீதும் மோகம் கொள்ளாமல், எதையும் எதிர் பார்க்காமல், சாஸ்திரத்தில் கூறியது போல்  உலக வாழ்க்கை நடத்தியவர் . தனது ராஜ்ய பாரத்தை,  இறைவனுக்கு செய்யும் தொண்டாகவே  கருதி பொறுப் பேற்றவர்.  அவருடைய குரு   மகரிஷி யாக்ஞவக்யர்..

ஜனகர்  மிதிலையில் மஹாராஜாவாக இருந்தபோது  அவரின் ஞானத்தை அறிய, பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன்  ஒரு   பிராமணன் போல்  வேடம் பூண்டு இரவில்  அலையும்போது  பிடிபட்டு   யாரோ ஒரு திருடன் என்று  சந்தேகப்பட்டு  காவல்காரர்கள்  அவரை  ஜனகன் முன்னால்  கொண்டு   நிறுத்துகிறார்கள்.  

ஜனகர்,  தண்டனையாக அந்த பிராமணனை  நாடு கடத்த  ஆணையிடுகிறார்.   அப்போது  அந்த பிராமணன் கேட்கிறான்:

“அரசே,  உங்கள்  நாட்டிற்கு  எது எல்லை ?

ஜனகருக்கு புரியாதா?    ”பிராமணரே   நீங்கள்  இந்த நாட்டில்  இருக்கலாமா வேண்டாமா  என்று  நீங்களே தீர்மானியுங்கள்''
என்கிறார்.    

பிராமணனாக  வந்த  ஸ்ரீமன் நாராயணனுக்கு  ஜனகரின் ஞானம், பண்பு அறிவு, திருஷ்டாந்தமாக புரிகிறது.  ஆசி வழங்கி செல்கிறார். பகவத் கீதையை  அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது  ஜனகர்  ஒரு ராஜ  ரிஷி  கர்ம யோகி என்று கிருஷ்ணன் இதனால் தான் சொல்கிறார். 

இன்னொரு  திருஷ்டாந்தம்.     ஒருநாள்   திகு திகுவென்று  மிதிலையில் தீ விபத்து.  எங்குமே  தீப்பிழம்புகள். நகரமே திடீரென்று காரணமில்லாமல்  பற்றி எரிகிறது. ஜனகரின் அரண்மனையும் கூட சேர்த்து தான். 

ஜனங்கள் எல்லோரும் முடிந்ததை வாரி சுருட்டிக்கொண்டு  மற்றதெல்லாம்   போட்டது போட்டபடி வீடு வாசல் எல்லாம் விட்டு உயிர் தப்ப ஓடுகிறார்கள்.   ஜனகர் மட்டும் துளிக்கூட  அசையவில்லை.   அவரைப் பொறுத்தவரை  அவருக்கு என்று எந்த சொத்து பொருள், உடைமை எதுவுமே  எங்கும் எதிலும் இல்லை.  ஆத்ம ஞானி யாகிய அவருக்கு  எதிலும் பற்றில்லையே. இந்த தீ விபத்து ஒரு மாயை. இதை உருவாக்கியவர்  அவரது குரு  யாஞவல்க்யர். ஜனகரை சோதனை செய்ய நிகழ்த்திய சம்பவம்.  த சோதனையில் வெற்றி   பெற்ற  சீடன் ஜனகனை  வாழ்த்தி ஆசி கூறுகிறார் குரு  யாஞவல்க்யர் . மிதிலை  பழையபடி ஒரு நஷ்டமும் இல்லாமல் செழிப்பாக வளமாகி விட்டது. .

எல்லாமே   நன்றாக அறிந்த திருக்கோளூர் பெண்மணி  ஸ்ரீ ராமாநுஜரிடம் அதனால்  தான் கேட்கிறாள்:  ''சுவாமி  நீங்களே சொல்லுங்கள்.    நான் என்ன  அந்த  ஜனகரைப்போல  ஒரு கர்மயோகியா? அந்த ஆத்ம சக்தியை  நான் என்றேனும் பெற்றதுண்டா , நான் எப்படி இந்த புண்ய க்ஷேத்ரத்தில் வாசம் செய்ய யோக்கியதை உடையவள்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...