Saturday, December 14, 2019

PESUM DEIVAM


பேசும் தெய்வம்  3ம் பாகம்.    J K  SIVAN 

                   நிம்மதியா கண் மூடணும் 

சில  விஷயங்களை  நாம்  படிக்கும்போது அவற்றில் உள்ள  அதீத பக்தி மனதில் இடம் பெறுகிறது. இது யார் எழுதி நான் படித்தேன் என்ற இதர விவரங்கள் இல்லை. ஆனால் அந்த விஷயம் இப்போது என்னால் மீண்டும் வேறு ஒரு விதத்தில் சொல்லப்படுகிறது  அவ்வளவு தான். இதை நான் அறிந்தேன், தெரிந்துகொண்டேன், ரசித்தேன், உங்களுக்கு என் வழியில் சொல்கிறேன் அவ்வளவு தான்.  யாருடையதையோ எனது என்று சொந்தம் கொண்டாடவில்லை

காஞ்சியில் மஹா பெரியவா இருந்தபோது  எண்ணற்ற பக்தர்கள் கூட்டம் வந்து   எந்நேரமும் அவரை தரிசித்தபடியே இருக்கும்.  எந்நேரமும்  எனும்போது  குறிப்பிட்ட கால நேரம் இல்லையே. மாதத்திலேயே தங்கி இருந்தவர்களும் சிலர். 


அப்படி  காஞ்சி சங்கர மடத்தையே  அடைக்கலமாக கொண்டவள் மகா பெரியவரின் ஒரு தீவிர  பக்தை  எசையனூர் பாட்டி. எசையனுர்  விழுப்புரம் ஜில்லாவை சேர்ந்தது.  பாட்டியின்  நிஜ பெயர் கோகிலாம்பாள்.  அந்தக்காலத்தில் பால்ய விவாகம். சீக்கிரமே  கல்யாணம். சீக்கிரமே கணவர் குழந்தை எல்லாம் இழந்த அனாதை.  காஞ்சி மட த்துக்கு  பெரியவாளுக்கு  சேவை  செய்வதை தன்  மீதி வாழ்நாள் லட்சியமாக கொண்டவள். 

மடத்தில் அனைவருக்கும்  பாட்டி மேல் ஒரு தனி மரியாதை, மதிப்பு.  கொஞ்சம் கூட  வித்யாசம் இல்லாமல் எல்லோரையும்  அதட்டி, அரட்டி உருட்டி உரிமையோடு வேலை வாங்குபவள். அவர்கள் ஏன்  இதை பொறுத்துக் கொண்டார்கள் என்றால்  பாட்டி  ரொம்பவும்  அவர்கள்  மேல்  பாசமும் அன்பும் கொண்டவள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.   பாட்டி  ஏதாவது சொன்னால் எவனும் தட்டமாட்டான்.

பிரதான அணுக்க தொண்டரை  பாட்டி ஒருநாள் அதிக கவலையோடு  கேட்பாள் :

''ஏண்டா ராமு,  இன்னிக்கு பெரியவா  பிக்ஷையை சரியா பண்ணினாரா?தெரியுமா உனக்கு?  எதுக்கு தான் இந்த ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் ஒரேயடியா வரிசையாக  வந்து தொலையறதோ தெரியலை
யே! தசமி வந்தாலே பயமா  இருக்கு.  பெரியவா  இப்படி நாலு நாள் சேர்ந்தாப்போல  பட்டினியா வெயிலே போட்ட  வடாம்  மாதிரி வெறும் வயிறோடு  காயிறாரே! அவா  உடம்பு என்னத்துக்காகும்?”

இது ஒரு உதாரணம். இப்படி கேட்டா கோபமா  வரும்.  அதில் உள்ள உண்மை. பெரியவா உடம்பு மேலே இருக்கிற அக்கரை அதில் முழுசா தெரியவில்லையா?

”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கொஞ்சம்  நீங்க  பெரியவா கிட்ட கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ! இப்படி விடாம பச்சை தண்ணீர்லே முழுகி எழுந்தா  உடம்பு என்னத்துக்கு ஆகும்?”

“” விசு, எதுக்கு  நீ  இப்படி  பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று ஒருவரை  அதட்டுவார். 

சொன்னது கொஞ்சம் தான். இதுபோல் நிறைய  ஒவ்வொருநாளும்.  எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு எப்போதும்  மடத்தில் எல்லோரிடமும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

 பெரியவா  மேனா  எனும்  பெட்டி  பல்லக்கில்  பிரயாணம் செய்த காலம்.  என்ன தோன்றுமோ பாட்டிக்கு. பட்சணங்கள் செயது ஒரு  பொட்டலமாக மூட்டை கட்டிக்கொண்டு நேரே  வாசலுக்கு ஓடுவாள்.  பெரியவாளை  பல்லக்கில் தூக்கிச் செல்லக்  காத்திருக்கும்  தொண்டர்களிடம் “”நீங்க எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதோ  இதிலே இருக்கும் பட்சணங்களை எடுத்து எல்லோரும் பங்கு போட்டுண்டு  சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரித்து கொடுப்பார். பாட்டி மேல் கோபம் வருமா?

வருஷங்கள் ஓடியது.  எசையனூர்  பாட்டிக்கு முன்பு போல்  ஓடி யாடி வேலை செய்ய முடியாமல் தள்ளாமை. மனது பெரியவாளிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கும்.  ''பெரியவா  எனக்கு என்ன வேண்டும்.  பபொன்னா , பொருளா,  ஒண்ணுமே இல்லை. வேண்டவே வேண்டாம். நிம்மதியா  இத்தனை நாள்  என்னால் முடிஞ்சதை செய்தேன். உங்களை ஒண்ணு  தான் கேட்பேன்.  என்னை நிம்மதியா கண்ணை மூட வையுங்கோ'' 

''எங்கே பாட்டியை  காணோம். எப்படி இருக்கா? '' அவ்வப்போது பேசும் தெய்வம் அவளை பற்றி விசாரிப்பார்.   சிஷ்யர்கள் அவளைப் பற்றிய  விஷயம் சொன்னால் கூர்ந்து கேட்பார். 

ஒருநாள் பெரியவா ஒரு தொண்டரை  கூப்பிட்டு, ”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு''   என்கிறார்.

 அதுதான்  பாட்டிக்கு  கடைசி உணவு.    

'' பாட்டி பெரியவா கொடுத்தனுப்பினா''  --  கண் மங்கியது. காது கேட்டது. முகம் மலர்ந்தது வாய் திறந்தது. தொண்டர்  வாயில் பெரியவா பிரசாதம்  துளஸிஜலத்தை  ஊற்ற  சில நிமிஷங்களில்  எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது எல்லோருக்கும்  ஆச்சர்யம். 

''பாட்டி போய்ட்டா  பெரியவா.''      

மகா பெரியவா அதற்குப்பிறகு மூன்றுநாள் தொடர்ந்து  மௌன விரதம். பாட்டி ஆசைப்பட்டு கேட்டதை தான் பெரியவா  கொடுத்துவிட்டாரே.   ''நிம்மதியா கண்மூடணும் '' உள்ளன்போடு பெரியவாளை நினைத்தவர்களுக்கு என்றும்  பெரியவா அனுக்கிரஹம் உண்டு.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...