Sunday, December 8, 2019

VALLALAR


வள்ளலார்  J K  SIVAN 

                                          இப்படியுமா நடந்தது?



கோர்ட் , கேஸ்,  என்பது எல்லாம் ஆமை வேகத்தில், அல்ல , நத்தை வேகத்தில்  பல  ஆண்டுகள் நடந்தால் குற்றவாளிகள் எளிதில் வெளியில் வந்து புது புது  குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றெல்லாம் பேச்சு. குற்றத்துக்கு தண்டனை குறைவாக தான் கிடைக்கிறது. சட்டம் எந்த காலத்திலோ, குற்றங்கள் குறைந்திருந்த வெள்ளைக்காரன் காலத்தவை.  நவீன குற்றங்கள் தெரியாத காலத்தில் எழுதப்பட்டவை.  அவற்றை மாற்றவேண்டும். நல்லவர்கள் பொய் வழக்குகளில் மாட்டிக்கொண்டு  பண, மன வேதனைக்குட்படக்கூடாது.

இப்படிப்பட்ட  கோர்ட்  கேஸ்கள்   மஹான்களை கூட  விடவில்லை.

அருட்பெருஞ்சோதி வள்ளலார் எவ்வுயிர்க்கும் தீங்கு எண்ணாத பெருந்தகை. காருண்யத்தின் மனித உரு. வாடிய பயிரைக்கண்டாலே வதங்கும் உள்ளம் கொண்டவர். அவர் இயற்றிய அருட்பா ஒரு ஏமாற்று வித்தை, அதை ''மருட்பா'' . மருள் என்றால் மாயை.   ''கண்கட்டு வித்தை காட்டுபவரின் பாக்கள்''  என்று நீதிமன்றம் தீரப்பு அளிக்கவேண்டும் என்று வழக்கு போட்டவர்  ஏதோ ஒரு சாதாரணர் அல்லர். இலங்கை தமிழறிஞர் ஆறுமுக நாவலர். வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது.

மஞ்சக்குப்பம் மேஜிஸ்திரேட் முன்னர் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

''சிதம்பரம் அருகே கருங்குழியை சேர்ந்த ராமலிங்கம் பிள்ளை, ஏதோ ஒரு வைராக்கியத்தாலே சாமியாராகி, சென்னப்பட்டிணம் போய் அங்கே சில பாடல்கள் எழுதினார். தாம் சிவாநுபூதி பெற்றவர் என்று உலகம் நம்ப தன்னை புகழ   தான்  எழுதிய அந்த பாடல்களுக்கு  ''அருட்பா''  என்று பெயர் சூட்டினார். . இவர்  ஏமாற்று வித்தைக்காரர்,  மக்களை  தனது பக்கம்  வசப்படுத்தி  துன்பப் படுத்தக் கூடியவர்.  இவர்  பாடல்களை வெளியே வராமல்  தடை  போடவேண்டும்.

தன்னை திரு அருட்ப்ரகாசம் பெற்ற வள்ளலார் என்றும் பெயர் சூட்டிக்கொண்டார். தமது மாணவர் ஒருவரை விட்டு எழுதி அவற்றை பிரசுரித்து புத்தகமாக்கி விற்று பணம் சம்பாதித்தார். அறிவிலிகள் அதை நம்பி தேவாரம் திருவாசகத்துக்கு   இந்த ராமலிங்கம் பிள்ளை எழுதிய    பாடல்களை (திரு அருட்பா!)  ஈடாக்கி ஆலயங்களில் சிவதரிசனத்தின் போது ஓதுகிறார்கள்.  இது உடனே  தடை  செய்யப்படவேண்டும் '' இது தான்  பிள்ளை கொடுத்த பிராது.

ஆறுமுக நாவலர் ' போலி அருட்பா மறுப்பு'' என்று ஒரு நூல் எழுதினார். அதில் ராமலிங்கம் பிள்ளை என்பவர் அப்பர் சுந்தரர் மணிவாசகர் போன்ற சமயாச்சாரியார்களுக்கு ஈடாக சமம் என்றால் அவர்களும் இவரைப்போலவே அல்லவோ போலி அருள் பெற்றவர்களாக பொய்யாகி, பக்தர்கள் வேதனைப்படுவார்கள் என்று வள்ளலாரை எதிர்த்தார். .

நாவலரும் வள்ளலாரும் சிதம்பரத்தில் ஒரு சமயம் நேரடியாக சந்தித்தார்கள். சிதம்பரம் தீட்சிதர்களுக்கு நாவலரைப்  பிடிக்காது. எனவே வள்ளலாரை உபயோகித்து நாவலரை அவமதிக்க ஒரு கூட்டம் கூட்டினார்கள். சிதம்பரத்தில் 1869 சுக்ல வருஷம் ஆனி மாதம் உத்தரம் நக்ஷத்திரம் அன்று கூட்டம் நடைபெற அதில் நாவலரும் வள்ளலாரும் அழைக்கப்பட்டு பங்கேற்றார்கள். வள்ளலார் உட்பட பலர் நாவலரை அவமதித்து பேசியதாக அடிக்கக் கூட முற்பட்டதாக செய்தி  ஒன்று  '' பேரம்பல பிரசங்கம்'' என்று வெளியாகியது.

இதை தொடர்ந்து  தான் மஞ்சக்குப்பத்தில்    மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு வள்ளலார் மேல் தொடர்ந்தார்கள்  ஆறுமுகநாவலர் ஆதரவாளர்கள். நாவலரை அவதூறாக வள்ளலார் அந்த கூட்டத்தில் ஒன்றும் பேசவில்லை என்று வள்ளலார் தரப்பினர் கூறினார்கள்.

காலை  ஒன்பது மணியிலிருந்தே அன்று மஞ்சக்குப்பம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கூட்டம் அம்முகிறது. மாஜிஸ்திரேட் வந்து இருக்கையில் அமர்கிறார். கேஸ் எடுக்கப்படுகிறது. டவாலி ''ஆறுமுக நாவலர் '' என்று மூன்று முறை அழைக்கிறான். அவர் நுழைகிறார் நீதிபதியை வணங்குகிறார். அவர் வக்கீல் பக்கத்தில் அமர்கிறார்.

அடுத்து டவாலி ''சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை '' என்று மூன்று முறை உரக்க கூவினதும் எங்கும் ஒரே அமைதி. காற்று கூட நின்று விட்டது. வெள்ளை ஆடை ஒன்றை தலையை சுற்றி உடலை மூடி இரு கரங்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு அந்த தெய்வீக மனிதர் உள்ளே நுழைகிறார். அப்போது என்ன நடந்தது தெரியுமா.

யார் வழக்கு தொடுத்தாரோ அந்த ஆறுமுக நாவலர் எழுந்து  இரு கரம் கூப்பி யார் மீது வழக்கு பதிவானதோ அந்த பிரதிவாதியை வணங்குகிறார். அவரைச்  சேர்ந்தவர்களும் அவ்வாறே வணங்குகிறார்கள். ஒரு இயந்திரம் மாதிரி அந்த மேஜிஸ்திரேட் தானாகவே ஆசனத்திலிருந்து எழுந்து இரு கரம் கூப்பி வழக்கு தொடுக்கப்பட்டவரை வணங்குகிறார். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

உண்மையோ பொய்யோ, அன்று தீர்ப்பளித்த மேஜிஸ்திரேட்  வேறு யாருமில்லை.   ஸர் T . முத்துசாமி ஐயர். பின்னர் சென்னை நீதிமன்றத்தின் பிரிட்டிஷ் கால முதல் தமிழர் நீதிபதி. அவர் சிலை சென்னை நீதிமன்றம் வாசலில்  இன்றும்  இருக்கிறது.  (அதன் மீது  காக்கைகள் பறவைகள் அசிங்கம் பண்ணுவதை ஆள் வைத்து தினமுமே  சுத்தம்  செய்யலாமே)

  கோர்ட்டில்   அவர்  ஆஜராக  உத்தரவு.  அந்த  கோர்ட்  பண்ணின பாக்கியம் அவர்  கோர்ட்டில்  தனது வெள்ளை  மேலாடை போர்த்தியவாறு  வந்து   நீதிபதி முன்  நின்றார்.   என்ன தோன்றியதோ  அந்த  ஆங்கிலேய  நீதிபதிக்கு  அவர்  வந்து  நின்ற உடனேயே கோர்ட்டில்  அத்தனை பெரும்  எழுந்து  நின்றதைப் பார்த்துவிட்டு  தானே  தனது இருக்கையில்   இருந்து  தன்னிச்சையாக எழுந்து  நின்று அவரை  வணங்கினார்.  ஒரே  வரி  தீர்ப்பு.  இந்த  கேஸ்  தள்ளுபடி  செய்யப்பட்டது''    அவர்  வேறு  யாருமில்லை.  நம்மோடு அண்மையில்  வாழ்ந்த சிதம்பரம்  ராமலிங்கம் பிள்ளை  என்கிற வள்ளலார்  சுவாமிகள்.  


வடலூர் ராமலிங்க அடிகள் என்ற பெயர் சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற பெயரை விட அதிகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இருப்பினும் வள்ளலார் என்ற பெயர் உலகளவில் உலவுகிறது.

வள்ளலார் வாக்கு எப்படி என்று ஒரு பாடலில் அவர் பாடுவதை ரசியுங்கள்:

'''நான் உன் மூத்த பிள்ளை. என் கையில் கருணை நீதிச் செங்கோல் தரப்பட்டிருக்கிறது. ஜீவ காருண்யம் செய்வதற்கு என்றே என் தெய்வமே, நீ உன்னை என்னில் காட்டி உன்னில் என்னை ஏற்றுக் கொண்டாய். இனி எனக்கு துயர் இல்லை. நல்லதே செய்தாய். என் அன்னையே, அரசே, தந்தையே, எல்லாமும் நீயே, என் மனத்திலுருந்த திரையை நீக்கிவிட்டாய் . உன் ஒளி இனி என்னுள்ளே, உன்னை சரணடைந்தேன்''

ஒரு நாள் உள்ளேயிருந்து ஒரு தீபத்தை கொண்டுவந்து அனைவருக்கும் காட்டி வெளியே வைத்தார்.

''இது தான் அருட்சோதி தெய்வம், ஆண்டருளும் தெய்வம்.'' என்று வழி காட்டினார். அன்பே தெய்வம், ஆருயிர்க்கெல்லாம் அருள் செய்க. கருணை செய்வீர்'' என்று உபதேசித்தார்.

''நான் இந்த அறைக்குள் செல்கிறேன். யாரும் கதவைத் திறக்க முயற்சிக்கவேண்டாம். அரசாங்கம் என் விருப்பை மீறி கதவை உடைத்து திறந்தாலும் உள்ளே நான் இருக்கமாட்டேன். எல்லா உயிரிலும் கலந்திருப்பேன் அவர்கள் எல்லா உயிரிடத்தும் காருண்யம் புரிய செய்வேன். இது என் முடிவு.

இப்படி வள்ளலார் சொன்னது 30.1.1874 நள்ளிரவு. உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை என சேதி கேட்டு தென்னாற்காடு வெள்ளைக்கார கலெக்டர் டாக்டர்கள் புடை சூழ கதவை திறந்து உள்ளேசென்றபோது அங்கே அழுகிய பிண நாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பச்சை கல்பூர வாசனை மணத்தது.

அருளாளர் சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்ற இயற்பெயர் மறந்துபோய் உலகமுழுதும் வள்ளலார் எனும் புகழ்பெற்ற அடிகளார் 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது.

கோடிக்கணக்காக எத்தனையோ பேர் பல வருஷங்களாக இன்றுவரை வடலூரில் அவர் நிர்மாணித்த சித்தி வளாகம், சத்ய ஞான சபையில் பசிப்பிணி தீர்ந்து மகிழ்கிறார்கள். யார்போனாலும் சாப்பிடாமல் உள்ளே போகக்கூடாது. நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...