இது முக்கியம் என்று தோன்றுகிறது. J K SIVAN
மிக முக்கியமான ஒரு உண்மை நம்மால் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்றால் அது இது தான். நமது முன்னோர், பெற்றோர், நமக்கு சொத்து, நகை, வீடு வாசல், பட்டம் பதவி மட்டுமா தந்து விட்டு போனார்கள்?
இதெல்லாம் தாண்டி இன்னொன்று இருக்கிறதே, அது தான் அவர்களுக்கு அவர்களது முன்னோர் வழங்கி விட்டு சென்றது.
ஒட்டப்பந்தயத்த்தில் ரிலே relay ரேஸ் என்று ஒன்று உண்டு. நான்கு ஐந்து சுற்று பெரிய மைதானத்தை நான்கு ஐந்து குழுக்களாலாக பிரித்து க்கொண்டு ஓடுவார்கள். ஒரு இடத்தில் ஒரு குழுவில் இருப்பவர் வேகமாக ஓடிவர அந்த குழுவை சேர்ந்த இன்னொருவர் தூரத்தில் இன்னொரு இடத்தில் தம் குழு ஆள் ஓடி வர காத்துக்கொண்டு இருப்பார், அவர் கையில் இருக்கும் ஒரு கம்பை வாங்கிக்கொண்டு இவர் ஓடுவார், இன்னும் சற்று தூரத்தில் இன்னொருவர் ரெடியாக காத்திருப்பார் அவர் அந்த கம்பை வாங்கிக்கொண்டு மேலும் ஓடுவார். இப்படி கடைசி சுற்றில் எந்த குழுவை சார்ந்தவர் கம்பை தாங்கிக்கொண்டு முதலில் வந்து கயிற்றை தொடுகிறாரோ அந்த குழு வெற்றி பெற்றதாக தீர்ப்பு.
நமக்கு ''கம்பு'' baton தரப்பட்டிருக்கிறதே, அதை நாம் அடுத்த தலைமுறைக்கு தர வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? நமது மரபுக்கென்று, மதத்திற்கு, ஒரு பண்பாடு, நம்பிக்கை, பக்தி, இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் பாலோடு அதையும் கலந்து தான் நமக்கு ஊட்டி இருக்கிறார்கள். எத்தனையோ காலமாக இது பாரம்பரியமாக தொடர்கிறது. இது அவ்வாறே அடுத்தடுத்து வரும் பரம்பரைக்கு ஜாக்கிரதையாக போய் சேரவேண்டும்.
நமது குழந்தைகளுக்கு சிறுவயது முதல், சுத்தம், சுகாதாரம், தெய்வ பக்தி, பெரியோரிடம் மரியாதை, கீழ்ப்படிதல், மனச்சாட்சி அறிந்து எதிராக செயல் படாமல் இருப்பது, பொறாமையின்மை, பொய் சொல்லாமை, நேர்மை, இதெல்லாம் பழக்கத்தில் வரவேண்டும். உலகம் அப்போது தான் நமக்கு சகல சந்தோஷத்தையும் தரும் சாதனமாக மாறும். அப்படி மாறினால் கொலை, கொள்ளை, நகை பறிப்பு, கொலை, கற்பழிப்பு, சிறுவர் பாலியல் கொடூரம், மத வெறி இல்லாத உலகமாக அது காணப்படும்.
குடும்பத்தில் அப்பா அம்மா சண்டைக்கோழிகளாக இருந்தால் அவர்களுக்குள் அன்பு இல்லை என்று ஆகாது. கருத்து வேற்றுமை இப்படி ஒரு உருவம் எடுக்கிறது. அவ்வளவு தான். அமைதியாக நிதானமாக அணுகினால் எதுவும் சாதிக்கமுடியும்.
நண்பர்களை மாற்றவேண்டியதில்லை, நண்பர்கள் தானாகவே மாறினாலோ, நாமே மாறினாலோ போதும்.
நட்பு என்றால் எல்லாவற்றிற்கும் ஆதரவு தரவேண்டும் என்று இல்லை. சில விஷயங்களில் கொஞ்சம் எதிர்ப்பு உள்ளே இருக்கலாம். இது யதார்த்தம். நல்ல நட்பு பல சில வித்யாசங்க ளோடும் நன்றாக வளரும். ரோஜாவில் முள் இல்லையா?
வயது, குலம், ஆண் பெண் வேறுபாடு, இடம். காலம் இதெல்லாம் தூய நட்புக்கு சம்பந்தமில்லாதவை. நேரில் பார்க்காமலே கூட எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே. இது தான் இதயம் பேசுவது.
எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி ஒரே நாள் ராத்திரி மாறிவிட முடியாது. நீண்ட கால பக்குவம், பயிற்சி, முயற்சி எல்லாம் தேவை.
எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி ஒரே நாள் ராத்திரி மாறிவிட முடியாது. நீண்ட கால பக்குவம், பயிற்சி, முயற்சி எல்லாம் தேவை.
குழந்தைகள் வேறு பால், பருப்பு நெய் சாதத்தோடு மட்டும் வளரவில்லை. அளவற்ற அன்பு, பாசம் இது தான் அவர்களை வேகமாக வளர்க்கிறது. நமது வளர்ச்சிக்கு, மனப்பக்குவத்துக்கு, குணாதிசயத்துக்கு நாமே தான் காரணம்.
செயல் புரிய நிறைய கால அவகாசம் தரப்பட்டிருக்கிறது. சரியாக பயன்படுத்தவேண்டியது நாமே.
யாரை நம்பினோமோ அவன் காலை வாரிவிடுவதையும், எவனை சந்தேகித்தோமோ, எதிர்த்தோமோ, வெறுத்தோமோ, அவன் காலத்தில் உதவுவதும் உலகில் நிகழ்வது தான்.
கோபப்பட சந்தர்ப்பங்கள் வரலாம். அது கொடூரத்தில் முடியக்கூடாது.
அனுபவம் என்பது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது செயலின் விளைவு. அது கற்றுக்கொடுத்த பாடம்.
மற்றவன் உன்னை மன்னிக்கும் முன்பு, நீ உன்னை மன்னித்துவிடு. மீண்டும் எந்த தவறை செய்தாயோ அந்த தவறை வாழ்நாளில் மறுபடியும் தலை தூக்காத எண்ணமாக மறந்து போ.
நமது துக்கத்துக்கு துன்பத்துக்கு உலகம் வருந்தப்போவதில்லை, எண்ணற்றோரின் இத்தகைய சுக துக்கங்கள் வினாடிக்கு நூறு ஆயிரமாக அதற்கு வந்து போய்க்கொண்டே தானே இருக்கிறது.
மனோபாவம் என்பது மனிதனுக்கு மனிதம் வேறுபடுவது. ஒரே காட்சி காணும் இருவர் புரிதலும் வேறு மாதிரி தான் இருக்கிறது.
உனக்கு தெரியாத, முன் பின் பழக்கமில்லாதவர்களால் கூட உன் வாழ்வில் நல்ல மாற்றத்தை உண்டு பண்ண முடியும்.
பெயரின் பின் நீண்டதாக இருக்கும் எழுத்துக்கள் அவனது படிப்பை, பெற்ற பட்டத்தை, சான்றை, பறை சாற்றும்,. அவை அவனது உண்மை ஸ்வரூபத்தை என்றும் காட்டாது. அவன் இதயம் தான் அவனை யார் என்று உணர்த்தும், உலகம் அதை தான் மதிக்கும்.
No comments:
Post a Comment