Thursday, December 19, 2019

SHEERDI SAIBABA

மனிதருள் ஒரு தெய்வம்  J K SIVAN
ஷீர்டி பாபா  

        உட்கார்  ஹுக்கா புகை பிடிக்கலாம் 

ஷீரடியில்   பாபா  முதலில் ஒரு  வேப்ப மரத்தடியில் தான்  காணப்பட்டார் அல்லவா?.  அந்த  மரம் இருக்கும் இடம் அதை சுற்றி இருக்கும்  சில இடங்கள் எல்லாம் முதலில்   விலைக்கு வாங்கியவர்  ஹரி விநாயக ஸாதே.   அந்த இடத்தில்   ''ஸாதே சத்திரம்''  என்று ஒரு கட்டிடம் உருவாகி  யாத்ரீகர்கள் வந்து தங்குவதற்கென்று  வசதி செய்தார்

 வேப்பமரத்தை  சுற்றி ஒரு  மேடை எழும்பியது.   மேடை ஏறுவதற்கு  படிகள் உண்டாகியது.  மேடையில்  பக்தர்கள் அமர விசாலமாக  இடம்.  வடக்கே பார்த்த  ஒரு  தாராளமான   சம தள கூடம்.  அதில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்ய, ஊதுபத்தி சாம்பிராணி கொளுத்த  வசதிகள்.

வியாழன் வெள்ளி அன்று விசேஷமாக  பக்தர்கள் கூட்டம் சேரும்.  இந்த  சத்திரம் காலப்போக்கில்  சிதிலமாகி    ஷீரடி சாய்  ஸமஸ்தான நிர்வாகம் பின்னர்  அதை புதுப்பித்தது. 

பிறகு  தீக்ஷித் சத்திரம்  என்று ஒன்று  தோன்றியது.  தீக்ஷித் ஏற்கனவே சொல்லப்பட்ட  காகா சாஹேப் எனும் பாபா பக்தர். பம்பாயில் வக்கீல்.  அவர் பற்றிய  ஒரு சம்பவம் இங்கே  சொல்கிறேன்.

ஒரு முறை இங்கிலாந்து சென்ற சமயம் லண்டனில்  தீக்ஷித்துக்கு  ஒரு விபத்தில் ஏற்பட்ட  காலில் காயம் ஆறவே இல்லை.  ஊருக்கு திரும்பி  வைத்தியர்கள் பலரை  சென்று பார்த்து எந்த மருந்துக்கும்   கட்டுப்படவே இல்லை.  கஷ்டம் தொடர்ந்தது.   அவரது நண்பர்  நானாசாஹேப்  சாந்தோர் கரை  சந்தித்தபோது   

''காகா,    எதற்கு நீங்கள் அவதிப்படுகிறீர் கள்?  நமது பாபாவிடம் சென்று காண்பியுங்கள். அவரால் குணம் ஆகுமே'' என்றார் சாந்தோர்கர்.   1909ல்  பாபாவை  காகா தீக்ஷித் சென்று பார்க்கிறார்.  பாபாவை தரிசித்தது  முதல்   தீக்ஷித்துக்கு  ஏதோ ஒரு  புத்துணர்ச்சி அவருள்  சுரந்தது.   மனம்  மிகவும் ஆனந்தமடைந்தது. காலில் வலித்த  காயம் நினைவில் இல்லை. பாபாவிடம் அதை சொல்ல வந்தவர் இன்னும் சொல்லக்கூட இல்லையே . எப்படி குணமானது?   தீக்ஷித்  ஷீர்டியிலேயே  பாபா அருகில் தங்கி  விட்டார். 

 அப்போது அவர்  கட்டியது தான்  '' தீக்ஷித் சத்திரம்''.  டிசம்பர் 10,  1910ல்  உருவா னது.   தீக்ஷித் யாத்ரீகர்கள் மண்டபம்  கட்டப்பட்டு 1911  ராமநவமி  அன்று  பூஜைகளுடன் திறக்கப்பட்டது.    


நாம் ஏற்கனவே
  முந்தைய  கட்டுரைகளில்  அறிந்த  நாகபூரை சேர்ந்த  பூட்டி  எனும் செல்வந்தரால்   பின்னர்  மூன்றாவது ஆலயம் பிறகு தோன்றியது. அதில் தான்  கிருஷ்ணன் கோவிலில்  பாபா வின்  உடல் சமாதி ஸ்தானமாகி  இன்று நாம் காணும்   ' சமாதி மந்திர்'' தோன்றியது .  ஆரம்பகாலத்தில்  அதை சுற்றி ஒரு  பெரிய நந்தவனம் இருந்தது.  அந்த தோட்டம் முழுதுமே பாபாவினால்  நடப்பட்ட செடி  கொடி  மரங்கள்  இருந்த இடம்.  தினமும் பாபாவால்  நீர் வார்க்கப்பட்டு  வளர்ந்தவை..    
ஷீர்டியில் மூன்று  ஆலய மண்டபங்கள் இவ்வாறு  முதலில்   ஸாதே , தீக்ஷித்,  பூட்டி  ஆகியோரால் உருவாகியது. இவற்றில் ஸாதே மண்டபம்  மிகவும் உபயோகமாக இருந்தது. 
கொஞ்சம் பின் நோக்கி  செல்வோம்.  பழைய சம்பவங்களை நினைவு கூர்வோம். 
ஒரு  காலத்தில் நிஜாம் ராஜ்ஜியம்  இருந்தபோது, அதில் ஒளரங்காபாத்  ஒரு ஜில்லா. அதில்  தூப்  என்று ஒரு சிறிய கிராமம்.   சந்த் பாட்டீல் என்ற ஒரு இஸ்லாமிய பணக்காரர் ஊருக்கு தலைவராக
 வாழ்ந்திருந்தார்.  நீண்ட பயணங்களுக்கு குதிரை மேல் போவது அப்போது வழக்கமாக இருந்தது.   பாடீல்   தனது கிராமத்திலிருந்து ஒளரங்காபாத்துக்கு ஒரு   அலுவலக  காரியமாக செல்லும்போது  வழியே  சற்று களைப்பாற  ஒரு  இடத்தில் தங்கினார்.  ஆசனம், சேணம் எல்லாம் அவிழ்த்து விட்டு  குதிரையை ஒரு மரத்தில் கட்டி  விட்டு தூங்கிப் போய்விட்டார்.  எழுந்தபோது  குதிரையை காணோம்.    யார்  குதிரையை அவிழ்த்து சென்றது?  எங்கே தேடியும் குதிரை கிடைக்கவில்லை . ரெண்டு மாதங்கள் ஓடிவிட்டது. குதிரை மீது உட்காரும் தோல் ஆசனம் மட்டும் அவரிடம் இருந்ததால்  அதை முதுகில் சுமந்தவாறு   ஒளரங்காபாத்திலிருந்து தனது கிராமத்துக்கு நடந்தார்.  நாலு   ஐந்து  மைல் தூரம் நடந்த பின்  வழியில் ஒரு மா மரம்  கண்ணில் பட்டது.  அதனடியில் ஒரு புதிய, வினோத  ஆசாமி உட்கார்ந்திருந்தார். தலையில் குல்லா, நீள அங்கி.  கஷ்கத்தில்  ஒரு  சிறிய  கைத்தடி.  புகை பிடிக்கும் ஒரு   நீண்ட  குழாய் மண்குடுவையை ,  உட்கா என்று சொல்வார்களே அதை   சுத்தம் செய்து பற்ற வைத்க முயன்று கொண்டிருந்தார்.  யாரோ ஒரு பரதேசி  பக்கிரி போல் இருக்கிறது என்று பாடீல்  எண்ணினார்.  

சாந்த் படீல்   அவர்  இருந்த இடத்தை தாண்டி போகும்போது  இருவர் கண்களும் சந்திக்கிறது.  '' இங்கே வா''  என்று ஜாடையால் அழைக்கிறார் அந்த பக்கிரி.  

''இந்தா  நீயும்  புகை பிடிக்கலாம் . கொஞ்சம் இளைப்பாறு '' என்று சொல்கிறார்.  பாடீல்  ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தியில் அவர் அருகே  அமர்கிறார். புகை பிடிக்க  குழாயை தயார் செய்து  கொண்டு பக்கிரி கேட்கிறார்: 

''எதற்கு  உன் முதுகில் குதிரை மீது உட்காரும் ஆசனத்தை சுமந்து கொண்டிருக்கிறாய்?''

''ஐயா  அதை ஏன் கேட்கிறீர்கள்.  என் தலையெழுத்து, துரதிர்ஷ்டம்.   தூப்  கிராமத்திலிருந்து ஒளரங்காபாத்  செல்ல என் குதிரை மீது பயணம் செய்தேன் . வரும் வழியில்  ஒரு இடத்தில் இளைப்பாற தங்கினேன். என் குதிரை காணாமல் போய்விட்டது. ரெண்டுமாதமாக தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.  குதிரையை மரத்தில்  கட்டும்போது  நான் கழற்றி வைத்த இந்த ஆசனம் சேணம்  மட்டும் தான் மிச்சம்''

''இங்கே  சற்று தூரத்தில்  ஒரு  ஓடை செல்கிற தே. அங்கே  ஒரு குட்டை  இருக்கிறதே  அங்கே போய்  தேடினாயா?''என்கிறார் பக்கிரி.
பாட்டீல்  எழுந்து ஓடுகிறார்.  அந்த குட்டை இருக்கும் இடத்தை விரைவில்  கண்டு பிடித்தார். அடர்ந்த வனம். அதில் எங்கோ  ஒரு மறைவான இடத்தில்  ஒரு குட்டை. அதன்  கரையில் அவர் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது.  எப்படி இருக்கும்  படீலுக்கு?   ஆச்சர்யம் தாங்க  முடியவில்லை.  இந்த பக்கிரி சாதாரணமான ஒரு மனிதனே  இல்லை,  நிச்சயம்  சக்தி வாய்ந்த யாரோ ஒரு யோகி  ''    குதிரையை அழைத்துக் கொண்டு  பக்கிரி யிடம் வந்தார்.

உக்கா  குழாயை அதற்குள் துடைத்து சுத்தம் செய்து  சரி பண்ணி விட்டார்  பக்கிரி. இனி அதை கொஞ்சம் கரி போட்டு  பற்ற வைக்க வேண்டும். தண்ணீர்  வேண்டும் அந்த ஜாடியை நிரப்பி  அது ஆவியாகுவதற்கு.  அந்த ஆவியில் தான் புகையிலை வதங்கி   குழாய் வழியாக  புகை பிடிக்க முடியும். 

 பாட்டீல் கண்ணெதிரே ஒரு அதிசயம் அங்கே நிகழ்ந்தது.  பக்கிரி  தனது கைத்தடியை எடுத்து  அருகே  தரையில் வேகமாக ஒரு குத்து  குத்தினார்.  அட  அந்த பள்ளத்திலிருந்து  கண கண வென்று  சிவப்பாக  எரியும் தணல்  வெளியே வந்தது.  அதை எடுத்து  குழாயில்  வைத்தார்.   அடுத்து  ஜாடியில் நீர் வேண்டுமே? மரத்தடியில்  நீருக்கு எங்கே போவது ?
மறுபடியும் கைத்தடி வித்தை தான்.  ஒரு குத்து. அந்த இடத்திலிருந்து ஒரு சுனை மாதிரி  நீர் குபுகுபுவென்று  வெளியே வந்தது.  ஜாடியில் நீர்   நிரப்பி துணியால் மூடியவுடன் , தணலில் நீர் ஆவியாகி, புகையிலை அதில் நிரப்பி  ஒரு  இழுப்பு இழுத்தால்   புகை பிடிக்கலாம்.  பக்கிரி நன்றாக புகை பிடித்து குழாயை  பாடீல் பக்கம் நகர்த்த அவரும் புகை பிடித்தார்.  

''ஐயா  குருவே, என்னோடு என் ஊருக்கு வாருங்கள், என்னோடு தங்குங்கள்''   இருவரும் தூப் கிராமம் நடந்தார்கள். 

புகை குழாயில் நெருப்பு பற்றியதோ இல்லை யோ ,  தூப்  கிராமம் முழுதுமே  ஆச்சர்ய தணலில் எரிந்தது.  பாட்டீல்அந்த கிராம  அதிகாரி.  அவரை சந்தித்தவர்கள்  ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரிடமும் தான் கண்ட  அதிசயங்களையம்  பக்கிரியின்  யோக சக்தியையும் வாய் ஓயாமல் சொல்லிவிட்டார்.  பாட்டிலின் சகோதரன் மகன் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...