ஸ்ரீ ராமானுஜர் J K SIVAN
ஒரு யுக புருஷன் துறவியானார் .
ராமானுஜர் ஏற்கனவே பல வைஷ்ணவ பெரியோர்களிடமிருந்து யமுனாச்சார்யார் எனும் உத்தம வைஷ்ணவரைப் பற்றி, அவரது ஞானம், அவர் ஒரு ராஜாவாக இருந்தும் வேண்டாமென்று எல்லாம் வெறுத்து சந்நியாசியாக வாழ்வது, ஸ்ரீரங்கம் ரங்கநாதனை மூச்சாக கொண்டு அவனுக்கு சேவை செய்வது பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அதுவரை யமுனாச்சார்யாரை நேரில் சந்திக்கும் பாக்யம் கிட்டவில்லை. ஆகவே யமுனாச்சார்யாருக்கு உடல் நலம் க்ஷீணித்து வருவது, அவர் தன்னை பார்க்க விரும்புவது என்ற விஷயம் VARA கேட்டதிலிருந்து உடனே அவரது கால்கள் ஸ்ரீரங்கம் நோக்கி நடக்க தொடங்கின. பெரிய நம்பிகள் அவரை அழைத்து செல்வதற்காகவே ஸ்ரீரங்கத்திலிருந்து வந்திருந்தது மிக்க பரவசத்தை தந்தது.
அந்தக்காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் நடக்க பல நாட்கள் ஆகுமே. வழியெல்லாம், காடு ஆறுகள் வயல்கள் ஊர்கள். எல்லாம் கடந்து அங்கங்கே இரவு தங்கி, மறுநாள் சூரிய வெளிச் சத்தில் ராமானுஜரும் பெரியநம்பியும் ஸ்ரீரங்கம் அடைவதற்குள்
யமுனாசார்யார் வைகுண்டப் ப்ராப்தி அடைந்திருந்தார். அவர்கள் வருவதற்கு சற்று நேரம் முன்பு விண்ணுல கெய்தியி ருந்தார். அவரது பூத உடல் இன்னும் அக்னிக்கு அளிக்கப்படவில்லை. ஏதோ ஒரு சக்தி தன்னை ஆச்சார்ய ரோடு இன்னும் பிணைத்திருந்தது உள்ளே உணர்த்தியது. ஏதோ சொல்ல, கட்டளையிட நினைத்து அது நடக்க வில்லையோ ?
யமுனாச்சர்யாரின் ஆஸ்ரமத்தில் அவர் பூத உடல்கிடத்தப்பட்டிருந்தது. முதலும் கடைசி முறையுமாக அந்த மஹானை உயிரற்று தரிசித்தார் ராமானுஜர். அவரது கண்கள் ஆணியடித்ததை போல ஆசார்யன் முகத்திலேயே இருந்தது. மூடியிருந்த விழிகள், உதடுகள்,தனக்குள் என்னவோ சொல்ல முயன்றதை, அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது. ஆச்சார்யனின் கைகள் மீது ராமானுஜரின் பார்வை சென்றபோது ஆச்சர்யமாக ஏதோ தென்பட்டது. மகானின் வலது கையில் மூன்று விரல்கள் மட்டும் மூடி இருந்தன.
''ஏன் ஆசார்யனின் கை மூன்று விரல்கள் மூடி இருக்கின்றன. அப்படித்தான் வழக்கமாக இருக்குமா ?'' என்று வினவினார் ராமானுஜர்.
''இல்லையே, அப்படி ஒரு பழக்கம் இல்லையே..ஆச்சர்யமாக இருக்கிறதே'' என்றார்கள் அருகிலிருந்தோர்.
ராமானுஜர் கண்களை மூடி ஆசார்யனை தியானம் செய்தார். மின்னல் வெட்டாக அவருக்கு ஒரு காரணம் தோன்றியது. எல்லோரையும் அமைதியாக பார்த்தார்.
''ஆசார்யன் தனது நிறைவேறாத ஆசைகளாக மூன்று விஷயங்களை இதன் மூலம் உணர்த்துகிறார். என்னிடம் நேரில் சொல்ல முயன்று அது முடியாததால் இவ்வாறு ஜாடையாக அறிவிக்கிறார்.நான் அவற்றை எடுத்து நடத்தி நிறைவேற்றுவேன். இது நிச்சயம். உறுதி '' என்கிறார் ராமானுஜர். எல்லோரும் அமைதியாக சிலை போல் நின்று பார்க்க, ராமானுஜரின் குரல் எங்கும் கணீரென்று எதிரொலித்தது. ஆச்சர்யனின் விருப்பங்கள் என்ன என்று சிஷ்யர்களிடம், பெரிய நம்பிகளிடம் கேட்டு வருகிறார்.பிறகு அனைவரும் கேட்க உறுதி மொழி எடுக்கிறார்:
1. ஸ்ரீ விஷ்ணுவிடம் சரணாகதி அடையும் தத்வத்தை பிரசாரம் பண்ணுவேன். பஞ்ச சம்ஸ்காரங்கள் பண்ணவேண்டிய பரிசுத்தத்தை கற்பிப்பேன்'' இதை அவர் சொல்லி முடித்ததும் ஆச்சர்யனின் மூடியிருந்த ஒரு விரல் நீண்டது
2. ''ஆழ்வார்களின் பாசுரங்களை பரப்புவேன். வியாக்யானம் விரிவுரை சொல்வேன், எழுதுவேன்.'' மூடியிருந்த இரண்டாவது விரலும் நீண்டது.
3.'' வேதாந்த சூத்ரங்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய விரிவுரை எழுதுவேன்'' மூன்றாவது விரலும் நீண்டது.
யமுனாசார்யாரின் முகத்தில் ஒரு தெய்வீக அமைதி காணப் பட்டது. இனி அவரது வைகுண்ட பிரயாணம் திருப்தியாக இருக்கும் அல்லவா? அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. என்னுடைய பூலோக யாத்ரை இனிதே முடிந்ததே'' என்ற திருப்தி அதில் பளிச்சிட்டது.
காஞ்சிபுரம் திரும்பிய ராமானுஜர் இப்போது முற்றிலும் மாறி இருந்தார். இகலோக வாழ்க்கை வெறுத்தது. சுற்றம் பந்தம் விலக ஆரம்பித்தது. குரு காஞ்சிபூரணருக்கு சேவை செய்வதில் முழு மனதும் ஈடுபட்டது. கோவிலே வீடாகியது.
ஒருநாள் ராமானுஜர் இல்லத்தில் காஞ்சிபூரணரை போஜனம் செய்ய அழைத்திருந்தார். காஞ்சி பூரணர் , திருக் கச்சி நம்பிகள், பிராமணர் வகுப்பை சேர்ந்தவர் இல்லை. இருந்தாலும் குருவாகிய அவர் சாப்பிட்ட உத்க்ரிஷ்டத்தை (எச்சிலை) பிரசாதமாக ராமானுஜர் உண்ண விரும்பினார். ஆகவே அன்று நம்பிகளை போஜனத்துக்கு வரவழைத்திருந்தார். அவர் வருவதற்குள் ராமானுஜர் எங்கோ சென்றி ருந்தவர் திரும்பி வருவதற்குள் போஜனத்த்துக்கு திருக்கச்சி நம்பிகள் வந்து விட்டார்.
ராமானுஜர் மனைவி தஞ்சமாம்பாள் திருக்கச்சி நம்பிகளை வரவேற்று ஓரிடத்தில் அமர்த்தினாள் . இதோ வந்துவிடுவார் ராமானுஜர் என்று சொல்லி காத்திருக்க சொன்னாள் .
''அம்மா காஞ்சி வரதராஜர் கோவிலில் எனது சேவை இன்னும் சிலது பாக்கி இருக்கிறது. அதற்காக நான் சீக்கிரம் போகவேண்டும் தாயே, ராமானுஜன் வரும் வரை காத்திருக்க இயலவில்லை. எனக்கு அன்னமிடுங்கள். நான் அருந்திவிட்டு செல்கிறேன்.'' என்கிறார் நம்பிகள்.
காஞ்சி பூரணர் உணவருந்திவிட்டு சென்று விட்டார். ஒரு தாழ்ந்த குலத்தவர் அருந்திய எச்சில் என்று ஒரு குச்சியால் அவர் உண்ட இலையை அப்புறப்படுத்தி அந்த இடத்தை சாணத்தால் சுத்தம் செய்தாள் ராமானுஜர் மனைவி. மீண்டும் ஒரு தடவை குளித்து விட்டு ராமானுஜருக்கு புதிதாக சமையல் செய்ய ஆயத்தமானார். அந்த நேரம் ராமானுஜர் வீடு வந்து சேர்ந்தார்.
''என்ன இன்னுமா திருக்கச்சி நம்பிகள் வரவில்லை?'' என்று கேட்டவரிடம் நடந்ததை சொன்னாள் . தனது குருவின் எச்சில் பிரசாதம் தனக்கு கிடைக்காமல் பண்ணி னதுமல்லாமல் அந்த மகானை அவமானப் படுத்தி விட்டாளே '' என்று கோபம் கலந்த ஏமாற்றமும் வருத்தமும் ராமானுஜர் அமைதியை குலைத்தது.
தொடர்ந்தாற்போல் மற்றுமொரு சம்பவம். ராமானுஜர் மனைவி ஆச்சார்யன் திருக்கச்சி நம்பிக ளின் மனைவியை .கிணற்றங்கரையில் சந்திக்கிறாள். இருவரின் தண்ணீர் குடமும் கிணற்றில் ஒன்றின்மேல் ஒன்று பட்டு விடுகிறது. தனது நீர்க்குடம் குரு மனைவியின் குட நீர் பட்டு அனாசார மாக ஆகிவிட்டது என்று ஏசுகிறாள். இதுவும் ராமானுஜர் காதுக்கு எட்டி, அதன் பலன் அவர் மனைவி தாய் வீடு திரும்புகிறாள். ராமானுஜர் சன்யாசம் பூண்டு விட்டார்.
No comments:
Post a Comment