Monday, December 30, 2019

MARGAZHI VIRUNDHU



மார்கழி  விருந்து   J K   SIVAN
                                                           

                         
     15        ''நானே தான் ஆயிடுக''

கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம். இப்போது அது  வேகமாக  மாறி வருகிறது. எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்த காலம் போய் விட்டது. பக்தி கோவில் பண்பு அனைவரையும் இணைத்திருந்த நிலை மறைந்து விட்டது. நகரத்தின் நரக வாழ்க்கை அங்கேயும்  இடம் பெயர்ந்து விட்டது.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லை.

ஆயர்பாடியில் ஒவ்வொரு நாளும் ஊரில் இதே பேச்சு. அந்த ஆண்டாள் எவ்வளவு பக்தி பூர்வமாக உற்சாகமாக கண்ணனைத் துதித்து வழிபட ஊரிலுள்ள மற்ற பெண்களையும் விடியற் காலையில் எழுப்பி நீராடி பாவை நோன்பை பண்போடு செய்ய வைக்கிறாள் என்று அவள் மேல் மட்டற்ற அன்பும் பாசமும் அனைத்து கோப கோபியரிடத்தே தோன்றியது.

வைதேகி வீட்டு வாசலில் ஆண்டாள் நின்ற அன்று மார்கழி 15ம் நாள். ஒருவார்த்தை சொல்லி வைக்கிறேன் ஜாக்கிரதை.   வைதேகி பொல்லாத வாயாடி!

“வைதேகி, வாடி வெளியே, நேரமாச்சு!” ஆண்டாள் குரல் அவளுக்கு உள்ளே கேட்டது. ஆனாலும் அவள் பதிலுக்கு குரல் கொடுத்தாள் .

“ஆண்டாள் உன்னை பத்தி எனக்கு நிறையவே தெரியும், உன் அழகு, பேச்சு, பாட்டு, சாமர்த்தியம், பக்தி எல்லாமே. இவ்வளவு சீக்கிரமே ஏண்டி வந்து என்னை எழுப்புகிறாய். மற்ற எல்லாரும் வந்துவிட்டார்களா? எத்தனை பேர்? அதற்குள் என்னை இன்னும் கொஞ்சம் தூங்க விடேன்”,

“எல்லாருமே வந்தாகிவிட்டது. யமுனை நதிக்கும் கிளம்பி நடந்தாய்விட்டது. . இன்னிக்கு அந்த குவலயாபீடம் யானையை சம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனைப் பற்றி நீ அடிக்கடி  ''கஜ ஸம்ஹாரா ''  என்று  நீட்டி  இழுத்து  பாடுவாயே அதை நாங்கள் எல்லோரும் கேட்க வேண்டும்.  ஆகவே   நீ உடனே அதைப் பாட சீக்கிரமாக எழுந்து   வெளியே வாடி”

யாரிடம் என்ன சரக்கு இருக்கிறது என்று ஆண்டாளுக்கு நன்றாகத் தெரியும். அதை உபயோகித்து தானும் மகிழ்ந்து மற்றோரையும் மகிழ்விப்பதில்அவளுக்கு நிகர் அவளே தான். படுக்கையில் கிடந்த அந்தப்பெண் எழுந்தாள். கூட்டத்தில் சேர்ந்தாள்,யமுனைக்கு நடந்தார்கள், நீராடினார்கள். பாடினார்கள். அவள் சிறப்பாக பாடினாள். அந்த கிருஷ்ணனே அவள் பாட்டைக் கேட்டு மயங்கினான். அனைவரும் திருப்தியாக அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பினர்.

ஆயர் பாடியில் நம் வேலை முடிந்து இனி வில்லிப்புத்தூருக்குச் சென்று அங்கே நடப்பதைப் பார்ப்போம்

ரங்கமன்னார்  கோவிலிலிருந்து யாரோ ஒருவர் அதிகாலையிலேயே வந்துவிட்டார். பெரியாழ்வார்  தனது  மகள் கோதை இயற்றும் திருப்பாவை பாசுரங்களை பற்றிச் சொன்னதில் அவருக்கு பரம சந்தோஷம். தினமும் விஷ்ணு சித்தரிடமிருந்து பாசுரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மகிழ்வார். இன்று நேரிலேயே கோதை பாடுவதைக் கேட்க வந்துவிட்டார்.

''கோதை,   ரங்கபட்டருக்கும்   ஒரு தடவை பாடிக் காட்டம்மா. ரொம்ப ஆர்வமா கேட்க காத்திருக்கிறார்.   அந்த சாக்கிலே நானும் இன்னொரு தரம் சந்தோஷமா அதைக் கேட்கிறேனே.''

கோதை அமர்ந்தாள் . எதிரே இருந்த ஓலைச்சுவடியைப் புரட்டினாள் . அன்று அவளால் இயற்றப்பட்ட பாசுரம் அவள் குரலில் வெளியேறி அந்த நந்தவனத்தில் இருந்த மரம் செடி கொடிகளும் ஆர்வமாக கேட்ட பாசுரம் இது தான்.

''எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

''ரொம்ப ஆச்சர்யம். சுவாமி, உங்க பொண்ணு, தெய்வப்பிறவி. சாக்ஷாத் அந்த மகாலட்சுமி தாயாரே வந்து பொறந்திருக்கா '' என்று தான் நிச்சயமாக தோன்றுகிறது. இதிலே பொருந்தியிருக்கிற உள்ளர்த்தத்தை வழக்கம்போலே நீங்களே அடியேனுக்கு சொல்லணும். எனக்கு  புரிஞ்சிக்கிற  சக்தியில்லை ''

''ஒருத்தர் கிட்டே ஒரு நல்ல குணம், திறமை, சாமர்த்தியம் இருந்தா அதைப் போற்றணும்.'' ஆயர்பாடியிலே எந்த பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தாளோ, அவள் கிளி மாதிரி குரல் உடையவள். நன்றாக பாடுபவள். நீ பாடினால் அந்த கிருஷ்ணனே நேரில் வந்து கேட்பவனாயிற்றே. நீ வந்தால், பாடினால், அவன் வந்து கேட்டால், மனம் மகிழ்ந்தால் அனைவருக்கும் அல்லவோ அந்த மாதவனின் அருள் கிட்டும். லோக க்ஷேமத்துக்காகவே தான் உங்க பொண்ணு கோதை, இதை பாடியிருக்கா, சுவாமி.''

முதல்லே, நீங்க எல்லோரும் வந்தாச்சா என்று போய் எண்ணுங்கோ. நான் இப்போ எதுக்கு வரணும். என்னை எழுப்பாதேங்கோ என்று எதிர்த்து அடம் பிடித்த பெண் அப்பறம், தானே முதல்லே, ஆண்டாளோடு நோன்புக்கு வந்தாளே இதற்கென்ன அர்த்தம்? 

வைஷ்ணவன் தான் செய்வது தவறு என்று உணர்ந்த மறுகணமே பெருந்தன்மையோடு அதை ஒப்புக்கொண்டு பிராயச்சித்தமாக தன்னைத் திருத்திக் கொள்பவன். மற்றவர் மேல் அதிக அன்புடையவன். அவர்களை மதிப்பவன். சரணாகதி அடைபவன். இல்லையென்றால் விஷ்ணு சம்பந்தப்பட்ட ''வைஷ்ணவன்'' என்ற பெயர் பொருத்தமே  அவனுக்கு இருக்காதே.

ராமன் காட்டுக்குச் சென்றதற்கு தன் தாயோ, கூனியோ காரணம் இல்லை, தானே என்று வலிய பரதன் ஒப்புக்கொண்ட மாதிரி தான்  இது.    இதைத்தான் ''நானேதான் ஆயிடுக'' என்று அந்தப் பெண் கூறுகிறாள் என்று இந்த கோதை எழுதியது அதி அற்புதம்.''

கோவிலில் மணி அடித்தது. வந்தவர் சென்று விட்டார். அவர் தனக்குள் முணுமுணுத்தது நம் காதிலும் விழுகிறது:

'ஆண்டாள், இந்த பாசுரத்தில் கண்ணன் குவலயாபீடம் என்கிற பலம் கொண்ட மதயானையையும், கம்ச சாணுரர்களைக் கொன்றதையும் எதற்கு இங்கு உதாரணம் காட்டுகிறாள் தெரியுமா? உலகில் பிறந்த ஒவ்வொருவனுக்குள்ளேயும், காம,க்ரோத,மோக, மத குவலயாபீடங்கள், கம்சர்கள், சாணுரர்கள்  இருக்கிறார்களே அந்த கிருஷ்ணனைத் துதி பாடி ''அவர்களையும் கொல்லப்பா என் செல்லப்பா என்று வேண்டிக்கொள்ளவே.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...