Sunday, December 22, 2019

THIRUVEMBAVAI



திருவெம்பாவை J K SIVAN


7 உன்னை நீ அறிவாய்

பரமேஸ்வரன் சிவனுக்கு என்று சில பிரத்யேக வாத்தியங்கள் உண்டு. டமருகம், மணிக் கண்ணாடி (HOUR GLASS) மாதிரி உருவில் உடுக்கை என்று ஒரு வாத்யம். காளம் என்றும் கொம்பு என்றும் சொல்வார்கள், அதன் சப்தம் வளைந்த ஒரு பெரிய குழாய் மூலம் வெளிவரும். தாரை தப்பரை.. இவை எல்லாமே பக்தியை ஊக்குவிக்கும் வேகமாக வாசிக்கப்படும் டம டம தாள வாத்தியங்கள், பேரிகை, ஜால்ரா, மத்தளம். சங்கு, சிவன் தாண்டவ மாடும்போது அவன் ஆட்டத்திற்கேற்ப இவற்றை எல்லாம் சிவனைச்சுற்றி இருக்கின்ற பூதகணங்கள் வாசிக்கும்.
வேத மந்திரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். சிவன் அபிஷேகப்பிரியன். சிவலிங்கத்தின் மீது சொட்டு சொட்டாக ஜலதாரை வைத்த்திருப்பதை கோவில்களில் பார்த்திருப்பீர்கள். மாணிக்க வாசகர் துயிலெழுப்பும் பெண்ணை கொண்டு வந்து விட்டார் இன்றும். அவள் உறங்கும் பெண் ஒருவரின் வீட்டு வாயிலில் தோழிகளோடு நின்று பேசுகிறாள் உள்ளே இருப்பவளிடம். ''அடியே, பெண்ணே, உனக்குள் இருக்கும் சில சிறப்புகளை நீ உணர்ந்திருக் கிறாயோ இல்லையோ, நான் சொல்கிறேன் கேட்டுக்கொள். உனது தெருவில் சிவபக்தர்கள் காளம், பேரிகை மத்தளம் , சங்கு, எல்லாம் வாசித்துக் கொண்டு வருகிறார்கள் என்றாலே நீ புரிந்து கொள்பவள். தேவர்களும், மற்ற அனைத்து விண்ணோர்கள், மண்ணோர் கள் எல்லோரும் நினைப் பவனும், ஈடற்ற இணையற்ற உயர்ந்த சக்தி கொண்ட சிவன் வருகிறான் ஊர்வலத்தில் நமக்கெல்லாம் காட்சி தந்தருள என்று அறிந்து மகிழ்பவள். ஓடிச்சென்று வாயில் கதவுகளை திறந்து தெருவெல்லாம் பெருக்கி, நீர் தெளித்து கோலமிட்டு அர்ச்சனை தட்டில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காயோடு தாம்பூலத்தோடு நிற்பவளாயிற்றே.

''ஓம் நமசிவாய'' என்ற பஞ்சாக்ஷரத்தை விடாமல் எப்போதும் உச்சரிப்பவளாயிற்றே. பக்தர்கள் மொத்தமாக ''தென்னாடுடைய சிவனே போற்றி'' என்று உச்சரிப்பதில் ''தென்னா'' என்று கேட்கும்போதே உன்னை மறந்து அனலிடை மெழுகுபோல உள்ளம் உருகி, கண்கள் ஆனந்த கண்ணீர் உகுக்க, இதயம் உவக்க, இரு கை கூப்பி வணங்குபவளே. என்ன ஆயிற்று உனக்கு? இதோ நாங்கள் அப்படிப்பட்ட சிவனை, உன் மனதில் என்றும் நிறைந்தவனை, உன் காது கேட்க இனியவனே, எம் அரசே, அன்பினில் விளைந்த ஆரமுதே, என்றெல்லாம் பாடிக்கொண்டு வருகிறோம், உன்காதில் அதெல்லா விழவில்லையா. அல்லது நன்றாக காது கேட்டும் இன்னும் கட்டிலை விட்டு எழுந்திருக்க மனமில் லையா. மனமில்லையென்றால் நீ நிச்சயம் ஒரு கல்நெஞ்சக்காரி. அறிவிலி , உணர்ச்சி வசப்பட்டு சுயநினைவு இழந்தவள். நித்ரா தேவிக்கு அடிமை யாகி, உமாதேவி ஒருபாகனை மறந்தவள். அவன் தான் அந்த சிவன் உன்னை காப்பாற்றட்டும்.'' மணிவாசர்களின் அற்புத திருவெம்பாவை7 வது பாடல் கீழே தரப்பட்டுள்ளது. இப்போது புரியும். '' இவையும் சிலவோ பல அமரர் உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லோமும் சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய் !! மணி வாசகர் ஆண்டாள் திருப்பா வையில் சிந்தித்தவாறே திருவெம் பாவையில் காட்சிகளை வைக்கிறார். அற்புதமான தமிழ் இருவருடையதுமே. ஒன்று விஷ்ணு பக்தர்களை மகிழ்த்துவது போல் மற்றது சிவ பக்தர்களை சந்தோஷப்படுத்துகிறது. இரண்டுமே தமிழ் விரும்பிகளுக்கு அமிர்தமாக கிடைத்தவை. 7.''அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.'' ''அம்மா, தாயே! நாங்கள் உன்னை கவனித்ததில், உன் குணங்களில் இவையும் சில போலும் என்று தோன்றுகிறதே. தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் பலராலும் உணர முடியாதவன்தனக்கு ஒரு ஈடு இணை அற்றவன், பெருஞ் சிறப்புடைய வனுமாகிய சிவனைப் பற்றிய, சங்க நாதம் முழங்க, சிவசிவ என்றும் ஓம் நமசிவாய என்றும் சொல்லியவாறே வாயைத் திற. அலகிலா விளையாட் டுடை எம்பெருமானே தென்னாடுடைய சிவனே என சொல். சொல்லும்போது பக்தியில் அனலிடை பட் ட மெழுகாக உருகு. என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமுதன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோமே . உன் காதில் விழுந்ததா பெண்ணே. நீயும் கேள். சேர்ந்து சொல். அதை விட்டு இன்னமும் உறங்குகிறாயே? தாமச குணமுடைய அறிவிலார் போல, சும்மா வெறுமனே படுத்திருக்கின்றாயே! அடாடா, உன் தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது!.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...