Friday, December 13, 2019

NARAYANA THEERTHTHAR



ஸ்ரீ  கிருஷ்ண லீலா தரங்கிணி.- 1 J.K. SIVAN

நாம் வணங்கும் தெய்வங்களிலே சிகரமாக, அதிகமாக, போற்றப்படுபவர் , பாடப்படுபவர் ஸ்ரீ கிருஷ்ணன். அனைத்து ஹிந்துக்களும் அறிந்த உண்மை இது. 


கண்ணனை குழந்தையாக ரசித்து, பாலூட்டி, சீராட்டி, தாலாட்டும் பாடல்கள்  யாவும்  அவனது பால்ய லீலைகளை கூடை கூடையாக இந்தியாவின் ஹிந்துக்கள் பேசும் அத்தனை மொழிகளிலும் உண்டு. பிறவியிலேயே கண்ணற்ற சூர் தாஸ் பாடல்களை எவ்வளவு ரசிக்கிறோம்.  நானே  நிறைய  எழுதி வருகிறேனே .

தென்னகத்தில், தமிழ்நாட்டில் வரகூரில் கண்ணன் உறியடி உலகளாவிய புகழ் கொண்டதல்லவா? அந்த அழகிய கிருஷ்ணன் ஒருவரைத் தேர்ந்தெடுத்தான். ''நீ என்னைப்பற்றி பாடுகிறாயா? பாடு. நான் கேட்கிறேன்'' என்று உணர்த்த உடனே அவரால் உருவானது தான் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி.    எழுதிய அந்த பக்தர் நாராயண தீர்த்தர்.

ஆற்றின்மேல் அசைந்து ஆடும் அலைக்கு தரங்கிணி என்று பெயர். அதன் அழகு கண்கொள்ளாக் காட்சி. அது போல் நாராயண தீர்த்தரின் பாடல்கள் செவிக்கு விருந்தளிக்கும் இசை அலைகள்.  அலைகள் ஓய்வதில்லை. பக்திக்கும் எல்லையில்லை. மேலே மேலே  வளர்வது. தொடர்வது.

இசைக்கவும் நாடகமாக நடிக்கவும்  நாட்டியமாடவும் உகந்தது இந்த தரங்கிணி.

ஆந்த்ர ப்ரதேசத்தை சேர்ந்தவர் நாராயண தீர்த்தர்.   குண்டூர் ஜில்லாவில்  காஜா என்ற சிறிய கிராமம். பானக நரசிம்மனின் மங்களகிரி அருகே உள்ளது. அங்கே ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் ஏறக்குறைய 450 வருஷங்களுக்கு முன்பு பிறந்தவர் தீர்த்தர்.பெற்றோர் வைத்த பெயர் கோவிந்த சாஸ்திரி.

எங்கோ வெளியூர் சென்றவர் ஒரு ஆற்றைக்கடக்க நேரிட்டபோது திடீர் என்று வெள்ளத்தால் நீர் மட்டம் உயர, உயிர் தப்ப ஆபத் சன்யாசம் மேற்கொண்ட பின் நீர் மட்டம் குறைந்து உயிர் தப்பி அக்கரை சென்றார். வீட்டை துறந்து துறவியானார்.


காசி, கங்கை,கோதாவரி கிருஷ்ணா நதி தீர க்ஷேத்ரங்கள் சென்று திருப்பதி வந்தபோது கடுமையான வயிற்று வலி.  அதோடு வெங்கடேச தர்சனம்.

'வேங்கடேசா, என் வயிற்று வலியிலிருந்து என்னை மீட்டு ஏற்றுக்கொள்'' என்று பாடினார்.

'நாராயணா, நீ தெற்கே பூபதிராஜபுரம் செல்'' என்றான் திருமலையப்பன்.

தமிழகத்தில் திருவிடைமருதூர், திருவையாறு,திருமழப்பாடி என்று பல க்ஷேத்ரங்கள் சென்றார். வயிற்று வலி அதிகரித்ததே தவிர குறையவில்லை.

''ஸ்ரீநிவாஸா, என்னப்பா எதற்கு இந்த சோதனை எனக்கு?''

''நாராயணா, இதைக் கேள். நாளைக் காலையில் முதலில் ஓருவர் உன் கண்ணில் படுவார். அவர் பின்னாலே போ. நாளைக் காலையில் நீ கண் விழித்தவுடன் காண்பவர் பின்னால் செல். அவர் ஒரு இடத்தை உனக்கு காட்டுவார். அங்கே போனதும் உன் வயிற்று வலி மட்டும் அல்ல, நீ செய்த கர்ம வினைகளும் அகலும்'' என்றான் அன்று இரவு கனவில் திருமலையான்.வேங்கடேசன் மஹிமை, அதிசயங்கள் சொல்லி மாளுமா?

திடுக்கிட்டு கனவில் இருந்து விழித்து பொழுது விடிய காத்திருந்தார் நாராயணர். பறவைகள் கூவின. உலகம் உறக்கத்திலிருந்து மீண்டது. . அருணன் உதயமானான். ஆவலாக வெளியே வந்து யார் வரப்போகிறார் என்று காத்திருந்தவர் கண்ணில் தென்பட்டது மனிதர் எவருமல்ல.   ஒரு வெள்ளை நிற பன்றி.

''ஓ, வராஹனே நீதானா அது ... அது ஓட அவர் துரத்த, எங்கெங்கோ போய் கடைசியில்   தஞ்சாவூர்  பூபதிராஜபுரம் கிராமத்தில் நுழைந்த பன்றி அங்கே இருந்த வேங்கடேசபெருமாள் ஆலயத்தை நோக்கி ஓடியது. நாராயணர் பின் தொடர்ந்தார். பெருமாள் ஆலயத்தில் நுழைந்த பன்றியை எங்கே காணோம்?

''அடாடா, வெங்கடேசா, என்னே உன் அருள். நீயா இப்படி எனக்காக ஸ்வேத வராஹனாக (வெள்ளைப் பன்றியாக) உருவெடுத்து இங்கு என்னை அழைத்து வந்தவன்?''

நாராயண தீர்த்தர் கண்களில் பிரவாகம். பன்றிமட்டுமா மறைந்தது. வயிற்று வலியும் காணோமே.!

''கூற்றாயினவாறு....வயிற்றினகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட'' என்ற தேவாரத்தை அப்பர் சூலை நோய் நீங்கி திருவதிகையில் பாடியது நினைவிருக்கிறதா?. அதே கதை தான் இங்கும். திருவதிகை வீரட்டானேஸ்வரன் போல வரகூர் வேங்கடேசனும் நாராயண தீர்த்தரின் சூலை நோயைப் போக்கினான். இந்த நிகழ்ச்சியால் பூபதி ராஜபுரம் வராஹபுரம்,,வராஹனூர் என்று பேர் பெற்று காலப்போக்கில் சுருங்கி இப்போது வரகூர் ஆகி நாம் உறியடி சென்று காணும் இடமாகி விட்டது.                  

ஜெயதேவரின் மறு பிறப்பு தான்   கிருஷ்ண லீலா  தரங்கிணி இயற்றிய  நாராயண தீர்த்தர்  (1675-1745)  என்று சொல்வதுண்டு.  ஏனென்றால்  ஜெயதேவரின்  கீத கோவிந்தம் போலவே  உள்ளது  தீர்த்தரின்  க்ரிஷ்ணலீலா தரங்கிணி.  இரண்டுமே  கிருஷ்ண போதை தருபவை.  ஆடிக்கொண்டே  பாடப்படுபவை.  பாடும்போதே  ஆடவைப்பவை.    தரங்கம் என்றால்  அலைகள்.  12 தரங்கமும்  கிருஷ்ணன் பெருமை மஹிமை அவன் லீலைகள் சொல்வது.  கீத கோவிந்தமும்  12 பாகங்கள் கொண்டது.   நாமசங்கீர்த்தனத்தால்  இறைவனை காண்பது. கலியுகத்திற்கெனவே நமக்கு கிடைத்தது.  தீர்த்தர்  வரகூர் அருகில்  திருப்பூந்துருத்தி கிராமத்தில்  குடமுருட்டி  ஆற்றங்கரையில் ஒரு மாமரத்தினடி

யில்    சித்தி அடைந்தவர். அவரது ஜீவ சமாதி இன்றும் வழிபாட்டில் உள்ளது.   மாசி சுக்ல அஷ்டமி அன்று எண்ணற்ற பக்தர்கள் வருகிறார்கள்.

வேதவியாசர்  கலியுகத்தில் மூன்று பிறவி எடுத்ததாக சொல்வார்கள்.  ஒன்று ஒடிஸ்ஸாவில் ஜெயதேவராக அவதரித்து  கீத கோவிந்த அஷ்டபதிகளை அளித்தார்.  ரெண்டாவது பிறவி  சிருங்கார மஹாகவி  க்ஷேத்ரஞர் 
(1484 – 1564), 24000  பதங்கள்  இயற்றியவர். அடுத்தது  நாராயணதீர்த்தர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...