Saturday, December 14, 2019

PERIYAVA



பேசும் தெய்வம்  3ம் பாகம்    J K  SIVAN 

                  குரு   என்பது  யார்?

சில  காவி(லி) கள்  தன்னை  குரு, உலக குரு , தானே  கடவுள்  என்றெல்லாம்  பிதற்றிக்கொண்டு, அவதூறுகளை சந்தித்து கொண்டு, ரொம்பவும்  மனதை புண்படுத்துகிறது   அவர்களில்  இத்தகைய கீழ்த்தர செயல்களால் மட்டும் அல்ல, மற்ற  ஒரு சில  மதிப்புக்குரிய உண்மையான புருஷர்களின் மேல் சந்தேகம் வரும்படியாக செய்யும் அட்டூழியத்தால்.


 சில விஷயங்களை எத்தனை படித்தாலும்  புரியாதது  என்று  ஓரம்  கட்டி விடுகிறோம்.  அதில் ஒன்றை  எடுத்து  உதறி, தூசி தட்டி என்ன என்று  பார்த்தால்,  அதுவுமே இன்னும்  புரியாமலே தான்  இருக்கிறது.

மஹா  பெரியவா ஒரு  உன்னத ஞானி.  அவர் சொல்வதை இந்த நேரத்தில் கொஞ்சம் சுருக்கி புரிய வைக்க  முயற்சிக்கிறேன். 

சாந்தோக்ய உபநிஷத்தில்   ''தத்வமஸி'' என்று  ஒரு  மஹாவாக்கியம் வருகிறது.

'' நீ யே தானப்பா அந்த பிரம்மமாயிக்கிறாய் என்று ஸ்வேதகேதுவுக்கு  அவனுடைய பிதா  உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை  செய்த  உபதேசம் அது.

தத்-த்வம்-அஸி    =    ''தத்'' என்பது பரமாத்மாவான பிரம்மம்;   
'த்வம்'' என்பது ஜீவாத்மா; 
''அஸி'' என்றால் இருக்கிறாய்.  நீ  பரப் ரம்மமாக இருக்கிறாய் -  என்றைக்கோ ஒருநாளோ வரும்  எதிர்காலத்திலோ  இல்லை; இப்போதும் எப்போதும் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனிமேலே தான்  பிரம்மமாக வேண்டும் என்பதில்லை.

அப்படியானால் ஸாதனை எதற்கு அவசியம் என்றால்  நாமே பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து  கொள்ளவில்லையே!  தெரிந்தால்  இத்தனை அழுகை,  காமம், கோபம், பயம் நமக்கு இருக்குமா?  அலையே எழும்ப  முடியாமல் ஆகாசம் வரை முட்டிக் கொண்டு நிற்கிற ஆனந்த சமுத்திரமாக அல்லவா இருப்போம்?

''சரி . நீ எப்போதும் பிரம்மம் தானப்பா'' என்றால் எப்படி?  ஒரு கதை சொன்னால் புரியுமா என்று  பார்க்கலாம்.  நமது  வாழ்க்கையே  எதாவது ஒரு கதையை  நம்பி தானே  நடக்கிறது.

ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத் பாதாள், சிலந்தி  தன்னிலிருந்தே நூலை  இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும் , ஆத்மாவிலிருந்தே அத்தனை பிரபஞ்சமும் தோன்றியிருக்கிறது எனகிற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தாரமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு போகிறபோது,  இந்தக் கதை சொல்கிறார்.

ஒரு  ராஜகுமாரனை  அவனது  அப்பா  அம்மா எதிரி ராஜாவின்  படையெடுப்பில் கொல்லப்பட்டதால்,  ஒரு விசுவாசமான  மந்திரி   காப்பாற்றி,  காட்டில் வேடர்கள்  பகுதியில் குழந்தையாக விட்டுவிடுகிறான்.
 இளம்  வயதில் ராஜகுமாரன் இவ்வாறு  வேடர்களோடு  வளர்ந்து, பெரியவனாகி,  பின்னால் ஒருநாள்  தான் ஒரு  ராஜகுமாரன் என்று அந்த  மந்திரி மூலமே  உணர்கிறான்.  

இத்தனை காலமும்  வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த போதும் அவன் ராஜாவின்  பிள்ளைதானே? இது முதலில் தெரியாததால்  வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மை புரிந்தவுடன் ,ராஜ குமாரனாகவே எப்போதும் இருந்தவன் ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். வேடப்பையனும்  ராஜகுமாரனும் இரண்டுபேர் இல்லை. ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான்.  முதலில் தன்னை தெரிந்து கொள்ளவில்லை. புரியவில்லை.  அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ சாதாரண  ஒரு   வேடுவ  பையனாக கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாகினான். அப்புறம் எதிரி  ராஜாவோடு சண்டை போட்டு  ஜெயித்து அந்த நாட்டுக்கு  ராஜாவாகி  ஆகிவிட்டான்.

இதிலிருந்து நாம்  தெரிந்துகொள்ளவேண்டியது.   நாமெல்லாருமே இந்த மாதிரி ''வேட''  வேஷத்தில் தான் உள்ளோம்.  ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம்  எப்படியிருந்தாலும் உள்ளே இருக்கிற வஸ்து எப்போதும் பரமாத்மாதான். ஐம்புலன்களின்   வசியத்தில் இழுக்கிற வழியில் ஒடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் உண்மையில் பிரம்மம்   என்று தெரிந்தால் மட்டும் என்ன?  அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் (ஐம்புலன்கள்) இழுத்துக்  கொண்டே இருக்கிறதே.   ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜெயித்து  ராஜாவான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளை  யெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாக வேண்டும். 'ஸாம்ராட்'- அதாவது ராஜா -  உபநிஷதம் ஆத்ம ஞானியை இப்படி  விளக்குகிறது.

 பனிக்கட்டியும்  ice ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான்  கண்ணுக்கு  படுகிறது.  ஆனால் ஐஸ் தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது.   ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கி றதோ அதுதான் உருகி மறுபடியும் தன்  ஒரிஜினல் ஸ்வயமான தண்ணீர்  ரூபத்தை அடைய முடியும்.   பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால்  மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடியம்.  ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரைய மாட்டேன் என்கிறோம்.  அது தான்  வித்தியாசம்.

''கல்லேனும்,  ஐயா,   ஒரு காலத்தில் உருகும் என் கல்நெஞ்சம் உருகவில்லையே!   என்று  தாயுமான ஸ்வாமிகள் நமக்காகத்தான் பாடியிருக்கிறார்.நம்மை உருக வைக்க ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை Practical- ஆக  ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி தேவைப்பட்ட  மாதிரி,நம்மை உருக்கி ''நிஜ நாமாக''  ப்பண்ண ஒருத்தர் வேண்டும்.  ,முதலில் வேடப்பையன் உன்னோடு வரமாட்டேன் என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்து அவனை  ராஜா என்று உணர்த்திய  மந்திரி மாதிரி,   பரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம் பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? நம்மை நம்முடைய நிஜ  ''நாமா'' க ஆக்கக்கூடிய ஒருத்தர்  இருக்கிறாரா?
நிச்சயம் இருக்கிறார்.  வேடப்  பையனுக்கு  ''நீ  தானப்பா ராஜகுமாரன்''  என்று சொல்லிப் புரியவைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி கொடுத்து,அவனை  ராஜாவாக்குவதற்காக  அவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி மாதிரி  நமக்கு நம்  '' பரமாத்ம'' த்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி  தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.  நாம்  அவரைத் தேடிக்கொண்டே இருந்தால் நமக்கு கிடைப்பார்.  அவர் நான்  தான் உன் குரு என்று விளம்பரம் செய்து  கொள்ளும் ஆசாமி இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...