Monday, December 9, 2019

THIRUPATHI BALAJI TEMPLE



யாத்ரா விபரம் J K SIVAN
திருமலை பாலாஜி ஆலயம் 
                                                                              மொட்டையும் லட்டுவும் 

திருப்பதி திருக்கோயிலில் 17ஆம் நூற்றாண்டி லேயே லட்டு  அறிமுகமாகிவிட்டாலும்,   ஸ்ரீவாரி பிரசாதமாக வந்தது 20ஆம் நூற்றாண்டில்தான்   என்பது உண்மை.  இன்று பிரசாதமாக நாம் விரும்பிச் சாப்பிடுகிற லட்டுவுக்குக் காரணகர்த்தா கல்யாணம் ஐயங்கார் என்பவர்.

1932ஆம் ஆண்டில் மதராஸ் அரசாங்கத்தினரால் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தது. என்றாலும், மடப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையும் ‘மிராசி’கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது.  ஐந்து மிராசிகளுக்குப் பிரதிநிதியாக ஒருவர் உண்டு. அந்தப் பிரதிநிதிதான் மேல் பத்தியில் நான்  சொன்ன கல்யாணம் ஐயங்கார். ஒட்டுமொத்த மடப்பள்ளி நிர்வாகத்தையும் இவரே பொறுப்பேற்று நடத்திய தகவல் இன்றும் திருப்பதி தேவஸ்தான குறிப்பேடுகளில் இருக்கிறது.

ஒருநாள் திருப்பதி திருக்கல்யாண உத்ஸவத்துக்கு ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) என்கிற ஒரு பிரார்த்தனையை தெலுங்கு பக்தர் ஒருவர் செய்தார். அதற்குரிய பணத்தையும் தேவஸ்தானத்தில் கட்டினார். அதன்படி பல்லாயிரக்கணக்கான லட்டுகளைத் தயாரித்து திருக்கல்யாண வைபவத்தை ‘மலை’க்க வைக்கும்படி ஜமாய்த்துவிட்டார் கல்யாணம் ஐயங்கார். பக்தருக்கும் இதில் ரொம்ப திருப்தி.
அன்றைய தினம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதமாகத் தங்களுக்குக் கிடைத்த லட்டுவை   பல பக்தர்களும் வீட்டுக்கு எடுத்துச் சென்று அக்கம்பக்கத்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர்.

மூதறிஞர் சக்ரவர்த்தி ராஜாஜி அவர்களே, கல்யாணம் ஐயங்கார் தயார் செய்த லட்டுவின் பெருமையை ஓஹோ  என்று பாராட்டி இருக்கிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது   மிராசி நடைமுறை இல்லை.  அன்றைய நிலையில் ஓர் ஒப்பந்தம் என்ன  என்றால், தேவஸ்தானத்தில் 51 லட்டு தயாரித்தால், அதில் இருந்து 11 லட்டை மிராசி குடும்பத்தினருக்குக் கொடுத்து விட வேண்டுமாம். இதில் விருப்பம் இல்லாத திருப்பதி தேவஸ்தானம், சுப்ரீம் கோர்ட் வரை போய் மிராசி நடை முறையையே ஒழித்துவிட்டது. இப்போது லட்டு தயார் செய்யும் பணியை தேவஸ்தானமே மேற்பார்வை இடுகிறது.

திருப்பதி பெருமாளுக்கு அவ்வப்போது திருக்கல்யாண உத்ஸவம் ஆலயத்திலேயே கோலாகலமாக நடந்து வந்தது. இது 1940ஆம் ஆண்டில் இருந்து நித்ய கல்யாண வைபவம் ஆயிற்று. இந்தக் கல்யாண வைபவத்தில்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் எல்லோருக்கும் இனிப்பாக லட்டு வழங்கப்பட்டது.

1943ஆம் ஆண்டிலிருந்து, பெருமாள் கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. அதே சமயம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளாத பலரையும் இந்த விநியோக முறை ஏங்க வைத்தது.  லட்டு இல்லையே  என்று  ஏமாற வைத்தது.

 ‘கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொண்டால் மட்டும்தான் லட்டு பிரசாதமா?’ என்று  பல பக்தர்கள்  தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டனர்.

அப்புறம் என்ன?  தேவஸ்தான அதிகாரிகள்  ஆலோசித்து, ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆலய தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்குவது என்று முடிவாகியது.

 திருப்பதி லட்டு  செய்ய   ஒரு தனி  மடப்பள்ளி  ('' பொடு'' ) திருமலையில் இயங்கி வருகிறது.  லட்டு செய்யும் மெஷின்கள் ராக்ஷசத்தனமாக லட்டு பண்ணி கொட்டுகிறது.   பிரசாதமாக விலைக்குத் தரப்படுவது பெரிய லட்டு.    எல்லா பக்தர்களுக்கும் வரிசையில் வெளியே போகும்போது தரப்படுவது   சின்ன  லட்டு  தேவஸ்தானத்தால் இலவசம்.

விற்பனைக்குச் செல்லும் லட்டுகள்  எடை தேவஸ்தான ஊழியர்களால் பரிசோதிக்கப்படுகிறது.  பக்தர்கள் தாங்களே  லட்டுவின்   எடையை நிறுத்து பார்த்துக் கொள்வதற்கு   விற்பனை கவுண்டர் பக்கத்திலேயே   எலக்ட்ரானிக்  தராசுகள்  இருக்கிறது.   அப்படியும்   புகார்கள்  எழுதுபவர்கள் இருக்கிறார்கள்.

லட்டு விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு வருடத்துக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உதாரணமாக, 2007ஆம் ஆண்டு 103 கோடி ரூபாய்க்கும், 2009ஆம் ஆண்டு 125 கோடி ரூபாய்க்கும் லட்டு விற்பனையாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி தேவஸ்தானம் எத்தனை லட்டுகள் தயாரித்தாலும், சில நேரங்களில் பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமலேயே போய்விடுகிறது. இதற்காக, தடை இல்லாமல் லட்டு கிடைப்பதற்கும், சுவையை மேம்படுத்துவதற்கும், திருட்டு,   டூப்ளிகேட்  லட்டு விற்பனையும்   இருக்கிறது.  தேவஸ்தான நிர்வாகம்   கண்காணித்து  கண்டுபிடித்தால்  நடவடிக்கை எடுக்கிறார்கள்.

திருமலையில் லட்டு தயாரிப்பதற்கு   கடலைப் பருப்பு, நெய், சர்க்கரை, முந்திரிப் பருப்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை டெண்டர் மூலமாக  முதலில்  வாங்கினார்கள் .  ஆனால்   வியாபாரிகள்  பொருள்களின் தரம் அளவு  அதிருப்தி அளித்ததை உணர்ந்தார்கள்.   ஏன்  நாமே  லட்டு செய்ய பருப்பு, நெய்  சர்க்கரை  இத்யாதி பொருள்களை  அதிகாரிகளை  நியமித்து பரிசோதித்து  நேரடியாகவே  வாங்கக்கூடாது?  என்று தீர்மானிக்கப்பட்டதால் தற்போது குறைகள் குறைந்திருக்கிறது.   நேரடியாக , மும்பையில்  உள்ள ஸ்பைசஸ் போர்டு  spices நிறுவனம்   ஏலக்காய்  முந்திரிப் பருப்பு  விற்கிறது. ஆந்திர மாநில  விஜயா டைரியில் dairy    நெய்  சப்ளை செய்கிறது.

உலகத்தையே தன் பக்கம் சுண்டி இழுக்கும்  திருப்பதி லட்டுக்கு இப்போது காப்புரிமை மனுபாக்சரிங் காபி ரைட்  ,insurance இருக்கிறதோ?   இந்த ப்ரத்யேக  தயாரிப்பு உரிமை அரசு  அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.   அவர்களிடம்    ''TTDயால்   ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை’ என்று பதிவு செய்திருக்கிறது.

இனிமேல் திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே சைஸில் – சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறை , ரகசியம்,  வெளியில் தெரியாது.  ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது.

  திருப்பதி மலையில்   வேங்கடேச பெருமாளுக்கு நிவேதனம் தயாராகிற மடைப்பள்ளி  ''படா'' ஸைஸ் . மிகவும் பெரியது.   நிறைய ஆட்கள், மெஷின்கள் வேலை  நடக்கிறது. லட்டு தவிர, வெண்  பொங்கல், சர்க்கரை பொங்கல்,  தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி நாக்கில்  எச்சிலூறும்  எண்ணற்ற நிவேத்தியங்கள் தயாராகிறது.   லட்டுதான்  சக்ரவர்த்தி.

ரொம்ப  வருஷங்களுக்கு முன்பு  திருப்பதியில்  ‘மனோகரம்’ (இனிப்பு  காராசேவ் முறுக்கு) எனும்  பிரசாதம் தான் விசேஷம். பழைய கல்வெட்டுகள்  இதை சொல்கிறது. ஆந்திராவில் மனோகரம் விரும்பி சாப்பிடுவோர்  அதிகம்.

அரிசி மாவையும் வெல்லப் பாகையும் பிசைந்து   உலர்த்தி, எண்ணெயில் போட்டு முறுக்குபோல் பிழிந்து பொரித்தால் பொறித்து  'மனோகரம்'' கடித்து  சுவைத்து உண்ணும்  பக்ஷணம்.   இதற்கு  தேவையான பொருட்களை, பக்தர்களே ஆலயத்துக்கு தானமாகக் கொடுத்த தகவல்களையும் கல்வெட்டுக்களில்  பொறுப்பாக  செதுக்கி இருக்கிறார்கள்.    மனோகரம்  நீண்ட நாள் கெடாது.  எல்லோரும்  பஸ்  இல்லாத காலத்தில் மலை ஏறி நடந்து தான் வந்தார்கள். அவர்களுக்கு இனிப்பாக  மனோகரம்  பிரசாதம் வழங்கிய விபரம்  12ஆம் நூற்றாண்டில் ஆதாரமாக உள்ளது.
நண்பர்களே,  அருகில் ஏதாவது ஒரு தூண் இருந்தால், கெட்டியாக  பிடித்துக்கொண்டு இதை படியுங்கள்:;போன கணக்கு ஆண்டு  2018-19  எதிர்பார்க்கப்பட்ட  வருமானம்: 2984 கோடி ரூபாய். இதில்  உண்டி  கலெக்ஷன் மட்டும்  1.156 கோடி ரூபாய். விசேஷ தரிசன டிக்கெட்டுகள் மூலம்  303 கோடி ரூபாய். லட்டு விற்பனை மட்டுமே  180 கோடி ரூபாய்.   தாங்கும் அறைகள்  வாடகைக்கு விட்டதில் 110 கோடி ரூபாய்.  தலைமுடி காணிக்கையில்  கிடைத்து விற்ற தலைமுடி  விற்பனை கொடுத்தது 125 கோடி.  மொட்டையும் லட்டுவும்  தரும் வருமானம்  ரொம்ப கிட்டவே இருக்கிறது இல்லையா?





























No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...