ஸுர் ஸாகரம் J K SIVAN
1 எழுந்திருடா கிருஷ்ணா!
ஸூர் தாஸ் பிறவிக்குருடர். கண்தெரியாது என்று நினைத்தால் நாம் தான் குருடர்கள். புறக் கண் இல்லாவிட்டால் என்ன , அகக்கண் அற்புதமாக பல யுகங்கள் தாண்டி குட்டி கிருஷ்ணனை தொட்டிலிலிருந்து யசோதை எழுப்பும் காட்சியை எவ்வளவு முறை எத்தனை படங்கள் பார்த்தாலும் நம்மால் வர்ணிக்க முடியுமா? அவருக்கு தெரிந்த மொழி வ்ரஜ பாஷை மட்டுமா நமக்கு தெரியாது. அவர் கண்ட காட்சியும் நமக்கு தெரியாததால் ஸூர் தாசை யாரோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததில் இருந்து கொஞ்சமாவது அதை தமிழில் அனுபவிப்போம்.
பொல் என்று பொழுது விடிந்துவிட்டதடா. எழுந்திரு கிருஷ்ணா, சீக்கிரம். விழித்துக்கொள். இதைப்பார். எவ்வளவு அழகாக தாமரை மலர்கள் மொட்டு அவிழ்கிறது. சூரியனைக் காண அத்தனை ஆசை. அதோ அல்லி மலர்களும் எவ்வளவு அழகுடன் இதழ்களை கூம்பாக வைத்துக் கொண்டு உள்ளே தேன் வண்டுகளை அழைத்து வயிறு நிரப்பி வழி அனுப்புகிறது. கொடிகள் இளம் குளிர் காற்றில் சுகமாக அசையும் போது சிறு சிறு பறவைகள் அதில் அமர்ந்து சந்தோஷமாக பாடி ஊஞ்சலாடி விட்டு பறக்கின்ற அழகைப்பார்.
நமது கிராம கடிகாரம் ''கொக்கரக்கோ'' சப்தங்கள் கேட்கிறதா? சொல்லி வைத்தாற்போல் எல்லா சேவல்களும் ஒரே மாதிரி ஸ்வரத்தோடு சப்த மிடுகின்றன. சப்தஜாலங்கள் என்றால் மரங்களில் கூவும் பறவைகளின் வினோத ஒலிகள் தான்.
''அம்மா அம்மா'' என்று பெரிதாக அடி வயிற்றிலிருந்து ஒலி எழும்பும் பசுக்களின் குரல் கன்றுகளை சந்தோஷப்படுத்துகிறது. கன்றுகளை தேடுகின்றன. அவிழ்த்து விட்டவுடன் கன்றுக் குட்டிகள் எவ்வளவு ஆசையாக தாவித் தாவி குதித்துக் கொண்டு அம்மாக்களை தேடுகிறது.
சூரியன் கிழக்கே எழும்பியதால் சந்திரனின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது. ''வா, சூர்யா இனி உன் பொறுப்பு'' என்று சந்திரன் விடை பெறுகிறான்.
கோபி கோபியர்கள் எழுந்து எறும்புகள் போல் சுறுசுறுப்பாக அன்றாட கடமைகளை துவங்க தொடங்கி விட்டார்கள். அட எவ்வளவு இனிமையாக பாடிக் கொண்டே அவர்கள் சந்தோஷமாக தங்களது வேலைகளை செய்கிறார்கள்.
''எழுந்திரடா குட்டிகிருஷ்ணா, பொழுது புலர்ந்து விட்டது. உன் தாமரை மலர் போன்ற மிருதுவான திருக் கைகளை நீட்டு, தூக்கி விடுகிறேன். எழுந்திரடா செல்லமே ''
No comments:
Post a Comment