Monday, December 23, 2019

PESUM DEIVAM



பேசும் தெய்வம் J K SIVAN
பாகம் 3

'பாபத்தை போக்குவது, புண்யம் செய்வது எப்படி ?''

எல்லா வித பாப கார்யங்களையும் விடாமல் செய்பவன் கூட ''சாமி எனக்கு புண்யம் கிடைக்கணும்'' என்று தான் வேண்டுகிறான். அவனவன் செய்த கர்மா, கார்யத்தின் பலன் தான் அவனுக்கு கிடைக்கும் என்ற பக்ஷத்தில் புண்ய பலன் அந்த பாபாத்மாவுக்கு, புண்ய கார்யங்கள் எதுவும் செய்யாமல் அதன் பலன் மட்டும், எப்படி அவனுக்கு கிடைக்கும்?

“ கிருஷ்ணா! எது பாபத்திலேயே மேலும் மேலும் ஒருவனை அழுத்துகிறது சொல்? ''
இதை நான் கேட்கவில்லை, அர்ஜுனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் பதில்:
“ அவனது ஆசை தான் மேலும் மேலும் அவனை பாபத்தில் ஆழ்த்துகிறது ” ஆசைப்பட்ட ஒன்றை அடைய தலையால் தண்ணீர் குடிக்கிறோம். என்னென்னவோ எவ்வளவோ முயற்சிகள் தொடர்ந்து செயகிறோம். ஆசைப்பட்டதை அடைய தர்ம அதர்ம, நியாய அநியாயங்கள் எதையும் லக்ஷியம் செய்வதில்லை.
சரி, அப்படி அடைந்த ஆசையோடு திருப்தி அடைகிறானா? அது தான் இல்லை. இன்னும் கொஞ்சம் உயரே, அதைக் காட்டிலும் பெரிதாக இன்னொன்று... தீயில் வார்த்த நெய் மேலும் ஜ்வாலை யை கொழுந்து விட்டு எரியச்செய்யும். கடலில் அலை என்று ஓயப்போகிறது?
சரி, ஆசை நிறைவேறாவிட்டால் போகட்டும். நாடியது கிடைக்காவிட்டால் போய் தொலையட்டும் என்று அந்த ஆசையை விட்டுவிடுவதும் இல்லை. அதனால் ஏமாற்றம், கோபம் ஆத்திரம் தான் நிறைய வருகிறது.

மகா பெரியவா சொல்வது போல் சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்புவது மாதிரி இந்த நிறைவேறாத ஆசை கோபமாகத் திருப்பி வந்து நம்மை மேலும் பாபக் குழியில் ஆழமாக தள்ளுகிறது. ஆகவே தான் ஆசைக்கு அடுத்தபடி , இந்த க்ரோதம். கிருஷ்ணன் அழகாக இதை கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவுதான்.
பாபம் செய்யாதிருக்க அப்படியானால் இருக்கும் ஒரே வழி ஆசையை அழிப்பதுதான். இதை எப்படிச் செய்வது?
நம்மால் எந்த காரியமும் செய்யாமல் இருக்க முடியாதே. உடம்பு ஒண்ணும் பண்ணாமல் மூலையில் உட்கார்தால் கூட உள்ளே இருக்கும் பூதம் ' மனம்'' சும்மா இருக்காதே. மனம் ஒரு குரங்கு அல்லவா?. எதையாவது பிடித்துக் கொண்டு, எண்ணிக் கொண்டே யிருப்பது தான் அதன் வேலை. .உடம்பு, மனசு இந்த இரண்டாலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே பிடித்துக்கொண்டு வட்ட மடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஓய்ச்சல் ஒழிவு கிடையாது.

என்ன செய்யலாம்? எதுவும் மனதாலும் உடம்பாலும் செய்யாமல் இருக்க என்ன வழி? எந்த காரியமும் இல்லாமல் சும்மா யிருந்து விடலாமா? ஹுஹும்... முடியவே முடியாது. மநுஷ்யஸ்வாபாவம் நம்மை சும்மா இருக்க விடாதே. '' சும்மா இருத்தல் சுகம்...சிந்தையை அடக்கி சும்மாயிருக்கின்ற திறம்அரிது'' என்றார் தாயுமானவர். நாம் எல்லாம் தாயுமானவர் ஆகவே முடியாது. ஏற்கனவே சொன்னது போல் உடம்பு சும்மா இருந்தால் கூட உள்ளே மனசு ஏதோ ஒரு எண்ணத்தை பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்கிறதே. அதுமட்டுமா, தனது காரியத்துக்கு துணையாக உடம்பையும் ''நீயும் சேர்ந்து கொள் '' என்று இழுத்து, அதை ஏவிவிடுகிறது.. இதற்கெல்லாம் ஒரு தீர்வு இருக்கிறது.

அது என்னவென்றால், இப்போது நாம் இருக்கிற நிலைமையில் செய்கிற காரியத்தை அடியோடு நிறுத்தி விட வேண்டு மென்று அவசியமில்லை. கொஞ்சம் MODIFICATION , மாற்றம் செய்து கொள்வோம். நாம் செய்யும் காரியங் களில் நமக்கு சொந்த விஷயத்தில் சம்பந்தப்படாத, பயன்படாத, சுய லாபம் கருதாத, பிறருக்கு ஏதாவது ஒரு விதத் தில் உதவும்படியான பரோபகார விஷயங்களில், காரியத்தில் உடம்பை, மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஈடு படுத்திக் கொள்வோம். அதில் என்ன பலன் என்றால் ஆத்ம திருப்தி தானாகவே நமக்கு கிடைக்கும். அந்த திருப்தி தான் சரியான திருப்தி, எவருக் கும் கொடுக்காமல் தானே தின்கிற பாதம் ஹல்வா கொடுக்கும் திருப்தியை விட இது இன்னும் ருசிக்கும். காலக்கிரமத்தில், நாளா வட்டத்தில், , சுய நல ஆசைகளும் குறைந்து கொண்டே வரும். பாபம் குறைகிறது. புண்ணியம் ஏறுகிறது. ஆசை யில்லாததால் கோபம் காணாமல் போகும். அன்பு கருணை அதன் இடத்தில் பிடித்துக் கொண்டுவிடும். ஆகவே நாம் எல்லோரும் இன்று முதல் பிறருக்கு, பிற உயிருக்கு உதவுகிற, உபயோகமான காரியம் ஏதாவதை, செய்து கொண்டே வருவோம். அது தான் புண்ணிய காரியம். இதுவரை நாம் செய்து கொண்டு வரும் பாபங்கள் எப்படி நம்மை அடைகிறது?

உடம்பால் செய்யும் பல கெட்ட காரியம்,
வாயால் பொய்யும், புரளியும் பேசுகிறோம். அசத்தியம், அக்கிரமம், அநியாயம், தாராளமாக புரிகிறோம். மனத்தினால் கெட்ட எண்ணங்கள் நிறைய பண்ணுகிறோம்.
பணத்தினால் செய்கிற பாபத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். நிறைய திருடியவன், கொள்ளையடித்தவன் யார் என்று பேப்பர் படிக்கும்போது தெரிகிறது. அது சொல்கிறது. பரம்பரை பணக்காரன், கோடீஸ்வரன் தான் அஞ்சாமல் சட்டம் நியாயம், நேர்மை, தர்மம் அதெல்லாம் மீறுகிறான். வரம்பை தாண்டுகிறான், படித்தவன் தான் எப்படி குற்றங்களில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்து மனம் தெரிந்து பாபா கார்யங்கள் புரிகிறான். அடுத்த வேளை சோற்றுக்கு இல்லாமல் பித்தளை சொம்பு , தவலை , கோழி, திருடுகிறவன் பிடிபட்டு உதை தின்கிறான். ஆகவே மனத்தாலும் உடம்பாலும் புண்யம் செய்ய நிதானமாக,விடாமல் தொடர்ந்து பழகிக் கொள்வோம்.

உடம்பைப் பரோபகாரம், கோவில் களுக்கு செல்வது. பகவானை நினைப் பது, பாடுவது, போற்றுவது, ஆலய பிரதக்ஷணம் செய்வது. பகவன் நாமாக்களை சொல்லிக் கொண்டிரு ப்பது, தொடர்ந்து அவற்றை படிப்பது, (நான் படித்து படித்து எழுதிக்கொண்டே இருக்கிறேன்) இதெல்லாமே புண்ணி யம் தான். உத்யோகம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் நேரம் குடும்பத்துக்கு சம்பாதிப்பதற்கு உழைப்பதிலேயே போய்விடுகிறது. நாம சங்கீர்த்தனம், பாராயணம், படிப்பதற்கு, கோவில் குளம் -- இதற்கு எல்லாம் ஏது சார் நேரம் ? .

யோசியுங்கள் நமது முழு நேரமும் சம்பாதிப்பதிலா போகிறது? நடுவே எவ்வளவு, வீண் பேச்சு, பரிகாசம், வேடிக்கை பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் டிவி வாட்சப், FB மொபைலி லில் அரட்டை, சினிமா, டிராமா, ஹோட் டல்கள், இதற்கும் தானே கொஞ்சம் அல்ல நிறைய வீணாகிறது. அதிலே கொஞ்சமாவது பகவத் நாம ஸ்மரணையில் செலவிட முடியுமே. தனியே அதற்கென்று பொழுது தேடவேண்டாம். சரி வீடு எங்கோ இருக்கிறது. ஆபீஸ் ரொம்ப தூரம். போகும் போது வழியில் பஸ்ஸிலோ, ரயிலிலோ, காரிலோ, மனதுக்குள்ளேயே பகவத் நாமாவை ஜபித்துக்கொண்டே போகலாமே .
ஒடி ஒடி வருஷக்கணக்காக சம்பாதிப்பதில் ஒரு பைசாகூட நம்மோடு வரப்போவதில்லை சார். மறு உலகத்தில் ஜீவிக்க தேவையான காசு பகவத் நாமா ஒன்று தான். அது தான் புண்யபலன் என்கிற அந்நிய நாணயம். FOREIGN EXCHANGE .
நான் மேலே சொன்னதெல்லாம் முழுதும் என்னுடைய கருத்து அல்ல. மஹா பெரியவா உதிர்த்த முத்துக்களை வைத்து கட்டிய மாலை .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...