Tuesday, December 3, 2019

THIRUKOLOOR PENPILLAI




திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள். J K SIVAN

20 ''அஹம் வேத்மி'' என்றேனோ விசுவாமித்ரரைப் போலே விஸ்வாமித்ரர் ரிஷியாகும் முன்பு ஒரு ராஜா. வசிஷ்டரோடு போட்டியிட்டு தோல்வியுற்றார். கடும் தவம் செய்து வசிஷ்டரைப் போல் தானும் ஒரு ப்ரம்ம ரிஷியாக வேண்டி, கடும் தவமிருந்து பெரிய ரிஷியானார். காயத்ரி மந்தரம் மற்றும் சில பழமையான ரிக் வேத பகுதிகளை இயற்றியவர். ஸ்ரீ ராமரின் கல்யாணத்துக்கு காரணமானவர் விஸ்வாமித்ர முனிவர். கோபக்கார முனிவர் என்று பெயர் பெற்றவர்.
ஒருநாள் திடீரென்று தசரத சக்ரவர்த்தி முன் நிற்கிறார்.
தசரதர் அவரை வணங்கி உபசரித்து அவர் வந்த விஷயம் அறிகிறார்:
''தசரதா , கானகத்தில் என் சித்தாஸ்ரமத்தில் வசிக்கும் முனிவர்கள் ராக்ஷஸர்கள் தொந்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டு யாகம் ஹோமம் நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். காரணம் அவர்கள் யாகத்தை ஹோமத்தை ராக்ஷஸர்கள் வந்து கலைத்து விடுகிறார்கள். ரிஷிகளை தாக்குகிறார்கள்.
இப்போது ஒரு ஆறு நாள் சித்தாஸ்ரமத்தில் யாகம் நடத்தப்போகிறேன். யாகத்துக்கு காவல் புரிய உன் மகன் ராமனை அழைத்து போக வந்தேன். அனுப்பு அவனை என்னோடு. ராமன் வந்து காவல் நின்றால் பெரிய பாதுகாப்பு எங்களுக்கு. அரக்கர்கள் அழிவார்கள். '' என்கிறார்.
பதினாறு வயது கூட நிரம்பாத என் உயிரினும் மேலான யாரும் புதல்வன் ராமனா, கொடிய ராக்ஷஸர்களை தனியே எதிர்த்து கொல்லக் கூடியவன் என தயங்குகிறார் தசரதர். 'மகரிஷி, நானே பெரும் படையுடன் வீரர்களோடு வந்து காவல் காக்கிறேனே''என்கிறார்.
"தசரதா, அறியாமல் பேசுகிறாய். என் வார்த்தைகளில் நம்பிக்கை கொள். உன் புதல்வன் யார் என்று தெரியாமல் சாதா ரண மானிட சிறுவன் என்று கருதி நீ பேசுகிறாய். நான் சொல்வதைக் கேள். இப்போவாவது புரிந்து கொள் . ராமனது தீரம், வீரம், சக்தி, ஞானம், பலம், அனைத்தும் வசிஷ்டர் மற்றும் என் போன்ற பிரம்மரிஷிகளுக்கே நன்றாக தெரியும். வேதம் முற்றும் அறிந்தவர்க்கு மட்டுமே உனது புதல்வனின் பலமும் குணமும் தெரியும். தயங்காமல் உம் புதல்வனை அனுப்பு.''என்கிறார் விஸ்வாமித்ரர்.
''அஹம் வேத்மி'' என்று நூறு ஸ்லோகங்களில் அற்புதமாக ''ராமன் யார் என நீ அறியமாட்டாய். நான் அறிவேன்'' என்று விளக்குகிறார். இதை ''ரஸ நிஷ்யந்தினி'' என்று பருத்தியூர் பிரம்மஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் பிரவசனம் செய்திருக்கிறார். அவரது அற்புதமான நூல் புத்தகமாக வந்திருக்கிறது. இதை எனக்கு தெரிந்த வரை தமிழில் எழுதியிருக்கிறேன். அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறேன்.'
இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வசிஷ்டரும் ''தசரதா, உடனே உன் மகன் ராமனை விஸ்வாமித்ர முனிவரோடு அனுப்பு'' அன்று ஆமோதிக்கிறார். தசரதன் பயமின்றி கவலையின்றி ராமனை அனுப்புகிறான். கூடவே லக்ஷ்மணனும் கூப்பிடாமல் செல்கிறான். வனவாசமும் தானே ஏற்றுக்கொண்டவன் லக்ஷ்மணன். பதினான்கு வருஷமும் இமைக்காமல் விழித்து ராமனை காத்தவன் லக்ஷ்மணன். ஏனென்றால் ராமனின் நிழல் லக்ஷ்மணன்.
இந்த விஷயத்தை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் திருக்கோளூர் பெண்மணி, ராமாநுஜரிடம் ,
"பிரம்மரிஷி விசுவாமித்ரரைப் போல் உண்மை அறிந்து, அதை நம்பிக் கையுடன் கூற என்னால் இதுவரை ஒரு கணமாவது இயன்றதா, இனியாவது இயலுமா? " அப்படி இருக்கும்போது எந்த விதத்தில் நான் திருக்கோளூர் திவ்யதேசத்தில் வசிக்க அருகதை பெற்றவள் நீங்களே சொல்லுங்கள்?'' என்று கேட்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...