வள்ளலார்: J K SIVAN
பயந்த ஸ்வபாவம்..
பயந்த ஸ்வபாவம் என்று நாம் சொல்லும் நபர்கள், தங்கள் உடல், உயிருக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று அஞ்சுபவர்களை. ஆனால் வள்ளளார் வேறுவிதமான பயந்த ஸ்வபாவம் உள்ளவர்.
ஒரு காக்கை, குருவி, பருந்து, ஆந்தை, ஆடு மாடு, பறவை, பூச்சி தினமாக வலியோடு கத்தினாலும் ''ஆண்டவா, அதற்கு என்ன துன்பமோ? என்னால் அதை போக்க முடியுமோ? என்று கலங்குவார், பாவம் அதற்கு என்ன ஆச்சோ என்று பயந்துபோவார். நடுங்குவார். ''என் அப்பா, இறைவனே அவற்றின் துன்பம் உடனே போக்கிடுவாய்'' என வேண்டுவார். . இது கொடிய விஷ நாகத்திற்கும் கூட. அவருக்குத்தான் எல்லா உயிரும் சமமாயிற்றே. அவரது வார்த்தையில் இதை கேளுங்கள்:
'' காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல் செயப் பயந்தேன்
சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ் சகுனம் செய்
வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம்
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் ''
செடி கொடி தண்ணீரின்றி எங்காவது வாடி வதங்கி தலை சாய்ந்ததைப் பார்த்து பதறுவார். ஐயோ என்ன துன்பம் அதன் பசியை போக்க யாருமில்லையா என்று உலகில் எந்த உயிரும் துன்பமுருவதைக் காண சகிக்காத ஜீவ காருண்யர் அவர். ''வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய நெஞ்சம்'' அவருக்கு. நமக்கும் கொஞ்சமாவது அவர் வழியில் போக கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? ஜீவ காருணியத்தைப்பற்றி அவர் கையாலேயே எழுதிய ஒரு சில வரிகள் நம் மனதைத் தொடவில்லையானால் நமது நெஞ்சம் வாடிய எந்த உயிரைப் பற்றியும் கவலையே கொள்ளாது.
அவரது எழுத்துக்களை படியுங்கள்: தெளிவாக இருக்கிறார்:
'' உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர் களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும்.
பசி நீங்க உண்டு சந்தோஷ’த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.''
வள்ளலார் ஒரு ம்ருது பாஷி . உரக்கவே பேசமாட்டார். நம்மை மாதிரி எதையாவது சாப்பிட்டுவிட்டு இடுப்பு வேஷ்டியில் துடைத்துக்கொள்ளும் ரகமல்ல. ஒரு கைக்குட்டை எப்போதும் இடுப்பில் இருக்கும்.. கைககளை வீசி நடக்கவே மாட்டார். கைகளை தொங்க விட்டுக்கொண்டும் நடக்க மாட்டார்.எப்போதும் கைகளை கட்டியபடியே காணப்படுவார். காலும் தலையும் எப்போதும் மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை. ஒரே துணி உடம்பைச் சுற்றி தலையையும் சுற்றி இருக்கும். அதுவும் வெள்ளைத்துணி. காலில் செருப்பு அணிவார்.
எதிரே வரும் யாரையும் முகமோ, நிறமோ உருவமோ எதையுமே பார்க்கமாட்டார். அப்படி அவர்கள் உருவம் கண்ணில் பட்டுவிட்டால் என்னால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டதோ என்ற பயமும் கவலையும் அவரைத் தின்று விடும்.
அவர் பற்றி அவரே சொல்வது: படிக்க கஷ்டமே இல்லை. எளிதில் புரியும் தமிழ்:
கையற வீசி நடப்பதை நாணிக்
கைகளை கட்டியே நடந்தேன்
மெய்யுற காட்ட வெருவி வெண் துகிலால்
மெய்யெலாம் அய்யகோ மறைத்தேன்.
வையமேல் பிறர் தம் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப்பார்த்ததே இல்லை.
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன் ''
இன்னும் சொல்கிறேன்.
No comments:
Post a Comment