Tuesday, December 3, 2019

THINKER




சில தெரியாத தமிழ் வார்த்தைகள்
J K SIVAN
'அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்'' என்று அப்போதெல்லாம் சொல்வார்கள். இப்போது யார் சமைக்கிறார்கள் வீட்டிலே? பாதிபொழுது எங்கோ ஒரு ஓட்டலில் தானே. இல்லையென்றால் வீடு தேடி வரும் SWIGGY, ZOMATO சாப்பாடு. ஆனைவிலை குதிரை விலை. இது போக மீதி பணம் கையில் இருக்குமானால் அது தான் டாக்டருக்கு சொந்தமாச்சே.
முன்னோர்கள் சொன்ன ''அஞ்சு'' மிளகு, உப்பு, கடுகு,சீரகம், புளி, ''மூன்று'' என்பது தண்ணீர், அடுப்பு, நெருப்பு. ஒண்ணுமே தெரியாத பொண்ணு கூட இந்த அஞ்சையும் மூன்றையும் கொடுத்தால் நல்ல சமையல் செய்து விடுமாம் (அக்காலத்தில்).
இட்டலி தோசை பொங்கல் உப்புமா இல்லாத வீடு அப்போதெல்லாம் கிடையாது. ஹோட்டல், fast fo
od என்கிற பெயர்கள் கேள்விப்பட்டதே இல்லை. ஒன்று வீட்டில் சாப்பிடுவோம். இல்லையென்றால் யார் வீட்டிலோ ஏதோ ஒரு விழா, கல்யாணத்தில் தான் சாப்பாடு. ''அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி, ஆயிரம் பொன்னை அரைக்காசாய் ஆக்குகிற வளும் பெண்சாதி.'' இந்த வாக்யத்தின் முற்பகுதி கற்காலத்தையோ முற்காலத்தையோ சேர்ந்தது தான் என்று நினைக்கா தீர்கள். இன்றும் சில வீடுகளில் கணவனுக்கு எவ்வளவு சம்பாதித்தோம் என்று மட்டும் தான் தெரியும். அது எப்படி செலவானது என்று இதைப் படிக்கும் வரை தெரியாது. தெரியப்போவதும் இல்லை. அவனுக்கு ஒன்றாம் தேதியும் முப்பதாம் தேதியும் ஒன்றே. என்றுமே அவன் கையில் காசு இருக்கப்போவதில்லை. சம்பளம் வாங்கிய அன்று சட்டையை கழட்டுவதற்குள் பணத்தை கழட்டிவிடுவாள் குயீன் எலிசபெத். '' அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு, அவங்க ஆறை நூறாக்கும் தகுதி கொண்டவர்களாக இருந்தது ஒரு காலத்தில். இன்னும் சில நிர்மலா சீதாராமன்கள் அப்படி பல குடும்பங்களில் இருப்பது யாருடைய அதிருஷ்டமோ?
குடும்பத்தை பல ஐந்தாண்டு திட்டங்கள் போட்டு அரசாங்கம் போல் இல்லாமல் உண்மையிலேயே வெற்றிகரமாக நடத்தக்கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அத்தகைய இல்லத்தரசிகள் மனைவியாக அமைய அவர்கள் கொடுத்துவைத்தவர்கள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது சரிதான். வீட்டில் சிலருக்கு அடித்த லக்கி ப்ரைஸ் இது . ''ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்கும் அரைக்காசு அம்மன்களை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அதனால் அதைப்பற்றி சொல்லாமலேயே விட்டு விடுகிறேன். பணத்தை மிச்சம் பண்ணாவிட்டாலும் சில வார்த்தைகளையாவது மிச்சம் பிடித்த திருப்தி கிடைக்கும். ''ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வெறு நாளாச்சு.'' என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டது உண்டா? இப்படியும் சிலர் இருக்கிறார்கள். எப்போது எதை செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாத மனிதர்கள் இவர்கள். இவர்கள் சமய சஞ்ஜீவிகள் அல்ல.
சீதக்காதி என்ற ராஜா செத்துப்போனப்புறம் கூட ஒரு புலவருக்கு உதவி செய்தான் என்று படித்திருக்கிறோம். அவனைப்பற்றி தான் ''செத்தும் கொடுத்தான் சீதக்காதி'' என்பார்கள். சமயா சந்தர்பம் தெரியாமல் மனம் போல நடக்கும், வாயை திறந்து பேசும், சிலரால் தான் சம்பவங்கள் அசம்பா, விதங்களாகிறது. சோக மரண செய்திகளுக்கு கூட FB முகநூலில் ''லைக்'' போடும் ஜீவன்கள்.
சில 'திக் விஜயசிங்குகள்'' பலபேர் வீட்டில் இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல சுப்பிரமணியம் சுவாமிகளும் இருக்கிறார்கள். இதையே சற்று மாற்றி வேறு ஒரு பழமொழியாக சொல்வதும் உண்டு. ''ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வெறு நாளாச்சு.'' அது கொஞ்சம் நமக்கு தெரிந்த வழக்கு தானே. அதிர்ஷ்ட கட்டை என்று பெயர் வாங்கிக்கொண்டு திரிபவர்கள் சம்பந்தப் பட்டது.
''நான் எங்கே போனாலும் என் அதிர்ஷ்டம் எனக்கு மின்னாலே அங்கே போய்டறது சார்'' என நொந்து கொள்பவர்கள் . ''அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் சார், ஏதோ அது யதேச்சையாக நடந்திருக்கும். அடுத்த தடவை பாருங்கள் நீங்கள் எடுத்த கார்யம் எல்லாம் ஜாம் ஜாம் என்று நடக்கும். ஜெயம் தான் போங்கள்'' என அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவோம். ''விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சமா'' என்பது நிறைய பேர்களின் வாயில் புரளும் பழமொழி. இது தகுதி இல்லதாவனுக்கு பதவி கிடைத்ததையும் ஒண்ணுமில்லாதவனுக்கு உசந்த மரியாதையும் புகழும் கிடைப்பதை விளக்கும் சொல். இது கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். கஷ்டப்பட்டு படித்து, தட்டு தடுமாறி ஏதோ ஒரு வேலை கெட்டியாக பிடித்துக்கொண்டு நாலு காசு பார்த்து தானும் குடும்பமும் ஒரு வேளை சாப்பிட வழி செய்துகொண்டவர்களுக்கு இது வயிற்றெரிச்சலை கொடுக்கும் பழமொழி. நமக்கு தலையில் இட்டது இவ்வளவு தான் என்று சமாதானம் தேடிக் கொள்ள வேண்டியது தான். எல்லோருமே பப்புவாகவோ தளபதியாகவோ பிறக்க முடியுமா? கொடுப்பினை இருக்கவேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...