Monday, December 2, 2019

VETRI VERKAI




வெற்றி வேற்கை J K SIVAN
அதி வீரராம பாண்டியன்

''கேளும்  நட்பும்  கெட்டோர்க்கு இல்லை''
பணமிருந்தால் தான், வசதியாக இருந்த போது  தான்  எல்லோரும்  அருகில் இருப்பார்கள்.  உறவு எங்கிருந்தோ வந்து முளைக்கும். நண்பர்கள் என்று ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கும்.  எல்லாவற்றையும் இழந்து அந்த மனிதன் வாடும்போது, வறுமை அவனை  வாட்டும்போது,   அவன் தனித்து விடுகிறான்.  அவனுக்கு நண்பர்களோ சுற்றத்தார்களோ எவரும்  அப்போது  கிடையாது. அவர்கள் யாரும் நெருங்குவதில்லை.  இது  உலகியல் . அதிவீரராம பாண்டியன் காலத்திலிருந்து இன்னமும் இந்த பழக்கம் நமக்கு இருக்கிறதே.


''உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா''.
 சுகமும்  துக்கமும்  எப்போதும் ஒருவனை  மாற்றி மாற்றி தான்  அணுகும்.  நிறைய  செல்வம் இருக்கிறவன் எப்போதும் செந்துவந்தனாகவே  இருக்க முடியாது. அதேபோல்  தரித்திரம் பிடித்தவன் எக்காலத்திலும் அப்படியே இருக்க விடாது. காலம் மாறும் . வாழ்க்கை என்பது சக்கரம்.  கீழே இருப்பதும் மேலே இருப்பதும் ஓருவருக்கு சாஸ்வதம் இல்லை. எல்லோருக்கும் இந்த நிலை மாறி மாறி அமைவது தான் இயற்கை.   

குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
 நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.

ஒரு காலத்தில்  நமது தேசத்தில்  பல  ராஜாக்கள் இருந்தார்கள்.  அவர்களது அந்தஸ்து, படை பலம், சக்தி, செல்வம் எல்லாம் கணக்கற்று இருந்தது.  காலப்போக்கில் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.  எல்லாரும் இந்நாட்டு மன்னராகி  ரேஷன் கடையில் நிற்கிறோம்.  ராஜா என்பது  பேரில் தான் என்று ஆகிவிட்டது.  யானை மீது எங்கும் சவாரி,   அமர்வதற்கு  சிம்மாசனம், அதற்கு மேல்  ஒரு  பட்டுத்துணி குடை என்று  டம்ப, ஆடம்பர ராஜாவாக இருந்தவன் ஒருநாள் கையில் கூஜாவில்  கொஞ்சம் தண்ணீரோடு,  நாடிழந்து, பொருளிழந்து, பதவி இழந்து வெயிலில்  காத தூரம் நடை  ராஜா வாக  மெலிந்து இன்னொரு ஊருக்கு  பாதசாரியாக நடந்து போக நேரிடும் என்று அ.வீ.ரா. பாண்டியன் சொன்னது கலியுகத்தில்  கண்கூடு. . 

''சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர்
 அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.


நன்மையையும்  தீமையும்  பிறர் தர வாரா என்பது நமக்கு தெரிந்தது.  ஒரு காலத்தில் சீரும் சிறப்பும்  செல்வமும் நம்மிடம் இருக்கும். பிறகு ஒரு காலத்தில்  அடுத்த வேளை   சாப்பாட்டிற்கு  எங்கே  இலவசமாக காஞ்சி வார்ப்பார்கள் என்று தேடி அலையும்  நிலை வரலாம்.  எப்போதும்  ஒரே நிலையில் தான தர்மங்கள் செயது எளிய வாழ்க்கை நடத்துபவனுக்கு  இந்த  துன்பம்   இல்லை  அல்லது  குறைச்சல்.  அகலக்கால்  வைக்காதே  என்று பெரியவர்கள்  அடிக்கடி ஞாபகப்படுத்துவது இதை தான். 
அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்   அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்.முன்பெல்லாம்  பகல் பிச்சை, ராப்பிச்சை என்று  வீடு வீடாக வந்து  உணவு கேட்பார்கள்.  அம்மா தாயே  என்ற குரல் தான் கேட்கும்.  இப்போது இல்லை.  கால்லிங் பெல் அடித்து  காசு கேட்கும்  காலம்.  ஒரு ரூபாய்  ரெண்டு ரூபாய் போட்டால்  அவர்களுக்கு வரும் கோபத்தில்  முடிந்தால் நம்மை  பார்வையாலேயே கொளுத்தி விடுவார்கள்.   அதி வீரராம  பாண்டியன் இந்த  பொன்மொழியை என்ன சொல்லவருகிறான் தெரியுமா.  இப்படி அடுத்து வேளைக்கு  உணவு இல்லாதவர்கள் கூட , இரந்துண்டு வாழ்வோரும் ஒருநாள்  நம்மை ஆளும்  அரசர்களாக, இந்தக்கால வழக்கம் படி  மந்திரிகளாகவும் ஆகலாம்.  

குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினும் அழிவர்.

மலைபோல்  சொத்து செல்வம்,  பரம்பரை பரம்பரையாக இருந்தாலும்,  ஒருநாள்  களி தின்பதை  பார்க்கிறோம், படிக்கிறோம். சிறந்த  ஏரோபிளேன் கம்பனிக்கு சொந்தம் கொண்டாடிவிட்டு, , குடி போதை வியாபாரியாக பேர் வாங்கி, ,வைர வியாபாரியாக உலகம்  எல்லாம் கூட புகழ் பெற்றாலும்,    ஏதோ ஒரு பிளேனில் ஏறி சத்தம்போடாமல்  எங்கோ  சென்று  பிடிபடாமல்  ஏன் ஒளிந்துகொள்ளவேண்டும்.  விதி வலியது. மேலே சொன்னது தான்.   இவர்களெல்லாம்  அ.வீ. ரா. பாண்டியன் காலத்திலும் உண்டு போல் இருக்கிறது. 


 செய்வன  திருந்த செய்து, நியாயம் நேர்மை, மனசாட்சியை மதித்து எளிய வாழ்க்கை நடத்தும் எத்தனையோ  பேரையும் பார்க்கிறோம். மதிக்கிறோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...